பில்லா 2, புஸ்வானமா ?
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடருகிறேன்..
நடுவில் எங்கேடா ஆளைக் காணோம் என்று தேடிய பல்லாயிரக்கணக்கான…. சரி.. சரி… ஆயிரக்கணக்கான…. அதுவுமில்லையா? சரி… தேடியவர்களுக்கும், தேட மறந்தவர்களுக்கும் நன்றி பல!
வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன் அப்படீன்னு இருந்த ரெண்டு வகைகள் கலிகாலத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வெஜிடேரியன், ப்யூர்-வெஜிடேரியன், எக்கிட்டேரியன், நான்-வெஜிடேரியன் என்றெல்லாம் ஆகியிருக்கின்றன. இதிலேயே கூட, “நான் சிக்கன் மட்டும் தான் சாப்பிடுவேன். மத்ததெல்லாம் இல்லை” என்று சொல்பவர்களும் உண்டு. ஆட்டையும், மாட்டையும் வெளுத்துக் கட்டுபவன் நாய் தின்னும் கொரியர்களைப் பழிப்பதும், எல்லாவற்றையும் ரவுண்டு கட்டுபவர்கள் பன்றி தின்பவர்களை பரிகசிப்பதும் கேலிக்குறியது.
‘பாம்பு தின்னும் ஊருக்குச் சென்றால் நடுத்துண்டம் நமக்குத் தான்’ என்ற பழம்பெருமை வாய்ந்த சொல்லாடலை வேறு நாம் வைத்திருக்கிறோம்.
சரி.. மேட்டருக்கு வருவோம்..
பொழுது போகாமல் யோசித்ததில் ஒரு தத்துவம் புலனாகியது.
மனுசன் பொதுவாக இரண்டெழுத்துப் பிராணிகளை தான் ரவுண்டு கட்டுகிறான். ஆடு, மாடு,மான், நாய்,கோழி, காடை, மீன், புறா, எறா, சுறா.
அதுக்கு மேலே மூன்றெழுத்து, நான்கெழுத்து எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பேர் தான் சாப்பிடுகிறார்கள்.
இன்னும் சில பல வருடங்களில் எல்லா எழுத்து மிருகங்களையும் ரவுண்டு கட்டி அனைத்து ஜீவராசிகளையும் காலி செய்து விடுவோம் என்பது மட்டும் நிச்சயம்.
’சைவம் என்பது வாயைத் திறந்து கத்த முடியாத உயிரிணங்களைக் கொல்வது’ என்று ட்வீட்டரில் @arattaigirl என்ற தத்துவப் பேராசிரியை சொன்னது நியாபகத்துக்கு வருகிறது.
ooOoo

பில்லா 2 படத்தில் முழுக்க முழுக்க துப்பாக்கி காட்டியிருக்கிறார்களே.. ‘துப்பாக்கி’ படத்தில் முழுக்க பில்லாவைக் காண்பிக்கும் திராணி இருக்கிறதா என்று ‘தல’ ரசிகர்கள் கேட்கிறார்கள். பதில் இருக்கிறதா ‘அணில்’ ரசிகர்களே?
ooOoo
‘நாங்களும் ரெளடி தான்’ என்று சொல்லி ஜெயிலுக்கு கிளம்பி வந்தவர்கள் எல்லாம் அடுத்து தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவதற்காக டெஸோ மாநாடு நடத்த இருக்கிறார்களாம்.
இவர்கள் பங்கு பெற்றிருக்கும் மத்திய அரசு வெற்றிகரமாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை எந்த சிறு சலசலப்போ, எதிர்ப்போ இன்றி நீட்டித்திருக்கிறது.
தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழகம், தமிழ் மக்கள் என்ற இவர்களின் காமெடி நாளுக்கு நாள் எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.