விஸ்வரூபம் – நிதர்சனம் பாதி விமர்சனம் மீதி
ஒரு வழியாக விஸ்வரூபப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து வெகு விரைவில் ஏழெட்டு காட்சிகள் கட் செய்து ஓரிரு காட்சிகளில் ம்யூட் செய்யப்பட்டு தமிழகமெங்கும் திரைக்கு வரப்போகிறது.

’கட்’ செய்யப்படவிருக்கும் விஸ்வரூபம் பார்ப்பதற்கு பதிலாக முழுமையான விஸ்வரூபம் பார்ப்பதற்காக கோவையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளாவின் சிட்டூர் என்ற இடத்தில் சென்று இன்று விஸ்வரூப தரிசனம் பெற்று வந்தேன்.
போகும் வழியிலேயே இன்னொரு தியேட்டரிலும் விஸ்வரூபம் திரையிட்டிருந்தது. ஆனால் இன்று ஞாயிறு காலை 10.30 மணியளவில் மாலைக்காட்சி வரை அனைத்து காட்சிகளும் ‘ஹவுஸ் ஃபுல்’ என்று போர்டு வைத்திருந்ததால் அங்கிருந்து சிட்டூர் சென்றோம். அது அரசாங்கத்தின் தியேட்டர் என்று சொன்னார்கள். (இருக்குமோ?!). 15 ரூபாய், 25 ரூபாய், 30 ரூபாய் பால்கனி டிக்கெட்டுகள். கவுண்டரில் அடிதடி கலாட்டா. மன்னன் திரைப்படத்தில் வந்த காட்சிகளை நேரில் பார்க்க நேரிட்டது. போகிற வழியிலேயே டூவீலர்களிலும், கார்களிலும் தமிழகத்திலிருந்து சாரை சாரையாக மக்கள் கூட்டத்தை பார்க்க நேரிட்டது. தியேட்டரில் ஒரு நான்கைந்து காவலர்கள்.. “நாளைக்கு வந்தா கூட்டமே இருக்காது.. சினிமாதானேடா நாளைக்கு வாங்களேண்டா” என்று மலையாளத்தில் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதிமுக கொடி கட்டிய கார்கள் வேறு! (’அம்மா தடை உத்தரவை வாபஸ் வாங்கச் சொல்லிட்டாங்களாம்!’).
சுமார் 50 பேருக்கு மட்டுமே கவுண்டரில் டிக்கெட் கொடுத்தார்கள். பிறகு எல்லாமே வெளியில் தான். ஆரம்பத்தில் 25 ரூபாய் டிக்கெட் 50 ரூபாய் என்று சொன்னவர்கள் சிறிது நேரத்தில் 250 ரூபாய் வரை விற்றதை காண முடிந்தது. இதில் ஒரு சிலர் அடித்து பிடித்து கண்ணாடி கிழித்து ரத்தக் களறியாக வேறு வந்தார்கள். போலீஸ் வேடிக்கைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டிருந்தது!
கவுண்டரிலேயே பின்புறமாக வந்து 30 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய் என்றும் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
குடும்பம் குடும்பமாக நிறையப் பேரை பார்க்க முடிந்தது.
முதல் காட்சியிலேயே ‘நளினமாக’ நடந்து வந்து நடனம் சொல்லித் தரும் கமல்ஹாசன்.. ஓரிரு காட்சிகள் கழித்து, ‘என் பேரு மாணிக்கம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்று ‘பாட்ஷா’வில் தலைவர் சொல்லும் காட்சியைப் போல தீவிரவாதிகளை (அப்படிச் சொல்லலாம் தானே?!) அடித்து போடும் காட்சியில் கலக்குகிறார்.
இடைவேளைக்கு முன்னால் உள்ள காட்சிகள் படு விறுவிறுப்பு. ஆனால் அதே விறுவிறுப்பை அப்படியே அமுக்கி விட்டார்கள் இடைவேளைக்கு பிறகு! எனவே இழுவையாக இருக்கிறது.
எதிர்ப்பு மண்ணாங்கட்டியெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் பி & சி செண்டர்களில் வழக்கமான கமல்ஹாசன் படங்களுக்குக் கிடைக்கும் அதே இரண்டு வார வரவேற்பு மட்டுமே கிடைத்திருக்கும். அந்த விதத்தில் இப்போது அதையும் தாண்டி இன்னும் சில வாரங்களுக்கு பரபரப்பாக ஓட இருப்பதற்காக அந்த 24 பேர் குழுவிற்கும், தமிழக அரசிற்கும் கமல்ஹாசன் தாராளமாக நன்றி சொல்லிக் கொள்ளலாம்.
‘மாயவரம்’ பொண்ணாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, சில காட்சிகளில் மட்டுமே வரும் நாசர், கமலின் மனைவியாக நடித்திருக்கும் பூஜா ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
உண்மையில் இந்தப் படத்தில் இந்த அளவிற்கு எதிர்ப்பு காட்டும் அளவிற்கு காட்சிகள் எதுவும் இல்லை என்றே கருதுகிறேன். ‘பாப்பாத்தியம்மா, சிக்கன்லே உப்பா இருக்கா டேஸ்ட் பண்ணு’ என்று படத்தின் முதல் வசனத்திலேயே மாயவரத்து மாமியான ஆண்ட்ரியாவைக் கிண்டலடித்திருக்கிறார் கமல். இதை எதிர்த்து யாரும் தடை கோரி வந்து காமெடி என்ன ஆகும் தெரியவில்லை. இப்போது ஏழெட்டுக் காட்சிகளில் வெட்டி விட்டு படம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படும் போது ‘வாமனன்’ என்று பெயரை மாற்றி விடுவது போலாகி விடாது என்று நம்புவோமாக!
மற்றபடி ஆஃப்கானிஸ்தான் கதைக் களத்தில் தீவிரவாதிகளை இஸ்லாமியர்களாக காண்பிப்பது தவிர்க்க இயலாதது. என்றாலும் கூட ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்கு முன்பாக அவர்கள் தொழுகை செய்வது போன்று மீண்டும் மீண்டும் காட்டுவதை தவிர்த்திருக்கலாம். படத்தின் இரண்டாம் பாகம் இந்தியாவில் தொடரும் என்று காட்டி முடிக்கிறார்கள். இரண்டாவது பாகத்தை கமல் எடுப்பார்ன்னு நினைக்கிறீங்க?
’புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வரூம்’ என்று முடித்திருக்க வேண்டிய விமர்சனம். ஆனாலும் வீணாகக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் பரபரப்பாக பேசப்படும் படமாகி விட்டது.