உளவுக் கோப்பை கிரிக்கெட்

 

எண்பதுகளின் மத்தியில் தொடங்கி கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் இறுதிவரை நம்மூரில் சக்கைப் போடு போட்டவை பாக்கெட் நாவல்கள். மாத நாவல்கள், மாதமிருமுறை நாவல்கள் என புத்தகக் கடைகளில் முன்னணியில் நின்று அலங்கரித்தவை இந்த பாக்கெட் நாவல்கள். நிறைய பதிப்பகங்கள், புற்றீசல் போல் நிறைய நாவல்கள் வந்தாலும் ஜீயே பப்ளிகேஷன்ஸின் அசோகன் இந்தப் புத்தகங்களை வெளியிட்டவர்களுள் சூப்பரிலும் சூப்பர் ஸ்டார்.
 
ராஜேஷ்குமார், பிகேபி, சுபா இவர்கள் அந்த காலகட்டத்தின் சூப்பர் ஸெல்லர்கள். பிற்காலத்தில் பாலகுமாரனும் இந்தக் களத்தில் புகுந்து அவர் வாசகமணிகளைப் பரவசத்தில் ஆழ்த்தினார். ஆர்னிகா நாசர், தேவிபாலா போன்ற அடுத்த வரிசை எழுத்தாளர்களும் புகழ்பெற்ற நேரம் அது.
 
இப்பவும் கூட பழக்கதோஷம் விடாமல் படித்துக் கொண்டிருக்கும் சிற்சில வாசக சிகாமணிகளுக்கு என்று இந்தவகை நாவல்கள் ஒரு ஓரத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
அந்தத் தொண்ணூறுகளின் வாசகர்களை மனதில் வைத்து கூடவே சென்ற வருடம் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த போது கிரிக்கெட் செல்லங்களையும் டார்கெட்டாய் வைத்து வெளிவந்த புத்தகம்தான் கிழக்கு வெளியீடாக தரணி எழுதிய “உளவுக் கோப்பை கிரிக்கெட்”.
 
க்ரைம் / த்ரில்லர் நாவல் விதிகளுக்கு உட்பட்டு லண்டன், காஞ்சிபுரம், டெல்லி, பெங்களூரு என ஒவ்வொரு அத்தியாயத்திலும் தனித்தனி கேரக்டர் அறிமுகங்களிலும் பயணிக்கத் துவங்குகிறது கதை. ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் “அடுத்து என்ன” என நம்மை ஆர்வமுறத் தூண்டும் ஒரு “த்ரில்”லுடன்.
 
பிபிசி லண்டனில் பணிபுரியும் ரிச்சர்ட் ஒரு ரகசிய அஸைன்மெண்ட்டை ஏற்று இந்தியா வருகிறான். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகையும் கட்டுப்பெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவளுமான கௌதமி தன் அப்பாவின் கெடுபிடிகளுக்கு இடையே மும்பையில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்க்க வருகிறாள்.
 
தீவிரவாதிகள் அங்கங்கே சில கொலைகளை அரங்கேற்றி உலகக்கோப்பை இந்தியாவில் நடந்துவிடாமல் இருக்கச் செய்ய முயல்கிறார்கள். மூன்று வெவ்வேறு அணி வீரர்கள், ஒரு கோச் தீவிரவாதிகளின் திட்டத்திற்கு வீழ்கிறார்கள்.
 
இந்தப் பின்னணியில் லண்டன் ரிச்சர்ட் – காஞ்சிபுரம் கௌதமி சந்திப்பு, வில்லன்களின் கடத்தல், சேஸிங் என்று சுற்றிவிட்டு சுபம் என நிறைகிறது கதை.
 
கௌதமியைக் கடத்தியவன் அத்தனை பெரிய மும்பையில் மீண்டும் ரிச்சர்ட் கண்ணெதிரே உலா வருவதும், க்ளைமாக்ஸில் கடத்தல் கும்பலின் சிவப்பு சட்டைக்காரன் மறுக்கா ஒருமுறை கௌதமி கண்ணெதிரே விமானநிலையத்தில் வளையவருவதும் ஃபில்மித்தனம். அண்ட் இறுதியில் கதாநாயக, நாயகியரின் கடைக்கண் பார்வை…. ஹிஹிஹீ….
 
இவை நீக்கிப் பார்த்தால் பேருந்து அல்லது ரயில் பயண நேரத்தில் விறுவிறுவென வாசித்து முடிக்க நல்ல கம்பானியனாக இருக்க உத்திரவாதம் தரும் இந்த இருநூறு பக்கப் புத்தகம்.
 
புத்தகத்தின் ஒரு பெரிய ப்ளஸ்: இந்தக் கதையின் தீவிரவாதிகள் பாகிஸ்தான் (அ) ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இல்லை 🙂
 
உளவுக் கோப்பை கிரிக்கெட் – தரணி
கிழக்கு பதிப்பகம்
208 பக்கங்கள் – ரூ.50/-
இணையத்தில் பெற: கிழக்கு 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2012 @ 1:12 pm