சமர் – விமர்சனம்
தொடர்ந்து மாபெரும் தோல்விப் படங்களாக கொடுத்துக் கொண்டிருக்கும் விஷால் நடித்த ‘சமர்’ திரைப்படம் பொங்க்ல் ரிலீஸாகியிருக்கிறது. தொடர் தோல்விகளின் காரணமாக இந்தப் படமாவது நல்ல கதையாக அவர் தேர்ந்தெடுத்து நடித்து, ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்ற நப்பாசையில் படம் பார்க்கச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா… ஐயோ பாவம்!

எதோ ஒரு ஆங்கில, எத்தியோப்பிய, ஸ்பேனிஷ், கொரிய திரைப்படத்தைச் சுட்டு தமிழில் திரைப்படமாக்கி தமிழ் மக்களின் திரைப்பட தாகத்தைத் தீர்த்து விட வேண்டும் என்று தற்காலத்திய டைரக்டர்களின் அதே கனவு தான் இந்தத் திரைப்படத்தின் டைரக்டர் திருவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
படத்தின் முதல் காட்சியில் சந்தன & தேக்கு மரங்களை வெட்ட வருபவர்களை ஒற்றை ஆளாக நின்று தாக்கி அழிக்கும் காட்சிக்கான காரணம் கடைசி வரைக்கும் நமக்குப் புரியவேயில்லை.
படத்தின் கதை பேங்காக்கில் நடக்கிறது. அதற்காக முதல் பாதியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ‘தாய்’ மொழியில் தான் பேசுகிறார்கள். போனால் போகிறதென்று தமிழிலும், ஆங்கிலத்திலும் சப்-டைட்டில் போடப்படுகிறது. ‘வில்லு’ போன்ற திரைப்படங்களில் ‘தாய்’ மொழி என்று சொல்லி ஏதோ ‘கயாமுயா’ என்று கத்தியதற்குப் பதிலாக இதில் எவ்வளவோ பரவாயில்லை. நிஜ தாய்லாந்து மொழி தான் பேசப்படுகிறது.
‘ஸ்டண்ட்’ தாய்லாந்து வீரர் ‘நங்’ என்று முதல் இடத்தில் டைட்டிலில் இடம் பெற்றிருந்தார். அதே லாஜிக்கின்படி தாய் மொழி வசனங்களை எழுதிக் கொடுத்தவர் பெயரும் அல்லவா வசனகர்த்தா டைட்டிலில் இடம் பெற்றிருக்க வேண்டும்?
த்ரிஷா, சுனைனா என்று இரண்டு ஹீரோயின்கள். கதைப்படி படம் முழுக்க விஷால் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருப்பவர் போன்ற தோற்றத்தில் வர வேண்டும். ஆனால் த்ரிஷாவும் ஏன் சதா சர்வகாலமும் விளக்கெண்ணெய் குடித்தாற் போன்றே மூஞ்சியை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை – பாடல் காட்சிகளில் கூட!
சுனைனாவும் படத்திலே பங்கு பெற்றிருக்காருங்க.. அவ்வளவு தான்!
பின்னணி இசை & இசையமைப்பு எல்லாம் பெரிதாக சொல்லிக் கொள்வது போல் இல்லை.
படத்தில் முழுக்க முழுக்க மெனக்கெட்டிருப்பது கேமராமேன் தான்! அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

இடைவேளை வரை என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. படு குழப்பமாக இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இது தான் சொல்லப் போகிறார்கள் என்று வரிசையாக யூகிக்க முடிகிறது.
'சமர்’ என்றால் ‘போர்’ என்று அர்த்தமாம்.
அழுத்தந்திருத்தமாக ‘bore' என்று எடுத்துக் கொண்டாலும் சரி, படத்தை முழுதும் ரசித்துப் பார்ப்பதே பெரும் போராட்டம் தான் என்ற கணக்கில் ‘போர்’ என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அது உங்கள் விருப்பம்.