பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்

 

புகழ்ச்சி ஒரு மந்திரம், புகழ்ச்சிக்கு அடிமையாகாதவர் புவியில் யாருமில்லை. ஒருவரை ஆத்மார்த்தமாகப் பாராட்டும் போது அவரின் அகமும் குளிரும். முகமும் மலரும். 

காலையில் கணவர் வேலைக்குச் செல்லக் கிளம்பும் போது வழியனுப்ப ஆசையாக வந்து நிற்கும் மனைவியைப் பார்த்து,'என்னடீ ஈனு பல்லைக் காட்டிக்கிட்டு நிக்கிறே, வழி விடு' என்று எரிந்து விழும் கணவர் சாதாரண(சதா ரண)ரகம். இதே,"உன் முகத்தைப் பார்த்துட்டுப் போனா எல்லாக் காரியமும் சக்ஸஸ் தான், உன்னைப் பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு வேலைக்கு நேரமாகும்" என்று கூறும் கணவர் அசாதாரண(அசத்தல்) ரகம்.இவர் புகழ்ச்சி என்ற மந்திரத்தின் தந்திரம் தெரிந்தவர். இவர் தொட்டது துலங்கும். இப்படிப்பட்ட கணவருக்குத் தேவையான விஷயங்களைப் பார்த்து பார்த்து மனைவி செய்திட மாட்டாரா? புகழ்ந்த கணவருக்கு இனிமை.புகழப்பட்ட மனைவிக்குப் பெருமை.

பாராட்டில் உண்மையும் கனிவும் இருக்க வேண்டும். முகஸ்துதியோ போலித்தனமோ இருக்கக் கூடாது.

திருமண நாளிற்காகக் கணவர் தன் மனைவிக்குப் புடவை வாங்கித் தருகிறார். அதைப் பார்த்து,"என்னங்க கண்றாவி கலர், என்ன புடவை எடுத்துட்டு வந்தீங்க? காட்டன் புடவை, சகிக்கலை, இதே கலர்ல எத்தனை புடவை என்கிட்டே இருக்கு, குத்துக்கல்லாட்டம் இருக்கேன்ல, என்னையும் கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும்னு உங்களுக்குத் தோணலை?என் மூடையே மாத்திட்டீங்க? ஒழுங்கா கடைக்குப் போய் மாத்திக்கிட்டு வருவோம்" என்று கூறும் மனைவி சாதாரண ரகம். இதற்குப் பதில்,"என்னங்க, சூப்பரா இருக்குங்க, என்கிட்டே இல்லாத கலர், உங்களுக்கு நல்ல கலர் சென்ஸ்ங்க, பார்டர் எல்லாம் வச்சு கல்யாணி காட்டன் அச்சு அசல் பட்டுப்புடவை மாதிரியே இருக்குங்க, இந்த வெட்டிங்டே என்னாலே மறக்கவே முடியாதுங்க, என்ன என்னையும் கூட்டிக்கிட்டு பொயிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்" என்று சொல்லும் மனைவியே அசத்தல் ரகம். புகழ்ந்த மனைவிக்கு இனிமை, புகழப்பட்ட கணவருக்குப் பெருமை. இப்படிப்பட்ட பாராட்டும் குணமுள்ள மனைவிக்கு  நினைக்கும் எல்லாம் கிடைக்கும்.

"எங்க சந்தோஷ் ரொம்ப சமத்து, நல்லாப் படிக்கிறான், ஆத்துலே என்ன வேலை சொன்னாலும் ஒரு சின்ன முகச்சுளிவு கூடப் பண்ணாம செய்வான்" என்று ஒரு தாய் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரிடம் தன் மகனைப் புகழ்கிறாள். "சந்தோஷ், மாமா, மாமி வந்திருக்கா, பக்கத்துக் கடையில் போய் கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வா" என்ற வார்த்தையை முடிக்கும் முன் சந்தோஷ் சந்தோஷமாகக் கூல்டிரிங்க்ஸுடன்  நிற்கிறான்.  

பாராட்டு என்பது பாராட்டுபவருக்கும் மகிழ்ச்சி பாராட்டப்படுபவருக்கும் மகிழ்ச்சி. புகழ்வதில் தயக்கமே இருக்கக் கூடாது. பாராட்டுபவர் இனிமையான சொற்களையே செலவழிக்க வேண்டும். குறைகளாகத் தோன்றும் கசப்புகளைக் கூட பாராட்டு என்ற தேனில் குழைத்துத் தர வேண்டும்.

திருமண விழாவில் சந்திக்கும் தன் அண்ணன் மகளிடம்,"ஏய் சுகுணா, என்னடி இப்படி குண்டாயிட்டே, நீ இப்படி மாறுவேனு எதிர்பார்க்கலை, உங்கம்மா மாதிரி குண்டாயிடாதே, இதுக்கு மேலே வெயிட் போடாதே, டயட்லே கண்ணு இருக்கட்டும். எனக்கு என்னவோ பழைய சுகுணாவைத் தான் பிடிச்சிருக்கு" என்று கூறும் சுகுணாவில் அத்தை ராஜம் தான் முன்பு, "என்ன சுகுணா இப்படி ஒல்லியா அசிங்கமா இருக்கியே, கொஞ்சம் சாப்பிட்டு வெயிட் போடேன், அப்போ தான் பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளைக்கும் உன்னைப் பிடிக்கும்" என்றவள். ராஜம் அவர்களின் கருத்தில் தவறில்லை, ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் தவறு.

"சுகுணா, நீ ஒல்லியா திரிஷா,அசின் மாதிரி அழகா இருக்கியே, என்ன ஏதாச்சும் டயட், எக்ஸர்ஸைஸ் பண்ணறியா, கொஞ்சம் வெயிட் போட்டால் இன்னும் அழகாக இருப்பாய்" இவை ஒல்லியான சுகுணாவிடம் கூறப்பட்டிருக்க வேண்டிய வார்த்தைகள். "வாவ் சுகுணாவா இது? போன தரம் பார்த்ததுக்கும் இப்போ பார்க்கிறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்? சூப்பரா புசுபுசுனு குஷ்பூ மாதிரி இருக்கியே, நீ இருக்கிறது சரியான அளவு, இதுக்கும் மேலே கூடவோ குறையவோ செய்யாதே" என்று ராஜம் அத்தை குண்டான சுகுணாவிடம் கூறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? 

பாராட்டுபவருக்குப் புத்திசாலித்தனமும் சமயோஜித சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் இருக்க வேண்டும். புகழ்பவர் காரியம் சாதிக்கிறார். புகழப்படுபவர் பெருமை கொள்கிறார்.

"எங்க அத்தை வைக்கும் வத்தக்குழம்போட மணமே தனி, மணம் எட்டூருக்கு இழுக்கும், என்ன கைப்பக்குவம், நான் வச்சா அந்தளவுக்கு வர மாட்டேங்குது" என்று தோழியிடம் தொலைபேசியில் தன் மாமியாரைப் புகழ்கிறார் ஒரு மருமகள். இப்படிப்பட்ட மருமகளை எந்த மாமியாருக்குத் தான் பிடிக்காது? 

"வேலைக்கும் போயிட்டு வீட்டுலேயும் வேலை பார்க்கிறா, இன்னைக்கு சன்டே தானே, மனைவியையும் குழந்தையையும் வெளியிலே சினிமாவுக்கோ, பீச்சிற்கோ கூட்டிக்கிட்டுப் போயிட்டு வாயேன்டா" என்று பையனிடம் மருமகளுக்காகப் புகழ்ந்து பேசும் மாமியாரை எந்த மருமகளுக்குத் தான் பிடிக்காது? 

குழந்தைகள் செய்யும் சிறிய நல்ல காரியங்களைக் கூடப் புகழ்ந்து பாருங்கள். அவர்கள் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் தெரியும். எப்பொழுதும் தொட்டதெற்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகப் பாராட்ட நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. 

ஒருவரை உண்மையாகப் புகழும் போது அவர் மனதில் நீங்கள் ஒரு கோபுரத்தில் அமர்கிறீர்கள். அழகு-அன்பு-படிப்பு-பதவி-திறமை-இப்படி ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்களை அறிந்து உண்மையாகப் புகழ்வதன் மூலம் உங்களை நீங்கள் உயர்த்திக் கொள்கிறீர்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் புகழப்பட்டவரால் மனதில் நினைத்தக் காரியங்களையும் சாதித்துக் கொள்கிறீர்கள்.

"வேலைக்குப் போயிட்டு உச்சி வெயில்ல வீட்டுக்குச் சாப்பிடலாம்னு ஆசையா வந்தா, சாம்பார்லே உப்பு,சப்பே இல்லை" எத்தனை பேர் தன் தாயிடம்,மனைவியிடம்,சகோதரியிடம் காட்டும் அன்றாடக் கோபங்கள். இதற்குப் பதில் "சாம்பார் சூப்பர், ஆனா ஏன் காரத்தைக் குறைச்சுட்டே" என்று சொன்னால் அடுத்த முறை அந்தத் தவறுகள் இல்லாமல் அந்தப் பெண் திறம்பட சமைப்பாளே. இதே சாம்பாரை உணவகங்களிலோ கல்யாண வீடுகளிலோ விருந்தினர் வீடுகளிலோ சகித்துக் கொள்ள மாட்டோமா?

நம்மில் எத்தனை பேர் பேருந்து ஓட்டுனர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் நன்றி கூறுகிறோம். அவ்வாறு அவர்களுக்கு நன்றி கூறி அவர்கள் திறமைகளைப் பாராட்டும் போது களைப்பின்றி இன்னும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் அவர்கள் தங்கள் பணிகளைச் செய்ய முடியுமே.

தினந்தோறும் பூ வாங்கும் பூக்காரியிடம்,"அது என்னமோ தெரியலை ஈஸ்வரி, உன்னிடம் பூ வாங்கி சாமிக்குப் போட்டால் தான் மங்களகரமா இருக்கு, உனக்கு அப்படி ஒரு முகராசி" என்று சொல்லி பூக்காரியின் பூ முகம் மலர்வதை ரசித்துப் பாருங்கள்.

பண்டிகை காலங்களில் உங்கள் வீட்டு வேலைக்காரிக்கும் புடவைகள், பட்சணங்கள் கொடுத்து அவர்களுக்கு வாயார நன்றி கூறிப் பாருங்கள். வேலைக்காரி காதுபட ஒரு இல்லத்தரசி தன் தாயிடம்,"அம்மா, எனக்கு நல்ல குடும்பம் அமைஞ்சது மட்டுமில்லாமல் நல்ல துணையா லெட்சுமி அமைஞ்சிருக்காம்மா, அவ ஒரு நாள் வீட்டுக்கு வராட்டி எனக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது, என்ன சுறுசுறுப்பு, குணமும் தங்கம்" என்று கூறுகிறார். இப்படிப்பட்ட எஜமானியிடம் அந்த வேலைக்காரப்பெண் திறம்பட பணியாற்றித் தன் விசுவாசத்தைக் காட்டுவாள்.

நடிக- நடிகையர் சம்பளம் பெற்றுக் கொண்டு தான் திரைப்படங்களில் நடிக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களால் அங்கீகரிக்கப்படும் போதும் விமர்சகர்களால் பாராட்டப்படும் போதும் தான் உண்மையாகவே மகிழ்கிறார்கள். கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளும் ஊக்கத்தை அளிக்கும் பாராட்டே. 

'முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் கண்ணாடி' மனம் நிறைய நேசத்தையும் பாசத்தையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்திலே எரிந்து விழுந்து கெட்ட பெயர் சம்பாதிக்கும் மக்கள் எத்தனை எத்தனை பேர்? மனதில் உள்ள அன்பை ஒளிவு மறைவில்லாமல் பாரட்டு என்ற அஸ்திரத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணருங்கள். வெற்றி நிச்சயம்.'மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பதற்கேற்ப பாராட்டுவது என்பது ஒரு சிறிய செயல் தான். ஆனால் அது தரும் பலனோ அபரிமிதமானது. பாராட்டு விழுபவனை எழ வைக்கும்.

பாராட்டு என்ற சூத்திரம் உற்சாகத்தின் உறைவிடம். வெற்றிக்கான படிக்கட்டு. பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் உங்கள் வசப்படும்.

தொடர்புடைய படைப்புகள் :

6 thoughts on “பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்

  • April 13, 2010 at 9:21 am
    Permalink

    Everyone must follow this “Manthra”. Then real real peace is in our hand.

    This is the key to open everybody’s softcorner which is inside their mind.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 18, 2010 @ 7:50 pm