Boomerang kids

விட்னி ஹுயுஸ்டனின் மறைவுக்கு பிறகு மீண்டும் எல்லா ஊடகங்களிலும் தூக்க மாத்திரைகள், போதை மருந்துகள் பற்றி விவாதிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு வலியைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைந்திருக்கிறது. மிகச் சாதாரண தலவலிக்குக் கூட உடனே ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டே ஆக வேண்டிய நிலையில பலர் இருக்கிறார்கள். இன்னும் பலர் அதிலும் பெண்கள் நிறைய பேருக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூங்கவே முடிவதில்லை. அதிலும் 9/11 க்கு பிறகு 10 பேருக்கு ஒருவர் மீதம் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்குவதே இல்லை. அதே போல வலி நிவாரணிகள், மருத்துவர் பரிந்துரைகளின் பேரில் எடுத்துக்கோள்ள வேண்டிய மருந்துகள் எனப்பலரும் மருந்துகளைத் தவறாக பயன்படுத்துகின்றனர். சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் வேதிவினைகள் புரியக்கூடியவை, சில மருந்துகள் மதுவோடு வினை புரியக்கூடியவை என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள், மருந்தியல் நிபுணர்கள் இதை விளக்கிச் சொல்வதும் இல்லை. இதனாலேயே, பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. தனியே வசிக்கும் முதியவர்கள் தவறுதலாக மாத்திரைகள் எடுத்துக்கோண்டு மிக ஆபத்தில் உயிரிழப்பதும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனாலேயே முதியவர்களுக்கான மருந்துகள் பல வண்ணங்களில் பல விதமான வடிவத்தில் என செய்யப்படுகிறது.மைக்கல் ஜாக்ஸன், விட்னி இவர்களின் மரணங்கள் மூலமாகவாவது மருத்துவர்களும் மக்களும் விழித்துக்கொண்டால் சரி.

 
ooOoo
 
சென்றவாரம் விவாதிக்கப்பட்ட பரபரப்பான வருந்ததக்க ஒரு விஷயம், பூமராங் குழந்தைகள் அல்லது அக்கார்டியன் (accordion) குடும்பங்கள் பற்றியது. நம்முடைய கலாச்சாரத்திற்கு இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும் பல இளைஞர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அமெரிக்கக் குழந்தைகள் ( இந்திய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளும் இதில் அடக்கம்) பபள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக்குச் செல்லும் போதே தங்கள் படிப்பு, உடல்நலம் எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயல்படவே விரும்புகிறார்கள். கல்லூரிகளிலும் தங்கள் மாணவர்களைப் பற்றி எந்த தகவலையும் பெற்றோருக்குச் சொல்வதில்லை. சட்டத்துறையிலும் எந்த ஒரு பிரச்சினை 18 வயதுக்கு மேலான பிள்ளைகளை கைது செய்ய நேர்ந்தால் கூட பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு சுதந்திர மனப்பான்மையில் வாழவே விருப்பம் கொள்வார்கள். 18 வயதுக்கு மேல் இன்னமும் பெற்றொர்களுடன் தங்கினால் அது கேலிக்குரியதாக கருதப்படுகிறது. அப்படிப்படச் சமூகத்தில் நிறைய இளைஞர்கள் கல்லூரிப் படிப்பிற்கு பின் வேலை கிடைக்காமல், தங்குமிடத்திற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல், உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்காக பெற்றோர்களிடமேத் திரும்பப் பூமராங் போல திரும்பி வருகிறார்கள். நடுத்தர வயதுப் பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகள், பெற்றோர்கள் என எல்லோருக்காகவும் இன்னும் அதிகமாக உழைக்க, அக்கார்டியன் இழைகள் போல இன்னும் அதிகமாக மேலும் ( பெற்றொர்கள்) கீழும் ( பிள்ளைகள்)இழுக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து இன்னும் அதிகமாக சமூகவியல் விரிவுரையாளர், காத்தரின் நியுமன் எழுதி இருக்கிறார்.மகிழ்ச்சியோடு பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது வேறு, இயலாமையால் தான் ஒரு சுமையோ என்ற வருத்ததில் வாழ்வது வேறு.
 
ooOoo
 
நியுஜெர்ஸி கவர்னர் கிறிஸ்டி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கான அனுமதி சட்டத்தைத் தன் வீட்டொ சக்தியால் தடை செய்திருக்கிறார். எத்தனை குழந்தைகள் தங்கள் பெற்றொரின் திருமணத்திற்கு அனுமதி கேட்டிருப்பார்கள், எத்தனை ஓரின சேர்க்கையாளர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி கேட்டு கண்ணீரோடு மூறையிட்டிருப்பார்கள். சட்ட அனுமதி கிடைத்தால் கணவன்/அல்லது மனைவியின் உடல்நல காப்பீடு, ஓய்வூதியங்கள் மூலம் கிடைக்கும்  பலன்கள், தங்கள் குழந்தைகளுக்கான அங்கீகாரம் என எல்லாவற்றையும் ஒதுக்குவது எப்படி சரியாகும்? அதிலும் மக்கள் இந்தத் திருமணங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என வாக்குப்பதிவும் நடத்தி, அதில் 52% அனுமதி தரவேண்டும் என வாக்களித்த பின்னும் தடை செய்வது என்ன ஜனநாயகமோ?
 
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது  நாடு முழுக்க நடந்த ஒரு அறிவியல் போட்டிக்கு என் மனனும் அவன் நண்பர்களும் ஒரு வயர்லெஸ் சிப் ( wireless chip) உடலில் செலுத்தி, ஒரு ப்ளூட்டூத் கொண்ட கைக்கடிகாரம் மூலம் அதில் இருந்து நீரிழிவு நோய்க்கு மருந்தை, உடலில் சர்க்கரை அளவு குறையும் போது உட்செலுத்தவும் ஒரு கருவி தயார் செய்வதான ஒரு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்கள். அந்த திட்டம் கடைசி சுற்றுக்குத் தேர்வானது ( முதல் 20), ஆனாலும் அந்த கருவியை எப்படி விற்பது, அதற்கான விளம்பரங்களை எப்படி செய்வார்கள் என்பதற்கான சரியான திட்டம் இல்லாததால், பரிசு பெறவில்லை.
 
கடந்த வாரம் தங்களது 15 வருட கனவை கிட்டதட்ட இதே போன்ற கனவை நனவாக்கி இருக்கிறார்கள் MIT யில் பணி புரியும் ராபர்ட் லேங்கர், மைக்கல் கைம் என்ற இரு பேராசிரியர்கள். வயர்லெஸ் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைக்ரோ சிப் மூலம் ஒரு நோயாளியின் உடலில் தேவைக்கேற்ற அலவு மருந்தை செலுத்த முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதன் மூலம் பலவகை மருந்துகள், விட்டுவிட்டு ( pulsatile) முறையில் கொடுக்க வேண்டிய மருந்துகள், எங்கிருந்தோ கூட ரிமோட் மூலம் மருந்து கொடுக்க கூட முடியும் என்பது மிகவும் பாரட்டத்தக்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.
 
எல்லா சட்டங்களையும் கிட்டதட்ட முதலில் அமுல்படுத்தும் கலிஃபோர்னியாவில் கொழுப்பிற்காக வரி ஒன்றை ஏற்படுத்த இருந்தார்கள். அதாவது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஒரு உடற்பயிற்சி நிலையம் சென்று உறுப்பினராக அலவன்ஸ் போல கட்டணத் தொகையில் பாதி தருவது, அதன் பின் அவர்கள் ஒரு வருடத்திற்குள் எடை குறையவில்லை என்றால், வரி வசூலிப்பது என்ற திட்டம். ஆனால் மருத்துவக் காரணங்களால் எடை குறைய முடியாத பலர் இருக்கலாம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அனால் இப்போது மதுவிற்கு அளவு முறை ( ration) கொண்டு வந்தது போல சர்க்கரைக்கும் கொண்டுவரலாமா என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு நிதி தரும் சோடா நிறுவனங்கள் கோக், மற்றும் இனிப்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நம்பலாம்.
 
கடைசியாக Freedie Mac, Fannie Mae போன்ற வீட்டுக்கடன் நிறுவனங்கள் தங்கள் உயரதிகாரிகளுக்கான சட்ட ஆலோசனைகள், வழக்குகள் இவற்றிற்காக கிட்டதட்ட 110 மில்லியன் செலவு செய்திருக்கிறார்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதி உதவி பெற்று பின் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் உயரதிகாரிகளின் வழக்கிற்காக இத்தனை செலவு செய்வது எப்படி?
 
 
ooOoo
 
கைக் குழந்தைகளுக்கான ஜுர மருந்தான டைலினால் (Tylenol) மூடியும் கொடுக்க வேண்டிய சரியான அளவை அளக்கும் குப்பியின் வடிவையும் இன்னும் எளிமையாக்கும் எனக் கருதி மாற்றி அமைத்திருந்தார்கள் .ஆனால் இது மருந்து கொடுப்பதில் கொஞ்சம் தடை செய்வதாக நிறைய புகார்கள் வர, மொத்த அருந்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள். இது போல பல குழப்பங்கள் இருந்ததால், J&J (Johnson & JOhnson) மருந்து நிறுவன அதிபர் பதவி விலகுகிறார்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 22, 2012 @ 4:22 pm