என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?

டாம் குரூஸ் (Tom Cruise) நடித்த மிஷன் இம்பாஸிப்பள் (Mission Impossible) சீரிஸ் படங்களை எல்லாம் முன்பே பார்த்திருந்தால் கூகிள் போன வாரம் அறிவித்த புராஜக்ட் கிளாஸ் என்னவென்று டக்கென்று புரிந்திருக்கும். படத்தை பார்த்திராதவர்களுக்காக,  உங்களின் லேப்டாப், மொபைல் போன் அதனுடன் தேவையான இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லை. அந்த எல்லாவற்றுக்கும் பதிலாக ஒரு கல் எல்லாம் கூட கிடையாது இந்தக் ஒரு கண்ணாடி அவ்வளவு தான்.

 
ஒரு கையில் காபி ஒரு கையில் பேப்பர் எப்படி திருப்ப என்று எல்லாம் அவஸ்தைப் பட வேண்டாம். கண்ணாடியில் பேப்பர் கண் முன் விரிய காபி சாப்பிடலாம். ஒருவரை முன்பு எப்பொழுதோ பார்த்து பேசி இருப்போம். இப்பொழுது நேரில் பார்க்கும் போது அவரின் பெயர் சட்டென்று நினைவுக்கு வரவில்லை என்றால் மண்டையை சொறிய வேண்டாம். கண்ணாடியை தட்டினால் போதும்.முன் நிற்பவரின் முன் ஜென்மம் வரை எல்லாம் சொல்லிவிடும். முன்பே அவரைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கும் பட்சத்தில். கல்யாணங்களில் என்னைத் தெரியுமா என்று கேட்கும் மாமா மாமிக்களிடம் தப்பிக்க இது மிகவும் உதவும்.
 
இது போன்ற கட்டுரைகளை எழுதுவது படிப்பது சர்வத்திற்கும் கண்ணாடி மட்டும் போதும். கண்ணாடியே கண் கண்ட தெய்வமாகும். தொந்தரவும் தரும். என்ன தொந்தரவு?
 
கண் குளிர பார்க்கும் பிகர்களின் போட்டோ ஏன் வீடியோவைக் கூட அவர்கள் அறியாமல் எடுக்கலாம். உடனே ட்வீட்டரில் பேஸ்புக்கில் போட்டு விடலாம். அந்த நேரத்தில் உங்கள் கேர்ள் பிரண்டு வீடியோ சாட்டிங்கில் வந்து எங்கு இருக்கிறாய்? யாரைப் பார்க்கிறாய் எனக் கேள்வி கேட்கலாம். நான் ஆபீஸ்ல ரொம்ப பிஸி, பாஸ் உடன் இருக்கிறேன் என்று எல்லாம் பொய் சொல்லி தப்பிக்க முடியாது.
 
இது போன்ற பிரைவஸி பிரச்னைகள் ஒரு பக்கம் என்றால் நாம் என்ன பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து கூகிள் வழங்கும் வில்லங்க விளம்பரமும் நம் கண் முன் தெரியும்!.
 
ஒரு வேளை இது எல்லாம் போங்காக இருக்குமோ. ஏதாவது லேட்டான ஏப்ரல் பூல் விளையாட்டா என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம். கூகிளின் நிறுவனரான ஸெர்ஜி ப்ரின்னும் (Sergey Brin) , கூகிள் ப்ளஸ்ஸின் தலைவரான விக் குண்டோத்ராவும் (Vic Gundotra) இப்பொழுதே இந்த இந்த கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு தான் சுற்றுகிறார்களாம். எல்லாம் அதன் பயன்பாட்டினை டெஸ்ட் செய்து பார்க்கத் தான்.
 
இது இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது. ஆனாலும் இதைப் பற்றி உங்களின் கருத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளத்தான் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு என்று கூகிள் சொல்லியிருக்கிறது. 250 டாலர் முதல் 600 டாலர் விலையில் இந்த வருட இறுதிக்குள் இந்தக் கண்ணாடி விற்பனைக்கு வரும். பெயர் கூட கூகிள்-ஐ என்று எல்லாம் கூட மற்றவர்கள் சொல்கிறார்கள். இதில் பிரச்னை என்னவென்றால் கூகிளை நம்ப முடியாது. அவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அசத்தலாக ஆரம்பிப்பார்கள் ஆனால் பாதியில் ஆட்டம் காலி படுதா காலி என கடையைக் காலி செய்திருப்பார்கள்.
 
இந்த கூகிள் கண்ணாடி மட்டும் பிரபலமடைந்தால், எங்கேயோ வெறித்து பார்த்தபடி கோபத்துடனும் கொஞ்சலுடனும், கையைக் காலை ஆட்டிக் கொண்டு, தனக்குத் தானே பேசிக் கொண்டு செல்பவர்களை எல்லாம் யாரும் தப்பாக நினைக்க மாட்டார்கள். போகப் போக கண்ணாடி காணாமல் போய் காண்டாக்ட் லென்ஸில் கூட இது அத்தனையும் வந்து விடலாம். 
 
டாம்குரூஸ் கண்ணாடியை மட்டும் நிஜவாழ்க்கையில் கொண்டு வருகிறார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் கண்ணாடி எல்லாம் எப்பொழுது வரும் என்ற சந்தேகம், ஆர்வம், ஆசை, கேள்வி எல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் உண்டு!
 
இப்ப வள்ளுவர் இருந்திருந்தா கண்ணால் காண்பது மெய்னு சொல்லியிருப்பாரோ என்னவோ.
 

 
ooOoo
 
வருங்காலத்தைப் பற்றி பேசிக் கொண்டு நிகழ்காலத்தை மறந்து விடக் கூடாது. இந்த வாரம் கூகிள் செய்த மற்ற ஒரு அறிவிப்பு மிகவும் உருப்படியானதும் இப்பொழுதே அமெரிக்காவிலும் ஜப்பானிலும் பயன்பாட்டில் இருப்பதும் கூட. கூகிள் மேப்ஸின் உதவியுடன் புதிய ஊரில் கூட எந்த தெருவிற்கும் யாரையும் கேட்காமல் சரியாக வழி கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால், மாதம் ஒரு முறை வரும் இந்த மாலில் பாத்ரூம் எங்கு இருக்கிறது? எந்த ப்ளோர் என்ற குழப்பம் இன்னும் போகவில்லை என்று எல்லாம் இனி புலம்பத் தேவையில்லை. நீங்கள் இருக்கும் கட்டிடத்தின் லேஅவுட் கூகிள் மேப்ஸில் இருக்கும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் வாங்க நினைக்கும் பொருள் இருக்கும் இடத்திற்கு எப்படி போவது பில்லிங் கவுண்டர் எங்கு இருக்கிறது, எங்கு பொருளை பெற்றுக் கொள்வது எல்லாம் படம் போட்டு காட்டப் படும்.
 
ooOoo
 
என்ன தான் That 70’s Show முதல் இன்றைய Two and Half Men வரை (கொஞ்ச காலம் டெமி மூரையும்) கலக்கிக் கொண்டிருந்தாலும், ஆஷ்டன் குச்சர் (Ashton Kutcher) ஸ்டீவ் ஜாப்ஸாக நடிக்கப் போகிறார் எனப் படித்தவுடன் கவலையும் கோவமும் வரத்தான் செய்தது. ”ஆஹா, சரியான தேர்வு” என சொல்லியிருக்கும் ஸ்டீவ் வாஸ்ஸையும், (Steve Woz) ஆஷ்டன் குச்சர் தான் என முடிவு செய்தவரையும் ஸ்டீவ்வின் ஆவி மன்னிக்காமல் போகக் கடவது. இதில் ஆறுதலான சமாச்சாரம் என்னவென்றால் இது அதிகாரப் பூர்வமான படம் அல்ல என்பது தான்.
 
வால்டர் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸின் அதிகாரப் பூர்வ வரலாற்றை படமாக்கும் உரிமையை சோனி நிறுவனம் மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. பேஸ்புக் கதையான சோஷியல் நெட்வொர்க் படத்திற்கு திரைக்கதை எழுதிய ஆரோன் சோர்கின் (Aaron Sorkin) இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுத தீவிரமாக யோசித்து வருவதாகவும் சொல்லியிருந்தார். இந்த அதிகாரப் பூர்வமான படத்தில் ஸ்டீவ்வாக யார் நடிப்பார்கள் என்பது தான் சுவாரசியமானதும் கவனிக்கத்தக்கதும்!
நம் ஊர் நடிகர்களில், ஸ்டீவ்ஜாப்ஸாக நடிக்க யார் சரிப்பட்டு வருவார்கள் என்றும் யோசிக்கலாம்!
 
ooOoo

2 thoughts on “என்ன சொல்லியிருப்பார் வள்ளுவர் ?

  • April 11, 2012 at 2:55 am
    Permalink

    //நம் ஊர் நடிகர்களில், ஸ்டீவ்ஜாப்ஸாக நடிக்க யார் சரிப்பட்டு வருவார்கள் என்றும் யோசிக்கலாம்!//

    என் சாய்ஸ்:

    இளவயது ஸ்டீவாக ரன்பீர் கபூர்
    வயதான ஸ்டீவ் பாத்திரத்திற்கு நானா படேகர்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 10, 2012 @ 1:59 pm