வழக்கமான வெண்பா – கிரிக்கெட்

வழக்கமான பல்லவிதான். வெண்பாவில் எதையும் எழுதலாம். சந்தத்தோட எழுதினா படிக்க நல்லா இருக்கும். எளிமையா எழுத முடியும். கரடு முரடா எழுத வேண்டாம். என்னடா இது திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சான்னு பார்க்காதீங்க. 

இவ்வளவு நாள் தியரியா சொல்லிக்கிட்டு இருந்ததுக்கு இன்னிக்குப் ப்ராக்டிகல் டெஸ்ட் வெச்சாச்சு. வெச்சது அண்ணன் சொக்கன். நேற்று அவர் போட்டிருந்த பா பதிவு கம்பனின் ஒரு வெண்பா. 
 
வடக்குத் திசைபழனி; வான்கீழ்தென் காசி;
குடக்குத் திசைகோழிக் கோடாம்; கடற்கரையின்
ஓரமோ தெற்காகும்; உள்எண் பதின்காதம்
சேரநாட்டு எல்லையெனச் செப்பு
 
சேர நாட்டின் எல்லைகளை ஒரு சர்வேயர் போல சொல்லி இருக்கின்றார். வடக்கு எல்லையாகப் பழனி, கிழக்கில் தென்காசி, மேற்கில் கோழிகோடு, தெற்கில் கடல் என எண்பது காத அளவில் உள்ள நிலப்பரப்பு சேர நாடு என்பது இந்த வெண்பாவின் பொருள். 
கொஞ்சம் ரேண்டாமா இருக்கு. இன்னிக்கு இருக்கிற கேரளாவை வெச்சுப் பார்த்தா வட எல்லை கோழிகோடுன்னு சொல்லலாம். இன்னிக்கு கோழிகோடுக்கும் வடக்கே (வடமேற்கே) ரொம்ப தூரத்திற்குக் கேரளா  இருக்கு. கிழக்கில்தான் தென்காசியும் இருக்கு, பழனியும் இருக்கு. ஒண்ணு வட கிழக்கு இன்னும் ஒண்ணு தென்கிழக்குன்னு சொல்லலாம். மேற்கு திசை பூரா கடல்தான். தென் திசை எல்லை எதுவரைன்னு தெரியலை. அதையும் கடல்ன்னு எடுத்துக்கிட்டா கன்யாகுமரி கிட்ட வந்து முடியும். வரைபடத்தில் பார்த்தா  கிட்டத்தட்ட கீழ இருக்கிற மாதிரி தோணுது. 
 
 
இதில் எப்படி பழனி வடக்கு, தென்காசி கிழக்கு, கோழிகோடு மேற்கு, கடல் தெற்குன்னு சரியாப் புரியலை. கம்பராமாயணத்தில் இருந்து பல பாடல்களைப் படிச்சு இருக்கேன், அதுல இருக்கும் அழகான ஓசை நயம் இதில் இல்லை. இந்த மாதிரி தனிப்பாடல்களில் இருப்பது எல்லாம் ராமாயணம் எழுதின கம்பர் எழுதினதுதானா இல்லை வேற யாராவது எழுதி இருக்கலாமான்னு சந்தேகம் உண்டு. இந்த மாதிரி பாடல்களைப் பார்க்கும் போது அந்த மாதிரி சந்தேகப்படறது சரிதான்னு தோணுது. 
 
இது பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த போது சொக்கன், இன்னிக்கு என் அலுவலகத்தில் விசா எடுக்க இந்த டாக்குமெண்டெல்லாம் வேணும்ன்னு ஒரு மெயில் வந்தது. அதை வெண்பாவா மாத்திப் பார்க்கலாமான்னு கேட்டாரு. Visa application, invitation letter, employment letter, itinerary, color photographs என ஒரு பட்டியலை அடுக்கினார். 
 
பழுதிலா பாரம் பலகலர் போட்டோ
எழுத்தில் அழைப்பும் எஜமானர் ஒப்பும்
கொழுத்தவுன் வங்கிக் கணக்கும் தரவே
பழுத்திடும் வீசா பார்
 
இப்படி எழுதின உடனே சொக்கனும் ரொம்ப சந்தோஷமாகிட்டாரு. சரி எழுத ஆரம்பிச்சதுதான் ஆரம்பிச்ச, இன்னும் ஒரு டாபிக் தரேன் எழுதுன்னு சொல்லி டயட் பண்ணறது பத்திப் பேசினார். சட்டுன்னு அதையும் வெண்பா வடிவத்தில் எழுதியாச்சு. 
 
கோப்பையில் கஞ்சிதான் காலை உணவாக
ஆப்பையில் சோறு அதுபோதும் நண்பகலில்
காப்பி கசப்பாய் குடிப்பாய், இரவினில்
சாப்பிட தாலுமிரு சப்பாத்தி என்றிருத்தல்
மாப்பிள்ளை ஆகும் மருந்து
 
ரெண்டு வரி குறள் அல்லது நாலு வரி வெண்பான்னே எழுதி பழகிட்டு இன்னிக்கு ஐந்து வரியில் பஃறொடை வெண்பா எழுதினது எனக்கே ஆச்சரியம். அதுவும் ஐந்து வரியிலும் எதுகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தால் சிறப்பு அவ்வளவுதான். ஆனா முதல் நாலு வரிகளில் அதுவே அழகா வந்திட, மாப்பிள்ளைன்னு சொக்கனைக் கூப்பிட்டு ஐந்தாவது வரியையும் சரி பண்ணிட்டேன். 
இந்த மேட்டர் பத்தி இன்னும் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்த பொழுது டயட் பண்ணியாச்சு எக்ஸர்சைஸ் பண்ண வேண்டாமான்னு அடுத்த டாபிக்கை இழுத்தார். அவர் சொன்னதை வெச்சு அடுத்ததா எழுதின வெண்பா
 
ஜிம்மிலே ஓடிபின் ஜம்மென்று கண்டதையும்
சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
தப்பான வாழ்வைத் தவிர்
 
இப்படி எல்லாத்தையும் வெண்பாவில் எழுத முடியுது என்பது சந்தோஷமான விஷயம்தான். கொஞ்சம் வெண்பாம் விடுத்து வெண்பாவா எழுத ஆரம்பிக்கணும்.
 
ooOoo
 
 
வழக்கம் போல கிரிக்கெட்டைப் பத்தி எழுதலாம்ன்னு பார்த்தா படுபாவிப் பசங்க அளவே இல்லாம சொதப்பறாங்க. முதல் டெஸ்ட்டில் வழியுவாங்கன்னு எதிர்பார்த்ததுதான். அதுக்கு ஏத்த மாதிரி முதல் இன்னிங்க்ஸில் கொஞ்ச நேர பேட்டிங் தவிர மீதி எல்லாம் வழிசல்தான். 
 
எதிர்பார்த்ததை விட நல்ல பந்து வீசினாங்க. ஆனா முக்கியமான விக்கெட்டுகளை சுலபமா எடுக்கிற பசங்க ஏன் கடைசி 4-5 விக்கெட் எடுக்க இவ்வளவு திணறணும்ன்னு புரியலை. இதுவே நம்ம ஆடும் போது கடைசி நாலு விக்கெட் சேர்த்து கூட 25 ரன் அடிக்கறது இல்லை. ஆனா அவங்க 100 ரன் அடிச்சுடறாங்க. 
 
சரி, முதல் மேட்ச்தான் அப்படிப் போச்சு. ரெண்டாவது மேட்ச் சிட்னியில். சிட்னி மைதானம் இங்க சச்சின் அடிப்பாக, லெட்சுமணன் அடிப்பாகன்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. மொத ஓவரிலேயே முட்டை போட்டுட்டு கம்பீர் போனான். அப்புறம் வழக்கமான ஊர்வலம்தான். மொத்தமா சேர்த்து கூட 200 ரன் தேறலை. 
 
அடுத்து அவங்க ஆட ஆரம்பிச்ச போது சாஹீர் மூணு விக்கெட் எடுத்தானேன்னு நிமிர்ந்து உட்கார்ந்தேன். ஆனா க்ளார்க்கும் பாண்டிங்கும் ஆடி ஆடி ஆடி ஆடி மவனே சாவடிச்சுட்டாங்க. பேட்டிங் அடிக்க வேண்டிய நூறை எல்லாம் நம்ம மக்கள் பௌலிங்கில் எடுக்கறாங்க. பார்ம்ல இல்லாதவனுங்க எல்லாம் இப்போ பார்முக்கு வந்தாச்சு. பாண்டிங் ரெண்டு 50 போன மேட்ச்சில், இப்போ நூறு. க்ளார்க் மட்டும் 250 ரன் அடிச்சாச்சு, நாம எல்லாரும் சேர்ந்து கூட 200 தாண்டலை. ஹஸ்ஸி அவன் பங்குக்கு ஒரு 50 அடிச்சுட்டு நின்னுக்கிட்டு இருக்கான். எகொஇச! 
 
பாதி ராத்திரி தூக்கம் முழிச்சு இந்த அடி வாங்கறதைப் பார்க்கணுமா? இதை எல்லாம் விட்டுட்டு ரஞ்சி ட்ராபி பார்க்க வேண்டியதுதான். காலிறுதி போட்டிகள் நடக்குது. மூணு நாள் ஆட்டம் முடிஞ்சாச்சு. இன்னும் ஒரு நாள் இருக்கு. ஹரியானா கர்நாடகாவை ஏற்கனவே தோற்கடிச்சாச்சு. மும்பை, ராஜஸ்தான், தமிழ்நாடு முதல் இன்னிங்க்ஸ் லீட் எடுத்தாச்சு அதனால இவங்கதான் அரையிறுதிக்குப் போவங்க. இந்த முதல் இன்னிங்க்ஸ் லீட் எடுத்தாப் போதும் ரூல் ரொம்ப கடி. ரெண்டாவது இன்னிங்க்ஸுக்கு மதிப்பே இல்லாமப் போகுது. 
அரையிறுதிக்கு தகுதி பெற இருக்கும் நாலு அணிகள் தமிழகம் வலுவுள்ளதாகவே இருக்கு. குறிப்பா அதோட பேட்டிங் பலம். வழக்கம் போல அரையிறுதியில் தோத்துப் போகாமல் இந்த முறையாவது தமிழக அணி ரஞ்சி கோப்பையை கைப்பற்றுவாங்களான்னு பார்க்கலாம். 
 
ooOoo
 
தமிழோவியம் ஆரம்பிச்சு 10 வருஷம் ஆகுதாம். கணேஷ் மீனாவுக்கு வாழ்த்துகள். முன்னாடி எல்லாம் ஹார்ட்வேர் வாங்கினா  கூட இலவசமா சாப்ட்வேர் தருவாங்க. ஆனா இன்னிக்கு ஹார்ட்வேர் விலை எல்லாம் அதால பாதாளத்தில் இருக்கு. சாப்ட்வேருக்குத்தான் விலை. அது மாதிரி பத்திரிகை அது அச்சுப் பத்திரிகையா இருந்தாலும் சரி, மின் பத்திரிகையா இருந்தாலும் சரி, ஆரம்பிச்சு நடத்த பிரச்சினையே இல்லை. ஆனா எழுதி வர கண்டென்ட் கிடைக்கறது கஷ்டம்தான். 
காசு குடுத்து கண்டெண்ட் வாங்கற பத்திரிகைகாரனுங்களுக்கே மேட்டர் மாட்ட மாட்டேங்குது. அப்படி வரதும் தரமா இல்லை. ஆனா எந்த விதமான சன்மானமும் இல்லாமல் தரமான கட்டுரைகளை கதைகளை தொடர்ந்து பத்து வருஷம் வெளியிட்டு வராங்கன்னா அது சாதாரண விஷயம் இல்லை. அதே மாதிரி மத்த இடங்களில் இருக்கும் அளவு முக்கியத்துவம் இங்க சினிமாவுக்கும் இல்லை. இவ்வளவு பேர் எப்படி முன்வந்து இவங்களுக்கு எழுதறாங்க? மீனா, கணேஷ் ரெண்டு பேரும் எல்லாரோடவும் பேசிப் பழகி நல்லவிதமா நட்பு பாராட்டறதுதான் முக்கியமான காரணம்ன்னு நினைக்கிறேன். 
 
எஸ் ரா, பாரா தொடங்கி எவ்வளவு பேர் எழுதி இருக்காங்க. அதுவே ஒரு பெரிய விஷயம்தான். இங்க நானும் நாலு வார்த்தை எழுதி இருக்கேன்னு நினைச்சா கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு. வாழ்த்து சொல்லி ரெண்டு கட்டுரை குடுத்தாச்சு. ரெண்டையும் முன்னாடியே போட்டுட்டு இன்னும் ஒண்ணு கேட்கறதுதான் கணேஷோட சாமர்த்தியம். 
இன்னமும் சிறக்க வாழ்த்துகள் !

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “வழக்கமான வெண்பா – கிரிக்கெட்

  • January 8, 2012 at 5:18 am
    Permalink

    இந்த முதல் இன்னிங்க்ஸ் லீட் எடுத்தாப் போதும் ரூல் ரொம்ப கடி. ரெண்டாவது இன்னிங்க்ஸுக்கு மதிப்பே இல்லாமப் போகுது. //
    பேசாம ஒரே இன்னிங்க்ஸ் தான் ன்னு சொல்லிடலாம். இந்தியா ஆசீ டேஸ்ட் எல்லாம் ௪ நாளை தண்டலை என்கிறது எவ்வளோ கன்சிஸ்டன்ட்டோ அப்படி இதிலேயும் ரெண்டாவது இன்னிங்க்ஸ் ஆடுறதில்லை…..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 4, 2012 @ 2:18 pm