சிவ பூஜையில் கரடி

ஐநூறு டாலர் கொடுத்து வாங்கிய ஐ-பேட் அல்லது அடுத்த மாதம் வரலாம் என்று சொல்லப் படுகிற ஐ-பேட்-3, அதன் மீது, சர் என்று குழந்தை கார் ஒட்டினால்! கொரில்லா கிளாஸ் தான் என்றாலும், கார் ஒட்டுவதா என்று கத்த தேவையில்லை.அச்சோ என்று அலறவும் கூடாது.  ஏன் என்றால் இந்தக் காரில் கீறல் உருவாக்காத டயர் இருக்கிறது. இந்தக் கார் பொம்மை, ஐ-பேட் மீது ஒட்டுவதற்கு என்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டது என்று சொல்கிறது ஹாட்வீல்ஸ் பிராண்ட் பொம்மைக் கார்கள் செய்யும் மாட்டெல்(Mattel)  கம்பெனி.

என்ன செய்ய, பேஸ்புக்கில் மீன் வளர்க்கும் தலைமுறையிடம் நாய் பொம்மை விற்க பேஸ்புக் தான் வழி செய்கிறது. ப்பூ(Boo) என்ற பொமரனியேன் பொம்மைக்கு பேஸ்புக்கில் முப்பது லட்சம் இரசிகர்கள். இன்னும் சில மாதங்கள் கழித்து விற்பனைக்கு வரவிருக்கும் அந்த பொம்மைக்கு இப்பொழுதே ஆன்லைனில் ஆர்டர் செய்து தேவுடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
டெக்னாலஜியை மார்க்கெட்டிங்கிற்கு மட்டும் பயன்படுத்தினால் போதாது. ஏன் என்றால் ஜி.ஐ ஜோ,(G.I.Joe) பார்பி(Barbie) எல்லாம் கேட்ட குழந்தைகள் இன்று விளையாட ஐ-போன் தான் வேண்டும் என அடம் பிடிக்கின்றன. இந்த உண்மையை பொம்மைக் கம்பெனிகாரர்கள் நன்றாக புரிந்துக் கொண்டு இருக்கிறார்கள். விளைவு, சாதா பொம்மைகளை சாவிலிருந்து காப்பாற்ற, சாப்ட்வேர் சாப்பாடு போட்டு, சூப்பர் பொம்மைகளாய் மாற்ற மல்லுக் கட்டி கொண்டு இருக்கின்றார்கள். வீடியோ கேமில் இருக்கும் நிழல் பொம்மைகள் போலவே நிஜ பொம்மைகள். அவற்றை பிளே ஸ்டேஷனிலோ (Play Station) அல்லது எக்ஸ் பாக்ஸிலோ(X-Box) இணைத்தால் உயிருள்ள பொம்மையாகிவிடும். பேட்டரி கூடத் தேவையில்லை என்று அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
 
பொம்மைகள் இப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் காதலிக்கு பெரிய டெடி பியர் வாங்கிக் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டிய நிலமை ஏற்படலாம். பின்னே, ஆளுயர கரடி பொம்மையைப் பார்த்து, “ச்சோ ஸ்வீட்” என்று சொல்லி ஆனந்த பரவசத்தில் கட்டியணைக்க (கற்பனை வேண்டாம், கட்டியணைப்பது பொம்மையை), பதிலுக்கு பச்சக் என்று கன்னத்தில், உம்மாவை கரடி கொடுத்து விட்டால்! அப்புறம் நிஜமாகவே சிவபூஜையில் கரடி தான்…
 
oooOooo
 
விளையாட்டு சமாச்சாரம் ஒரு பக்கம் இருக்கட்டும். வியாபார உள்குத்து விவகாரங்களை எட்டிப் பார்ப்போம். ஆப்பிள் கூகிள் குடுமிப்பிடி சண்டைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை, மக்கள் அதற்கு நிகரான ஆரக்கிளுக்கும்(Oracle), சேப்புக்கும்(SAP) நடக்கும் வாய்க்கால் தகராறுகளுக்கு கொடுப்பதில்லை. 
 
போன மாதம் தான் ரைட்நவ்(Right Now) என்ற கஸ்டமர் சர்வீஸிற்கு உதவும் சாப்ட்வேர் தயாரிக்கும் கம்பெனியை 1.5 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது, ஆரக்கிள். இந்த மாதம் டேலீயோ(Taleo) என்ற வேலைக்கு ஆள் எடுக்க உதவும் சாப்ட்வேர் கம்பெனியை 1.9 பில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறது.அடுத்த மாதம், சம்பளம் போட உதவும் அல்டிமேட் சாப்ட்வேர் (Ultimate Software) கம்பெனியை வளைத்து போடும் என பெட் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.
 
எல்லாம், சமீபத்தில், சேப் நிறுவனம், வேலைக்கு ஆள் எடுக்க உதவும் சாப்ட்வேர் கம்பெனியான சக்ஸ்ஸ்பேக்டர்ஸை 3.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியதற்கு பதிலடி தான் என்கிறார்கள். 
குடி வெறி போல் ஏன் இந்த கம்பெனி வெறி இவர்களுக்கு? எல்லாம் மேகம் செய்யும் மாயம் தான். இனிமேல் கிளவுட் தான் கிங், சாப்ட்வேர், சாப்ட்வேராக இல்லாமல் சர்வீஸாகத்தான் விற்கப் படும் என்ற நிலைமை. அப்படி ஆகி விட்டால், சாப்ட்வேரை லைசன்ஸ் செய்து, கம்பெனிகளை கொத்தடிமையாக வைத்திருக்கும் தாதா பதவி பறி போய் விடும் என்ற பயம் தான், ஆரக்கிளுக்கும் சேப்பிற்கும்.
 
அதுவும் அந்த பதவி சேல்ஸ்போர்ஸ்.காம்மிற்கு(Salesforce.com) போய் விடுமோ என்ற கிலி ஆரக்கிளின் லேரி எல்லீசனுக்கு(Larry Ellison) கொஞ்சம் அதிகம். பத்து வருடங்களுக்கு முன்னர் ஆரக்கிளிலிருந்து விலகிச் சென்ற மார்க் பெனிஃப் (Marc Benioff) என்பவர் ஆரம்பித்த கம்பெனி தான் இந்த் சேல்ஸ்போர்ஸ்.காம். ஆரம்ப காலத்தில் இந்தக் கம்பெனியில் எல்லீசன் முதலீடு எல்லாம் செய்திருந்தார். ஏன் அதில் போர்டு டைரக்டராக கூட இருந்தார். ஆனால் ஆரக்கிள் நம்முடன் போட்டி போடுகிறது என்ற நினைத்த மார்க், எல்லீசனை போர்டு டைரக்டர் பதவியை விட்டு போகச் சொல்லி இருக்கலாம். ஆனால் தூக்கி விட்டார்.
 
பில்கேட்ஸ்-ஸ்டீவ் ஜாப்ஸ் சண்டைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை, இன்றும் தொடரும் மார்க்-எல்லீசன் சண்டைகள்.
 
oooOooo
 
ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இல்லை என்றாலும் அவரைப் பற்றிய செய்திகள் இன்னும் பரபரப்பை உண்டாக்கத் தவறுவதில்லை. வால்ஸ்டீரிட் ஜர்னல் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரை பற்றிய 191 பக்க விசாரணை ரிப்போர்ட்டை வெளியிட்டிருக்கிறது எஃபிஐ.(FBI) அதில் அவர் டிரக்ஸ் சாப்பிடுவார். காரியம் ஆக எது வேண்டுமானாலும் செய்வார் என்று அரதப் பழசான செய்திகள். இதை எல்லாம் கண்டுபிடிக்க எஃபிஐ தேவையா என்ன. ஆனாலும் இதை பரபரப்பு செய்தியாக்கியது மீடியா.
 
பொதுவாக ஆப்பிளின் இமேஜை பாதிக்கும் செய்திகள் எதுவும் வராது. அப்படியே வந்தாலும் அதிரடியாய் செயலில் இறங்கி கெட்ட செய்திகளை காணாமல் போகச் செய்து விடுவார்கள். ஆனால் இந்த முறை கொஞ்சம் சறுக்கி விட்டது, ஆப்பிள். சைனாவில் தொழிலாளர்களை சுரண்டி தயாரிக்கப் படும் ஆப்பிள் பொருட்களை வாங்க வேண்டுமா. வேண்டாம். நாம் எல்லாம் நல்லவர்கள். இந்த அநியாயத்திற்கு, அநீதிக்கு எதிராக போராட வேண்டாமா, ஆப்பிள் பொருட்களை வாங்கக் கூடாது என்று எல்லாம் கோஷம் கிளம்பி நாளாயிற்று.
 
தவறுகளே நடக்கவில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அங்கே இங்கே ஒரு சிலது நடக்கிறது. ஆனால் அந்த விதிமீறல்களை எல்லாம் நாங்கள் கண்டு பிடித்து வெளிப்படையாக எங்கள் வருடாந்திர ரிப்போர்ட்டில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம் இனி மாதா மாதம் வெப்சைட்டிலும் போடுவோம் என சொல்லி இருக்கிறார், ஆப்பிள் தலைவர் டிம் குக்.(Tim Cook) மேலும் சைனா பேக்டரிகளை மேற்பார்வையிட குழு எல்லாம் போய் இருக்கிறது என்று எல்லாம் சொல்லி இருக்கிறார்.
 
டிம் குக் சொல்லியதை விட கவனிக்க வேண்டியது, இதை எல்லாம் அவர் சொல்லிய இடம். கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நடத்திய ஒரு முதலீட்டாளர்கள் மாநாட்டில். ஸ்டீவ் ஜாப்ஸூக்கு இப்படியான மாநாடு, முதலீட்டாளர்கள் என்றாலே ஆகாது. என் கம்பெனியில் முதலீடு தானே செய்து இருக்கிறீர்கள் முதலாளிகள் இல்லையே என்ற மனோபாவம் தான் ஸ்டீவ்விற்கு. ஆனால் அது போல் இல்லாமல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துக் கொண்டு, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாய் பதில் சொல்லி தன் வழி தனி வழி என காட்டி இருக்கிறார், டிம் குக்.
அந்த கேள்வி பதிலில் மிக முக்கியமானது. இருக்கும் அவ்வளவு பணத்தை ஆப்பிள் என்ன செய்யப் போகிறது? ஆமாம், ஆப்பிளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? சாம்சங், எச்.டி.சி,நோக்கியா, பிளாக்பெரி தயாரிக்கும் ரிம்,எல்.ஜி, மோட்டோராலோ மற்றும் சோனி எரிக்ஸன் என போன் தயாரிக்கும் எல்லா கம்பெனிகளையும் வாங்கிப் போட்ட பின்பும் தோராயமாக ஒரு 20 பில்லியன் டாலர்கள் மிச்சம் இருக்குமாம். இல்லை என்றால் பேஸ்புக்கை மட்டும் மொத்தமாய் வாங்கிப் போடலாம். பேஸ்புக்கின் மதிப்பு 100 பில்லியன் டாலரை எட்டும் என்ற பட்சத்தில்.
அவசரப் படுத்தாதீர்கள், அதே சமயம் கவலைப் படாதீர்கள், கொஞ்சம் பொறுமையாய் இருங்கள்.நல்லதே செய்வோம் என்று சொல்லி இருக்கிறார், டிம் குக்.
 
100 பில்லியன் டாலர் உங்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள் ?

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 15, 2012 @ 11:11 pm