கண்ணா லட்டு தின்ன ஆசையா

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கே. பாக்யராஜ் பஞ்சாயத்து கூட்டியதும் அவருக்கும் கடைசி நேரத்தில் ஒரு பெரிய தொகையைக் கொடுத்து பிரச்னையை முடித்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். டைட்டில் கார்டில் முதலிலேயே அவருக்கு ஒரு நன்றி நவின்றிருக்கிறார்கள்!
படத்தின் பிரமாண்ட பலம் என்று நிச்சயமாக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனைச் சொல்லலாம்.
அவர் அதிரடியாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை அவர் வந்து நின்றாலே தியேட்டர் அதிருகிறது. எப்படியும் ‘லத்திகா’வைப் போல காசு கொடுத்து தியேட்டருக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் இம்சை அவருக்கு இந்தப் படத்தில் நேராது என்பது நிச்சயம்.
’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற பழமொழிக்கும் நடமாடும் உதாரணம் நம்ம ஆக்டர் பவர் ஸ்டார் தான்! முகத்தில் எக்ஸ்பிரஷன் காட்டத்தெரியவில்லை. டான்ஸ் ஆடத் தெரியவில்லை. டயலாக் பேசத் தெரியவில்லை. படம் முழுவதும் ஒரு கண்ணை மூடியபடியே இருக்கிறார். இவ்வளவு இருந்தாலும் கலக்கியிருக்கிறார். பல இடங்களில் சந்தானம் நேரடியாகவே பவர் ஸ்டாரின் ரியல் லைஃபை கிண்டல் அடிக்கிறார். ஆனாலும் அசரவில்லை பவர் ஸ்டார்.
தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் ஹீரோயினுடன் வெளிநாட்டுக்குப் பறந்து ஒரு தனிப்பாட்டு, தனி டிராக் என்றெல்லாம் அழிச்சாட்டியம் செய்யவில்லை சந்தானம்.
சந்தானம், பவர் ஸ்டார் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவில் மடுவாய் புதுமுகம் சேது. சந்தானத்திற்கு இணையாக டான்ஸ் ஆடியிருக்கிறார். அவ்வளவு தான்! பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

தமன் இசையில் பாடல்கள் தேவலாம் ரகம். படம் முழுக்க ஒரே பின்னணி இசையை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி பாடாய்படுத்துகிறார்.
ஏற்கனவே தெரிந்த கதை… அடுத்து என்ன நடக்கும் என்று ‘இன்று போய் நாளை வா’ படத்திலேயே ஏற்கனவே பார்த்து விட்ட காட்சிகள் என்று இருந்தாலும் இந்தப் படம் நன்கு ப்ரெஷ்ஷாகத் தான் இருக்கிறது. இன்றைய தேதியில் இன்று போய் நாளை வா திரைப்படத்தையும், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தையும் போட்டியாக களம் இறக்கினால் கண்டிப்பாக ‘லட்டு’ தான் ஜெயிக்கும்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணியில் பார்ட்-2 விரைவில் எடுக்க இருப்பதாகக் கேள்வி.
கண்ணா.. இன்னொரு லட்டு தின்ன ஆசையா?