ஜனாதிபதி தேர்தல் : நீயா நானா ?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியாளர்களின் டெலிவிஷன் பிம்பம் ஒரு முக்கியமான அங்கம் வசிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கென்னடி, கிளிண்டன் போன்ற முந்தைய ஜனாதிபதிகள்  அட்டகாசமான வெற்றி பெற்றதற்கு டீவி முக்கிய காரணி. 
 
கிட்டத்தட்ட “சேப்பா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்” டைப் முட்டாள்தனமான லாஜிக்.
 
இந்த 2012 எலெக்‌ஷனின் சாராம்சம் என்ன? மூன்றே மூன்று விஷயங்கள்: 1. பொருளாதாரம் 2. வரிச்சுமை 3. ஹெல்த்கேர்
 
இதில் அமெரிக்க பொருளாதாரம் இன்னமும் மந்த கதியில் இருப்பதும், நாடு தழுவிய வேலையில்லா திண்டாட்டமும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒரே நாளிலோ, நாலே வருஷங்களிலோ சரிசெய்துவிடக்கூடிய விஷயமல்ல இது.
 
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது ராம்னி வரிச்சுமையை ஏற்றி விடுவார். பில்லியனர்கள் மீதும் மலைமுழுங்கி மெகா கார்பரேஷன்கள் மீதும் அவர் கைவைக்க மாட்டார், மாறாக அவர்களுக்கு இன்னும் சலுகைகள் தருவார் என்பதும் ஒரு டிபேட் பாயிண்ட்.
 
கனடா, பிரிட்டன் போல் இங்கே நாடு தழுவிய ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடையாது. ஒபாமா ஏற்படுத்தி இருக்கும் ‘ஒபாமா கேர்’ திட்டத்தினால் தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் லாபம் குறையும்,  மருந்து கம்பெனிகளின், ஆஸ்பத்திரிகளின் கொட்டம் அடங்கும். ஆனால் அனைவருக்கும் பொது இன்ஷூரன்ஸ்,  நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்பது அவர் வாதம்.
 
இந்த 3 முடிச்சுகளிலும் இவர்களுக்குள் எக்கச்சக்க சிக்கல்கள்!
 
இதில் ஒபாமாவுக்கும் ராம்னிக்குமான முதல் சுற்று டெலிவிஷன் குஸ்தி நேற்று நடந்தது. அதில் ராம்னியே வெற்றி பெற்றார் என்பது பொதுஜனக் கருத்து.
 
ஏனென்றால் ‘ஸ்டைல் பாயிண்ட்ஸ்’ என்று சொல்லப்படுகிற பர்சனாலிட்டி, பேச்சுத்திறன், ஆளுமை, அதிரடி இவற்றில் ராம்னி ஒபாமாவை ஒரு சில பாயிண்ட்களில் மிஞ்சி விட்டார் என்பதும் ஊடகங்களின் ஏகோபித்த கருத்து. அதில் உண்மை இருக்கிறது.
 
என்னதான் செகண்ட்ஹாண்ட் கார் சேல்ஸ்மேன் மாதிரி ராம்னி உதார் விட்டாலும், அவருடைய பாடி லாங்குவேஜ் தன்னம்பிக்கையையும் தலைமைப்பதவிக்கான ஆளுமையையும் பிரதிபலித்தது என்று ஊடகங்கள் அலற ஆரம்பித்து விட்டன். கம்பெனி கம்பெனியாக மிகக் குறைந்த விலையில் வாங்கி, கூண்டோடு கைலாசமாக ஆட்களை வீட்டுக்கு அனுப்பி, அதிரடி CEO வாக அவர் இருந்த அனுபவம் அதில் தெரிந்தது. அது நல்லதா கெட்ட்து, யாருக்கு நல்லது, யாருக்கு கெட்ட்து என்பதுதான் டிபேட் பாயிண்ட்.
 
“ஏண்டா ஹோம்வொர்க் பண்ணிட்டு வரலை, ஏறு பெஞ்சு மேல” என்று விரட்டப்பட்ட மாணவன் மாதிரி ஒபாமா முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு “எப்படா இந்த இண்டர்வியூ முடியும்?” என்று அலைபாய்ந்தது போலவே தோன்றினார்.
 
“4 வருஷம் என்னய்யா பண்ணினே? என்னதான் கிழிச்சே” என்ற ராம்னியின் அட்டாக்குக்கு “யோவ், உங்க ஆளுங்க பண்ணிட்டுப்போன அழும்பை சரிபண்ணவே 40 வருஷம் ஆவும். பொழைக்குமா பூடுமா என்றிருந்த பொருளாதாரம் இன்று உசிரோடு கிடப்பதே என்னால்தானே” என்று அவர் பதில் சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.
 
“47% அமெரிக்கன்ஸ் பூட்ட கேஸ், சோம்பேறி சோமாறிங்க, வரியும் கட்ட மாட்டானுங்க, வாங்கி வாங்கி துன்னுவானுங்க, அவுனுங்கள நான் நம்பமாட்டேன்னு அருளுரை சொன்ன ஆளுதானேய்யா நீயி, உனுக்கு ஜன்ங்களோட கஷ்டம் எப்படிய்யா 100% புரியும்?” என்று ராம்னியை அட்டாக் பண்ணி இருக்கலாம். பண்ணவில்லை.
 
“ஏன்யா, நேச்சுரல் எனர்ஜி, ஸோலார்னு புலம்பிக்கிட்டு $  90 பில்லியன் வேஸ்ட் பண்றியே?” என்றதற்கு ஒபாமா நாணித்தலைகுனிந்து நகத்தால் தரையில் கோலம் போட்டிருக்க வேண்டாம். போட்டார்.
 
“அடேய் பாதகா, நகரங்கள், பார்க்குகள், கடற்கரைகள், அலாஸ்கா பனிப்பாறைகள் என்றெல்லாம் கண்ட கண்ட இடத்திலே ஓட்டையைப் போட்டு பெட்ரோல் எடுத்தால் நாடே நாறிடுமேடா ராம்னி?  எல்லா ஊரிலயும் ஏற்கனியே Smog  தாங்கல” என்று பதிலடி அடித்திருக்கலாம். அடிக்கவில்லை.
 
“2 + 2 = 48’ என்று விநோதமாக எந்த வித கணித கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாத பீலாக்களை ராம்னி அள்ளி வீசுகையில் ஒபாமா மாமா ‘அதெப்படிங்? சரியா வராதேங்” என்று தலை சொறிந்திருக்கவேண்டாம். சொறிந்தார்.
 
அதனால்தான் ‘ஸ்டைல் பாயிண்ட்ஸ்’களில் ஒபாமா மாமா அவுட்!
 
“இன்கம்டாக்ஸ் இன்னபிற சட்ட ஓட்டைகளை அடைத்து நான் மண்ணைத் திரித்துக் கயிறாக்கி அதில் ஒரு கப்பல் செய்து அதை விண்ணிலே ஏவி” மேலும் மேலும் ராம்னி புருடாக்கள். 
 
“அய்யா பரமாத்மா! எப்படியோ ஏழெட்டு ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு சட்ட ஓட்டைகளை தட்டிக்கொட்டி, டிங்கரிங் பண்ணி பிட்டு ஓட்டி பிகில் ஊதி நாட்டுப் பொருளாதாரத்தை சீர் செய்வேன் என்று சூளுரைக்கிறீரே, அந்த ரகசிய விபரங்களை எனக்கும் நாட்டு மக்களுக்கும் எடுத்து கீதாசார்யனாக உரையுமே” என்று ஒபாமா அடித்துக் கேட்டிருந்தால் ராம்னியிடமிருந்து அசட்டு சிரிப்பைத்தவிர வேறு பதில் இல்லை.
 
ஒபாமா ஒரு ஜெண்டில்மேன். எதிராளி ஏகத்துக்கும் ரீல் விட்டாலும் எதிர்த்துக் கேட்காத அளவுக்கு அநியாயத்துக்கும் ஜெண்டில்மேன்.
 
அடுத்த ரவுண்டில் ஃப்ளோரிடாவில் டிபேட் 2, என்ன நடக்கிறது பார்ப்போம்!
 
அதற்கு முன்னால் பைடன் – ரையன் ஒரே ஒரு குழாயடிக் குட்டிச் சண்டை ஒன்றும் இருக்கிறது. 
 
காணத் தவறாதீர்கள்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 5, 2012 @ 8:09 am