யாதுமானவள் உருவான கதை

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அனாமிகா சிறுகதையை ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறீர்களா? பிறப்பையும், இறப்பையும் பற்றி தத்துவார்த்தமாக கேள்வி எழுதும் கவிதைப் பெண் ஒருவள், அந்தக் கவிதையை எழுதிய மறுநாள், மெரினா கடற்கரையில் சுனாமியில் சிக்கி அலையோடு அலையாக மறைந்துவிடுகிறாள். ஒரு கவிதை போல ஆச்சரியப்படுத்தி திடீரென மறைந்த அந்தப் பெண்ணின் பெயர் அனாமிகா. அனாமிகா என்றால் பெயரில்லாதவள் என்று பொருள். பெயரில்லாதவள் திடீரென ஒரு சுனாமி அலையில் அவளே இல்லாமல் போகிறாள். இதில் நெகிழ வைப்பது என்னவென்றால் அனாமிகா கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவள் ஒரு நிஜப்பெண். 

ஃபேஸ்புக் வழியாக நண்பரான திரு.பாலாசிங், இந்தியா வந்திருந்தபோது, கதை கவிதை என இலக்கிய நிமிடங்களில் கரைந்துகொண்டிருந்தோம். அப்போது அவர் திடீரென சுஜாதாவின் அனாமிகா படிச்சிருக்கீங்களா என்றார். ஒரு முறைக்கு இரு முறை சுஜாதா அனாமிகாவை தனது வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததால் எனக்கு அனாமிகாவை தெரிந்திருந்தது. அந்தப் பெண்ணின் நினைவுகள் சுவடுகளாகவே எனக்குள் பதிந்திருந்தது. அதனால் ஒரு கவிதை தரும் பரவசம் போல வாழ்ந்து மறைந்த அந்த இளம் பெண்ணை தெரியுமே என்றேன்.  பாலாசிங் ஒரு கணம் தாமதித்து, அந்தப் பெண் என்னுடைய மகள் என்பது தெரியுமா என்றார்.
 
மனதுக்குள் பேரிடிகளை அடக்கிக் கொண்ட அமைதியை தனது பார்வைகளில் தேக்கிக் கொண்டு என் மகள் தான் அனாமிகா என்றார். அவருடைய சின்னச் சின்ன வார்த்தைகளில் இழப்பின் வலிகள் மிகுந்திருந்தன. தேவதை போன்ற ஒரு மகளை, தத்துவமாக வாழ்க்கையை நேசிக்கத் துவங்கியிருந்த மகளை ஒரு முடிந்து போன கவிதையாக அவர் தனது மனதில் சுமந்திருந்தார். 
 
அவருடைய பார்வைகளை உற்று நோக்கிய அந்த ஏதோ ஒரு கணத்தில் தான் எனக்குள் யாதுமானவள் பிறந்திருப்பாள் என நினைக்கிறேன். அனாமிகா என்று பெயரிட்டு அடுத்த நாள் ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்தேன். அது அனாமிகாவைப் பற்றிய கதை. அதனால் அனாமிகாவின் தந்தையே அதில் நடித்தால் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று, அவரிடம் சம்மதம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். ஆனால் வார்த்தைகளில் சிக்காத கவிதைகள் போல, அவரை வைத்து படமாக்கும் சந்தர்ப்பங்கள் நழுவிக் கொண்டே இருந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் லண்டன் திரும்ப வேண்டியதாகிவிட்டது. 
 
எனக்கு அவருக்கு மாற்றாக யாரையும் சிந்திக்க முடியவில்லை. என்னுடைய சித்தப்பா, திரு.ஐ.எஸ்.சோலை என் மனதிற்குள் உட்காரும்வரை. அனாமிகா ஸ்க்ரிப்டை அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னபோது, வாசித்து முடித்தபின் கண் கலங்கியிருந்தார். கதாபாத்திரத்துக்குள் அவர் மூழ்கிவிட்டார் என்பது, அவருடைய கலங்கிய கண்கள் எனக்குச் சொன்ன செய்தி. உடனே அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அனாமிகா யாதுமானவள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாள்.  இப்படித்தான் யாதுமானவள் உருவானாள்.
 
 
முதல் அங்கீகாரம்
 
1TakeMedia என்ற நிறுவனம் நடத்திய குறும்பட போட்டியில் டாப் 8 படங்களில் ஒன்றாகத் தேர்வாகியது.
 

நடிப்பு பயிற்சி

எனது தந்தை ஐ.எஸ்.ஆர் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால், நாடக ஒத்திகைகளை பல முறை வேடிக்கை பார்த்திருக்கிறேன். ஒத்திகையின் போது மெருகேரும் காட்சிகளும, வசனங்களும் என் சிறு வயது முதலே என்னை ஈர்த்தது. எனவே என்னுடைய ஒவ்வொரு பட முயற்சியிலும், டெலிவிஷன் நிகழ்சிகளில் கூட ஒத்திகைக்கு முக்கியத்துவம் தருகிறேன். யாதுமானவள் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு காருக்குள்ளும், கடற்கரையிலும் நடக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டு பிறகுதான் படப்பிடிப்பே நடந்தது. படத்தில் கார் ஓட்டும் காட்சிகள் கூட ஒரு சிறிய அறையில் பயிற்சி செய்யப்பட்டு அதன் பின்தான் படமானது. இதன் மூலம் காமிரா கோணங்கள், நடிப்பு என அனைத்தும் ஓரளவுக்கு முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதால் படப்பிடிப்பு எளிதாக நடந்தது. ஒத்திகைக் காட்சிகளின் வீடியோ இங்கே

 
நெடுஞ்சாலைகளில் நடந்த கார் தொடர்பான காட்சிகள்தான் மிகவும் சவாலாகவும் இருந்தன. விரையும் லாரிகள், பஸ்கள், கார்களுக்கு இடையில் நின்று கொண்டு படப்பிடிப்பை நடத்துவது ஆபத்தானதாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது.
 
படத்தின் காட்சிகளில் தனிமை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக எக்கச்சக்கமாக மெனக்கெட்டோம். குறிப்பாக கடற்கரை காட்சிகள். தனிமை பிரதிபலிக்க வேண்டும் என்பதால் ஒரு பெரிய கடற்கரையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் படப்பிடிப்பு நேரத்தை விட, ஆட்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பிண்ணனிக்கு வெகுநேரம் காத்திருக்க வேண்டியதிருந்தது. அதனால் குறைவான மக்கள் நடமாடும் கடற்கரைப் பகுதியை தேடித் தேடி படப்பிடிப்பை நடத்தினோம். பெரும்பாலான காட்சிகள் காலை 5 முதல் 9 மணி வரையே படம்பிடிக்கப்பட்டது.
 
டிஜிட்டல் தொழில்நுட்பம்
 
யாதுமானவள் Canon 7D என்ற டிஜிட்டல் காமிராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்டது. Canon 7D ஒரு டிஜிட்டல் வரப்பிரசாதம். ஓரிரு காட்சிகளில் ரிஃளக்டர்கள் தவிர, வெளிச்சத்திற்காக விளக்குகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. காருக்குள்ளே படமாக்கப்பட்ட காட்சிகளும், விளக்குகள் துணையின்றிதான் எடுக்கப்பட்டன.
 
நம்பிக்கை
 
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த ஒலிக்கலவை உள்ளிட்ட பல பரிவுகளில் யாதுமானவள் 2011 தேசிய விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் யாதுமானவளுடன், ISR Ventures நிறுவனமும், அதன் குழுவினரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
 
செல்வகுமார் – இயக்குனர் (நான்தான்)
 
யாதுமானவள் படத்தில் இயக்குனர் பொறுப்பு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக் கதை மற்றும் கதை என பல தளங்களில் செயல்பட்டிருக்கிறேன்.
 
விவேக் நாராயண் – இசையமைப்பாளர்
 
எந்த ப்ராஜக்டை யோசித்தாலும் அதற்கான இசையையும் சேர்த்தே யோசிப்பது எனது பாணி. கதை திரைக்கதையானதும் அடுத்ததாக நான் நாடுவது இசையைத்தான். எனக்கு இந்த விஷயத்தில் இவர்தான் என் க்ரியேட்டிவ் துணை. எனது பள்ளிக் காலநண்பர்.  
 
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர். எனது அனைத்து தயாரிப்புகளுக்கும் இவரே இசை. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பல இசையமைப்பாளர்களுக்கு கண்டக்டராக இருந்திருக்கிறார். தற்போது ஸ்ரீகான குகா என்ற இசைப்பள்ளி நடத்தி வருகிறார் மாணவர்களுக்கு கர்நாடக சங்கீதம் மற்றும் வெஸ்டர்ன் கீ போர்டு பயிற்சி அளிக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும், டிஜிட்டல் இசை நுட்பத்திலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். 
 
யாதுமானவள், திரைப்படத்தில் இவருடைய பங்களிப்பு அபாரம். 
 
ஐ.எஸ்.சோலை
 
என் தந்தை ஐ.எஸ்.ஆரின் இளைய சகோதரர். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் தூண். அவருடை ஊக்கம் மற்றும் துணைதான் தொடர்ந்து புராஜக்டுகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள உதவுகிறது. மாநகர போக்குவரத்து துறையில் பணிபுரிந்தவர். பணிபுரியும்போதே மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை 500 முறையாவது மேடை ஏறியிருப்பார். கிட்டத்தட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் சிறு சிறு கதாபாத்திரங்களில் தனது காமெடி நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். 
 
யாதுமானவள் அவருடைய இன்னொரு பரிமாணம். யாதுமானவள் படத்தில் மிகச் சிறப்பான குணச்சித்திர நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். குணச்சித்திர வேடம் இதுவே அவருக்கு முதல் முறை.
 
அன்பு
 
குழந்தைகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தி வரும் இளைஞர். யாதுமானவள் இவருக்கு முதல் படம். 

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “யாதுமானவள் உருவான கதை

 • February 16, 2012 at 9:33 pm
  Permalink

  யாதுமானவள் அவருடைய இன்னொரு பரிமாணம். யாதுமானவள் படத்தில் மிகச் சிறப்பான குணச்சித்திர நடிப்பை வெளிக் கொண்டு வந்திருக்கிறார். குணச்சித்திர வேடம் இதுவே அவருக்கு முதல் முறை.

  …….ஒரு சிறந்த குணசித்திர நடிகரை அறிமுகப்படுத்தியதற்கு , தனி பாராட்டுக்கள்!

  …..யாதுமானவள், உருவான கதை – மனதில் ஒரு தாக்கத்தை கொண்டு வந்தது.

  Reply
 • February 15, 2012 at 11:00 pm
  Permalink

  வணக்கம் நிரஞ்சன்,
  நீங்கள் சொல்வது சரியே… கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பாலாவின் முழுப்பெயர், பாலசிங்கம் சுகுமார்.

  Reply
 • February 15, 2012 at 6:22 am
  Permalink

  உங்கள் யாதுமானவள் பற்றி அறிந்தேன்… வாழ்த்துக்கள்…
  ஆனால் அந்த உண்மைச்சம்பவம் நடைபெற்ற இடம், மற்றும் காபாத்திரங்களைப்பற்றிய செய்திகள்தாம் கொஞ்சம் நெருடலாய் இருக்கின்றன..
  இந்த நிகழ்வு நடந்த இடம் இலங்கையில் மட்டக்களப்பு எனும் இடம்…….. தந்தை பெயர் சுகுமார், இப்பொழுது Londonஇற்கு குடிபெயர்ந்திட்டவர்கள்….

  மேலும் தகவல் பெற ஆர்வமாயின் அறியத்தர ஆர்வமுடன்…

  நிரஞ்சன்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 3, 2012 @ 10:45 am