காதலில் சொதப்புவது எப்படி
எட்டு நிமிட குறும்படத்தையே முகவரியாகக் கொண்டு இரண்டரைமணி நேரப் படமாக அழகாக உருவாக்கிய ' நாளைய இயக்குனர்' புகழ் பாலாஜி மோகனுக்கு வாழ்த்துகள். விழிகளில் கனவுகளுடனும் மனதில் நம்பிக்கைகளுடனும் கோடம்பாக்கத்தில்உலவும் உதவி இயக்குனர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறார் இயக்குனர்.

சித்தார்த் அமலாபால் காதலர்கள். அமலாபாலின் பெற்றோர் விவாகரத்திற்கு முயற்சிக்க வருத்தத்தில் இருக்கும் அமலாவிற்கு சித்தார்த்தின் நட்பு தேனாய் இனிக்கிறது. நட்பு காதலாக காதலியின் மனதிற்குப் பிடித்தவராக நடந்து கொள்ளத் தெரியாமல் சித்தார்த்தும் சண்டைக்கோழியாய் அமலாவும் முட்டிக் கொள்ள ஊடல் கூடலாகும் கதையைக் கொஞ்சம் ரசிக்க வைத்து கொஞ்சம் சொதப்பி மிச்சம் சிரிக்க வைத்து படத்தை முடிக்கிறார்கள்.
சித்தார்த் கதையின் நாயகன். கதையைக் கூறுபவரும் இவரே. காதலிக்கிறார் – பிரிகிறார் – சேர்கிறார். காதலியின் மனதைப் புரிந்து கொள்ள முடியாமலும் அவரை மறக்க முடியாமலும் தவிக்கிறார். அமலாபால் இன்றைய கல்லூரிக்காதலியைக் கண்முன் நிறுத்துகிறார். இவரது நடிப்பு அற்புதம். அப்பாவும் அம்மாவும் பிரிந்திருக்கும் வேளையில் 'என்னைக் கேட்டு யாரும் முடிவு எடுக்க மாட்டேங்களா' என்று பொருமுவதும் காதலனிடம் உரிமையாய்க் கோபம் கொள்ளுமிடமும் பிரமாதம். பாவம் சித்தார்த், கொஞ்சம் பார்த்து ஒற்றுமையா இரேன் என்று பக்கத்து சீட் பாட்டியே அறிவுரை சொல்லும் அளவிற்குச் சண்டைக்கோழியாய்த் திரிகிறார். சித்தார்த்தும் இவரைக் கவர எடுக்கும் முயற்சிகள் சண்டையில் முடிய செய்வதறியாது திகைக்கிறார். இவர்களின் பொருத்தமும் நன்றாக உள்ளது. அமலா- சித்தார்த் சண்டையைத் தீர்க்க சித்தார்த்தின் நண்பர் சண்டையை அதிகமாக்குமிடம் கலகல.அமலாபாலின் அப்பாவாக வரும் சுரேஷின் நடிப்பும் அருமை. நடுத்தர வர்க்கத்து அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.
நீரவ்ஷாவின் கலக்கலான ஒளிப்பதிவு வண்ணமயம்.தமனின் இசையும் படத்திற்கு அழகு சேர்த்துள்ளது.
ரசித்த இடங்கள்
1. ''ஒரு ஆணால் ஒரு மணி நேரம் எதையும் யோசிக்காம சும்மா உட்கார்ந்திருக்க முடியும். இதே ஒரு பொண்ணோட மனசு எதையாவது யோசித்துக் கொண்டிருக்கும்'"போன்ற புதிய சிந்தனைத் துளி யாருய்யா இப்படி ரூம் போட்டு யோசிக்கிறாங்க? என்று மெய்சிலிர்க்கச் செய்கிறது..
2. சுரேஷ்ஷின் மாமனாரின் திருமண நாள் விழாவில் பிரிந்திருக்கும் மனைவி இவர் மேல் விழ பின்னணியில் 'வளையோசை கலகலவென' பாடல் ஒலிக்க பிரிந்திருக்கும் வேளையில் தாங்கள் மறந்த காதலை உயிர்ப்பிக்கும் இடம் ஆஹா.
3. ஊடல் முடிந்து சேரும் போது சித்தார்த் ஐ லவ் யூ சொல்ல, இதைச் சொல்ல இவ்வளவு நாளாச்சா? என்று அமலாபால் கேட்குமிடம் கவிதை.
4. என் ஆளுக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்கும் போல, நான் அவன்கிட்டே பேசும் போது இருமல் சத்தம் கேட்டது என்றவுடன் பக்கத்தில் ஒரு பெண் இருமுவது இயக்குனரின் டச்.
5. இன்றைய காதல், பிரிவு, நான் பெரிதா? நீ பெரிதா? என்ற ஈகோ, பொறாமை, காதலியை மாற்றுவது, 'அண்ணா' என்றழைத்தாலும் காதல் செய்த பெண்ணைக் காதலியாக்க முடியும் என்ற நவீன சிந்தனை அழகாகப் படம் போட்டுக் காட்டின இடங்கள்.
6. தன்னிடம் பொய்யே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கும் காதலி அடுத்த நிமிடமே இந்த டிரஸ் எப்படி இருக்கு என்று காதலனிடம் வினவ, சகிக்கலை என்று காதலன் உண்மையைச் சொல்ல காதலியிடமிருந்து கிடைப்பது பளார். இப்படி படம் முழுக்க இளமையும் குறும்பும் நவீனக் காதலும் நிரம்பி வழிகிறது.
சொதப்பின இடங்கள்

2. ஒரு காட்சியில் சித்தார்த் தன் கைபேசியை மறந்து வைத்து விட்டு உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். காதலியின் தொலைபேசி எண் நினைவில் கூடவா இருக்காது? அங்கே வேறு யார் கைபேசியிலோ பக்கத்தில் உள்ள பூத்திலோ ஒரு போன் போட்டுப் பேசியிருக்கலாமே.
3. படத்தின் கதைக்களம் கல்லூரியில் நடக்கிறது. அனைவரும் லவ்விக் கொண்டே இருக்கிறார்கள். லவ்விற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவமழை பொழிவதும் பேராசிரியரே இல்லாமல் காதல் செய்வதற்காக மட்டும் தான் கல்லூரி என்று வழக்கமான கதையைப் போலவே செல்கிறது.
4. காதலைச் சொதப்பாமல் சாதிப்பது எப்படி? புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற குணங்களைக் கதா நாயகன் நாயகி மூலம் காட்டியிருக்கலாம்(கதா நாயகியின் அப்பா, அம்மா மூலம் காட்டியிருந்தாலும் நாயகன், நாயகி கதையில் காட்டி கொஞ்சம் அழுத்தம் தந்திருக்கலாமோ?)
5. காதலில் சொதப்புவது எப்படி? என்ற படத்தலைப்பிற்கேற்ப படத்தில் காதல் சொல்லவரும் அனைவரும் சொதப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்குப் பதில் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.
6. கதை காதலர்களைச் சுற்றியே நடப்பதால் சில நேரங்களில் இனிமையாகவும் சில நேரங்களில் இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கொடுமையாகவும் இருக்கிறது.
அர்ப்பணம்:
ஊடல் கொண்டு பிரிந்திருக்கும் காதலர்கள் அல்லது தம்பதியர், நீ பெரிதா? நான் பெரிதா? என்று ஈகோவை விட்டுக் கொடுக்காமல் தவிக்கும் காதலர்கள், காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் அனைவருக்கும் இந்தத் திரைப்படம் அர்ப்பணம்.
படத்தைப் பார்க்கக் கூடாதவர்கள்:
குத்துப்பாட்டு, வில்லனைப் புரட்டிப் போடும் ஹீரோயிசக்கதை,சண்டைகள், செண்டிமென்ட் காட்சிகள், சமூகச் சிந்தனைக் கருத்துக்கள் போன்றவற்றை எதிர்பார்ப்பவர்கள் இந்தப் படத்திற்குச் செல்லத் தேவையில்லை.
கொசுறு:
1. தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது.
2. குறும்படத்தில் வந்த நண்பர்களே இந்தப் படத்திலும் நடித்துள்ளனர்.
3. இயக்குனரின் குறும்படத்தால் ஈர்க்கப்பட்டு அதையே முழுப்படமாக சசிகாந்த், நீரவ்ஷாவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த மாதிரி திரைப்படங்களை ஊக்குவிப்பதன் மூலம் புதிய முயற்சிகள், புதிய கதைக்களம், புதிய இயக்குனர்களின் திறமைகளைக் கண்டறியலாம். படம் பார்த்து மகிழ்ச்சியாகக் கொண்டாடிட்டு வாங்க. இந்தத் திரைப்படம் காதலித்தவர்களுக்கு மலரும் நினைவுகள், காதலிப்பவர்களுக்கு அனுபவப்பாடங்கள் , காதலிக்கப் போகிறவர்களுக்கு முன்னுதாரணச்சிந்தனைகள். ஜாலியான பொழுதுபோக்கு சித்திரம்.
Thanks Aravind.
Nice Vimarsanam!