மொஸாட் – புத்தக விமர்சனம்


இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்தே யூதர்களைச் சுற்றி வரும் ஒரு சாபத்தைப் பற்றி சிலர் பேசக் கேட்டிருக்கிறேன். தங்களுக்கென துண்டு நிலம் இன்றி யூதர்கள் திண்டாடுவார்கள் என்பதுவே அது. இன்று இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான தேசம் உருவாகி இருந்தாலும் அவர்களைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வரலாறிலேயே கூட யூதர்களை இயேசுவிற்கு எதிரான ஆளுமைகளாகப் பார்க்கிறோம். 
 
ஹிட்லர் காலத்தினில் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று அழிக்கப்பட்டதனை இந்த உலகம் அறியும். இப்போது சமீபத்தில் பிரான்சில் அடையாளம் தெரியாத ஒருவரால் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் மூன்று சிறு குழந்தைகளும் அவர்களின் யூத ஆசிரியையும் கொல்லப்பட்டதுவரை யூதர்களின் மீதான இந்த உலகின் வன்மம் தொடர்கிறது. இது எங்கே தொடங்கியது, எங்கே தொடர்கிறது, இவற்றின் மூலம் என்ன, யூதர்கள் அடிப்படையில் நல்லவர்களா கெட்டவர்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காணுதல் அத்தனை எளிமை அல்ல.
 
எது எப்படியோ, தன்னைச் சுற்றி காலம் காலமாகத் தொடர்ந்து வரும் பிரச்னைகளை சமாளிக்கவும், நேரத்தில் சரியான பதிலடி தரவும் இஸ்ரேல் உருவாக்கிய உளவு நிறுவனம்தான் "மொஸாட்". அந்த உளவு நிறுவனத்தின் கதைதான் என்.சொக்கன் எழுதியுள்ள "மொஸாட்" என்கிற இந்தப் புத்தகம். 
 
ஒரு விஷயத்தை உறுதிபடக் கூறலாம். இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பீர்கள். அத்தனை சுவாரசியம் நிறைந்ததாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் சொக்கன். 
 
"உலகையே கிடுகிடுக்க வைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறை குறித்த விரிவான அறிமுகம்" என்ற அட்டைப்படத்  தகவலோடு புத்தகம் தொடங்குகிறது. பொதுவாக உளவுத்துறை சார்ந்த தகவல்கள், அவர்களின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்தல் அத்தனை எளிய காரியமன்று. அதிலும் இஸ்ரேல் போன்ற ஒரு உலகின் மிகவும் சென்சிடிவான தேசத்தின் உளவு நிறுவனம் பற்றி எப்படி புத்தகமெல்லாம் எழுத முடியும் என்று புத்தகத்தைக் கையில் எடுக்கும் முன் நான் யோசிக்கவே செய்தேன். புத்தகத்தின் சுவாரசியத்தில் கடைசி  அத்தியாயம்  வாசிக்கும் வரை எனக்கு அந்த  யோசனை மீண்டும் வரவேயில்லை. கடைசி அத்தியாயமும், புத்தகத்தின் முடிவில் நன்றியும் ஆதாரங்களும் வாசித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் உருவான பின்னணியை அறிய முடிந்தது.
 
டேமியன் ஃபவுண்டேஷனில் வேலை பார்த்தபோது எனக்கு அக்கவுண்ட்ஸ் ஆபீசராக இருந்த பிரேம்குமார் உலகளாவிய பல  விஷயங்கள் குறித்து என்னுடன் அளவளாவுவார்.  அவற்றுள் மிக முக்கியமானதும் அவர் அடிக்கடிக்  குறிப்பிட்டதுவும் இஸ்ரேல்  குறித்தது. இஸ்ரேலியர்களின் அபார செயற்பாடுகள் பற்றி அடிக்கடி பிரேம் பேசுவார்.
 
அப்போதிலிருந்தே இஸ்ரேல் மீது (அது எத்தனை நல்ல அல்லது குரூரமான தேசமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்) எனக்கு ஒரு தீராக் காதல். "இவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மூளை டோய்" என்ற  கருத்து  பிரேமின்  பேச்சு  வாயிலாக  என் மனதில் அழுந்தப் பதிந்து போனது. இந்தமுறை புத்தக விழாவில் நண்பர் பிரகாஷ் (டிவிட்டரில் @f5here) "சொக்கன் எழுதின இந்த மொஸாட்'ங்கறது இஸ்ரேல் இன்டலிஜன்ஸ் பத்தின புத்தகம்" என்று எடுத்துக் கூறியவுடன் உடனடியாக மதி நிலையத்தில் ஒரு புத்தகத்தை உருவிக்கொண்டேன் (பணம் தந்தேனா என நினைவில்லை 🙂 ). 
 
தன்னைச் சுற்றி இருந்த அரைடஜன் தேசங்கள் விடுத்த தாக்குதலை ஒற்றை ஆளாய் நின்று சமாளித்ததோடு அல்லாமல் எதிரி நாட்டின் மண்ணைக் கொஞ்சம் பிடுங்கிக் கொண்ட பெருமையும் இஸ்ரேலுக்கு உண்டு என புளகாங்கிதம் சேரக் கூறுவார் பிரேம். 1972'ஆம் ஆண்டில் நடந்த ப்ளாக் செப்டெம்பர் அட்டாக் பற்றின பேச்சும் அடிக்கடி வரும். ஜெர்மனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் ஜெர்மன் உள்ளே புகுந்து  இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்றதும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அதற்குத் தந்த பதிலடியும்தான் அந்த சம்பவங்களின் சுருக்கம். 
 
இந்த ப்ளாக் செப்டம்பர் சம்பவத்தில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். முதல் ஆறு அத்தியாயங்கள் அந்தத் தீவிரவாதிகளின் அட்டாக் மற்றும் அவர்களுக்கு இஸ்ரேல் திட்டமிட்டுத் தந்த பதிலடி இவை குறித்து விரிவாகப் பேசுகிறது, விறுவிறுப்பாகவும் கூட.  மொஸாட்  நிறுவனத்தின் தேவையும் அது உருவான விதமும் இந்த அத்தியாயங்களில் நமக்குத் தெரிகிறது.
 
அதன் பின் மொஸாட் வளர்ந்த கதையும் இஸ்ரேலைச் சுற்றிச் சுழற்றி அடித்த பிரச்னைகளை சமாளிக்க அந்த நிறுவனம் புரிந்த பல்வேறு சாகசப் பணிகளும், உலகின் அத்தனை நாடுகளும் மொஸாடை மூக்கின் மீது விரல் வைத்துப் பார்த்தது குறித்த தகவல்களும் ஆச்சர்யம் தருகின்றன. ரஷ்ய விமானம் ஒன்றைக் கடத்தி வர மொஸாட் செய்த வேலைகள் பற்றிப் படிக்கும்போது ஏதோ படம் பார்க்கும் நினைவில் நான் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டேன் :)))
 
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் கூட அந்த குட்டியூண்டு தேசத்தின் உளவுத்துறைச் செயற்பாடுகள் பார்த்து வாய் பிளந்து நிற்பதன் காரணம் இந்தப் புத்தகம் படித்ததும் புரிகிறது.
  
ஒரு திரில்லர் நாவலின் சுவாரசியம் ப்ளஸ் உலகின் மிகச் சிறந்த ஒரு இன்டலிஜன்ஸ் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களின் உள்ளடக்கம் என இந்த இரண்டின் நல்ல மிக்ஸ் இந்தப் புத்தகம். புத்தகத்தின் ஒரே பிரச்னை திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் 186'ஆம் பக்கத்தில் புத்தகம் முடிந்துவிடுகிறது 😉
 
 
மொஸாட் – என்.சொக்கன்
வெளியீடு: மதி நிலையம்
விலை: ரூ.100/- (முதல் பதிப்பு, ஜனவரி 2012)
ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்

One thought on “மொஸாட் – புத்தக விமர்சனம்

 • April 5, 2012 at 11:31 pm
  Permalink

  விரிவான விமர்சனத்துக்கு நன்றி கிரி

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  Reply

Leave a Reply to என். சொக்கன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 6, 2012 @ 7:11 am