சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 01
சீனுவின் சித்தப்பாவுக்குத் தஞ்சாவூரில் கல்யாணம். ஒரு வாரம் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுவிட்டு ஜாலியாக ஊர் சுற்றித் திரும்பினான்.
வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மாவின் வழக்கமான அர்ச்சனை தொடங்கியது, ‘நாளைக்கு ஸ்கூல், ஞாபகம் இருக்கா?’
‘ஆமா, அதுக்கென்ன இப்போ?’
’ஏதுடா, போன வாரம்முழுக்க ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டோமே, நாம இல்லாதபோது மிஸ் என்ன பாடமெல்லாம் நடத்தினாங்கன்னு தெரிஞ்சுக்கணுமேன்னு உனக்குக் கொஞ்சமாவது இன்ட்ரஸ்ட் இருக்கா?’
‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லைம்மா, நான் பிக்கப் பண்ணிடுவேன்!’
‘நத்திங் டூயிங்’ என்றார் அம்மா. ‘ஒழுங்கு மரியாதையா நரேன் வீட்டுக்குப் போய் எல்லாப் பாடத்தையும் தெளிவாக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு வா.’
சீனு அதிர்ந்தான். இது என்ன புதுக் கரடி? எப்படியோ ஒரு வாரப் பாடங்களில் இருந்து தப்பித்துவிட்டோம் என்று பார்த்தால், அம்மா திடீரென்று இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாரே!
அம்மா வெறுமனே சொன்னதோடு நிறுத்தவில்லை. சீனுவைப் பிடித்து வெளியே தள்ளாதகுறையாக நரேன் வீட்டுக்குத் துரத்திவிட்டார். ‘எவ்ளோ நேரமானாலும் பரவாயில்லை, ஒரு பாடம் விடாம எல்லாத்தையும் கேட்டுகிட்டுதான் வரணும்.’
சீனு யோசித்தான், அம்மாவுக்கு டகால்டி காட்டிவிட்டு பார்க்குக்கு ஓடிவிடலாமா?
ம்ஹூம், அது சரிப்படாது. நரேனின் அம்மாவும் சீனுவின் அம்மாவும் நெருங்கிய சிநேகிதிகள். இன்னும் பத்து நிமிஷத்தில் அவருக்கு ஃபோன் பறக்கும், சீனு அங்கே இல்லை என்று தெரிந்தால், அவ்வளவுதான்.
வேறு வழியில்லாமல் நரேன் வீட்டை நோக்கி மெல்ல நடந்தான் சீனு. வழியில் தென்பட்ட பூங்காவும், அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளும் அவனுடைய பெருமூச்சை அதிகரித்தார்கள்.
நாலு தெரு தள்ளி, நரேன் வீடு. ஒரு சிறிய தோட்டத்தைக் கடந்து சீனு காலிங் பெல்லை அழுத்தியதும் கதவு சட்டென்று திறந்தது, ‘வாடா, இப்பதான் உங்கம்மா ஃபோன் பண்ணாங்க!’
‘நரேன் எங்கே ஆன்ட்டி?’
‘உள்ளே படிச்சுகிட்டிருக்கான்!’
சீனுவுக்கு ஆச்சர்யம், ‘ஞாயிற்றுக்கிழமையிலும் படிக்கிற பையன், இவனைமாதிரி நாலு பேர் இருப்பதால்தான் எங்கம்மா என்னைப் பந்தாடறாங்க!’
அதற்குள், சத்தம் கேட்ட நரேன் உள்ளேயிருந்து ஓடி வந்தான், ‘என்னடா, தஞ்சாவூர் ட்ரிப் எப்படி இருந்தது?’
‘ஓகே!’ என்றான் சீனு, ‘போன வாரம்முழுக்க ஸ்கூல்ல என்ன பாடமெல்லாம் நடத்தினாங்கன்னு எங்கம்மா உன்கிட்ட கேட்டுகிட்டு வரச் சொன்னாங்க.’
’சூப்பர்’ நரேன் முகத்தில் உற்சாகம். ‘நானும் உன்கிட்ட ஒரு புது விஷயம் காட்டணும்ன்னு வெச்சிருக்கேன்.’
‘என்னது? புதுசா எதுனா வீடியோ கேம் வந்திருக்கா?’
’இதுவும் கிட்டத்தட்ட கேம்மாதிரிதான், ஆனா கொஞ்சம் வித்தியாசமானது’ என்றான் நரேன், ‘நீ முதல்ல உள்ளே வா, விளக்கமா சொல்றேன்!’
நரேனின் படிப்பு மேஜைமேல் புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் நான்கைந்து காகிதங்கள். அவற்றை சீனுவிடம் நீட்டினான், ‘உனக்காகதான் இதையெல்லாம் காபி செஞ்சு வெச்சிருக்கேன்.’
சீனு அந்தக் காகிதங்களை அசுவாரஸ்யமாகப் பார்த்தான், ‘என்னடா இது?’
‘நீ கேட்டியே, போன வாரப் பாடங்கள் எல்லாம் இதுல இருக்கு.’
‘நிஜமாவா?’ சீனு மீண்டும் அந்தக் காகிதங்களை மேய்ந்தான், ‘இது ஏதோ மேப் வரைஞ்சமாதிரில்ல இருக்கு?’

‘என்னடா சொல்றே? ஒண்ணும் புரியலையே!’
’எங்க அக்கா சந்தியா ஹைதராபாத்ல வேலை பார்க்கறாங்கல்ல?’
‘ஆமா! அவங்களுக்கென்ன?’
‘அவங்க போன வாரம் லீவ்ல இங்கே வந்திருந்தாங்க, மைண்ட் மேப்ன்னா என்னன்னு எங்களுக்கெல்லாம் சும்மா விளையாட்டா சொல்லித்தந்தாங்க. அதைப் பயன்படுத்தி நான் நம்ம க்ளாஸ்ல நோட்ஸ் எடுத்திருக்கேன், அவ்ளோதான்!’
‘அப்படீன்னா, மைண்ட் மேப்ங்கறது க்ளாஸ்ல நோட்ஸ் எடுக்கறதுக்கான ஒரு டெக்னிக்கா?’
‘ம்ஹூம், இல்லை, மைண்ட் மேப்ங்கறது பேனாமாதிரி, அதை வெச்சு நீ கதையும் எழுதலாம், கணக்கும் போடலாம், உன்னோட திறமை, உன்னோட இஷ்டம்.’
‘சொதப்பாதேடா, நீ என்ன சொல்றேன்னு எனக்குச் சுத்தமாப் புரியலை!’
’அக்கா சொல்லித்தந்த மைண்ட் மேப் டெக்னிக்கை வெச்சு நான் க்ளாஸ்ல நோட்ஸ் எடுத்தேன், எங்கம்மா அவங்க ஆஃபீஸ்ல ஏதோ பிரச்னைகளையெல்லாம் பிரிச்சு மேய்ஞ்சு ஆராய்ச்சி செஞ்சாங்களாம், புது ஐடியாஸையெல்லாம் ஈஸியா ரெக்கார்ட் செஞ்சாங்களாம், எங்க பாட்டி அதுல சமையல் குறிப்பு எழுதமுடியும்ன்னு கண்டுபிடிச்சாங்க, இதுமாதிரி மைண்ட் மேப்ஸை வெச்சு நாம என்ன வேணும்ன்னாலும் செய்யலாமாம்.’
சீனுவுக்கு லேசாக சுவாரஸ்யம் தட்டியது. ‘இதனால என்ன பலன்?’
‘மைண்ட்ன்னா மனசு, நம்ம மனுஷ மனசு, இன்னும் சரியாச் சொல்லணும்ன்னா நம்ம மூளை எப்படி ஒரு விஷயத்தைச் சிந்திக்குதோ, அதை அப்படியே பதிவு செய்யற ஒரு டெக்னிக்தான் இந்த மைண்ட் மேப்’ என்றான் நரேன், ‘இதைப் பயன்படுத்தறதால நாம வேகமாவும் சரியான முறையிலயும் திங்க் பண்ணமுடியும்ன்னு அக்கா சொன்னாங்க.’
‘ஆனா எனக்குப் புரிஞ்ச விஷயம் என்னன்னா, மிஸ் பாடம் நடத்தும்போது, நாம அதைக் காகிதத்துல ஒவ்வொரு வரியா நோட்ஸ் எடுக்கறோம், அப்போ, கடகடன்னு எழுதறோமேதவிர, எதுவும் நம்ம மனசுல பதியறதில்லை. பின்னாடி அதைத் திருப்பிப் படிக்கறதுக்கும் ரொம்ப நேரம் ஆகுது.’
’அதே இடத்துல மைண்ட் மேப்ஸ் பயன்படுத்தினா, ஒரு விஷயத்துக்கும் இன்னொரு விஷயத்துக்கும் ஈஸியா தொடர்பு உண்டாக்கமுடியுது, அதன்மூலமா ஒவ்வொரு விஷயமா மனசுல பதிச்சுக்காம, கொத்துக்கொத்தா ஞாபகத்துல ஏறுது, பின்னாடி அதை ரிவிஷன் செய்யறதும் ஈஸியா இருக்கு!’
‘சுருக்கமாச் சொல்றதுன்னா, புத்தகத்துல இருக்கறதையோ மிஸ் சொல்றதையோ அப்படியே, அதே வடிவத்துல பேப்பர்ல பதிக்கலாம், மறுபடி அங்கிருந்து புத்திக்கு ஈஸியாக் கொண்டுவரலாம். முக்கியமா, க்ளாஸ் பாடம் படிக்கறோம்ங்கற எண்ணமே இல்லாம ஒரு விளையாட்டுமாதிரி செம ஜாலியா இருக்கு!’
‘நிஜமாவா சொல்றே?’
‘ஆமாண்டா, நம்ம மிஸ் மணிக்கணக்கா எடுத்த பாடத்தையெல்லாம், இப்போ நான் 30 நிமிஷத்துக்குள்ள உனக்குச் சொல்லித் தந்துடுவேன், பார்க்கறியா?’
சீனு அந்தக் காகிதங்களைப் புது மரியாதையுடன் பார்த்தான். நிறைய வட்டங்கள், கோடுகள், வண்ண வண்ண எழுத்துகள், சின்னச் சின்ன ஓவியங்கள், இதுதானா மைண்ட் மேப், நிஜமாகவே இதனால் அத்தனைப் பலன்கள் உண்டா?
’பாடமெல்லாம் கெடக்கட்டும்’ என்றான் சீனு, ‘முதல்ல இந்த மைண்ட் மேப்பைப்பத்தி எனக்கு விளக்கமாச் சொல்லிக்கொடு நரேன்!’
(தொடரும்)
Related Books:
தொடக்கமே ஆர்வமாக இருக்கிறது..அருமை, பணி தொடர வாழ்த்துகள்.
Interesting… I would like to learn more about mind maps and how to use them!!! Please post more and soon!!