சுட்டீஸ்களுக்கு மைண்ட் மேப்ஸ் ஓர் எளிய அறிமுகம் – 05

 

 
மறுநாள் பள்ளியில் மதிய உணவு நேரம். பையன்களும் பெண்களும் சலசலவென்று பேசியபடி உணவைக் கொறித்துக்கொண்டிருக்க, நரேனும் சீனுவும் விரைவாகச் சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.
 
கரும்பலகையில் எழுதியிருந்த ஆங்கிலப் பாடத்தைப் பரபரவென்று துடைத்துச் சுத்தப்படுத்தினான் நரேன், ‘நான் சொன்னமாதிரி மைண்ட் மேப்ஸ்ல ஏதாவது பயிற்சி எடுத்துப் பார்த்தியா?’ என்றான் சீனுவிடம்.
 
‘ஓ, நிறைய!’ என்றபடி தன்னுடைய பையிலிருந்து சில காகிதங்களை எடுத்தான் சீனு. அவற்றை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தான் நரேன்.
 
முதல் காகிதத்தில், அவர்களுடைய வகுப்பு டைம் டேபிள் மைண்ட் மேப்பாக உருப்பெற்றிருந்தது. அடுத்த காகிதத்தில் முந்தின நாள் கிரிக்கெட் மேட்ச்சின் ஸ்கோர் கார்ட், மூன்றாவது காகிதத்தில் ஒரு சைக்கிளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டிருந்தான் சீனு.
 
‘சூப்பர்டா’ என்றான் நரேன், ‘உனக்கு மைண்ட் மேப் நல்லாப் புரிய ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கறேன், எங்க அக்காமட்டும் இதைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.’
 
‘அது கெடக்கட்டும், இதுல எனக்கு ஒரு டவுட்.’
 
‘என்னது?’
 
‘இந்த மைண்ட் மேப்ஸ் எல்லாம் வெள்ளைக் காகிதத்துல நீல நிறப் பேனாவை வெச்சு வரைஞ்சிருக்கேன்’ என்றான் சீனு, ‘ஆனா உன்னோட வீட்ல நான் பார்த்த சில மைண்ட் மேப்ஸ்ல விதவிதமான கலர்கள் இருந்தது, சில குட்டிக் குட்டி ஓவியங்களைக்கூடப் பார்த்த ஞாபகம், அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’
 
‘அதைச் சொல்றதுக்குதான் உன்னை அவசரமா இங்கே கூட்டிகிட்டு வந்தேன்’ என்று சிரித்தான் நரேன். ஓரமாக இருந்த டப்பாவிலிருந்து நான்கைந்து வண்ண சாக்பீஸ்களை எடுத்துக்கொண்டான்.
 
’பொதுவா மைண்ட் மேப்பை வரையறதுக்கு ஒரே வண்ணமே போதும், ஆனா, அப்படி டல்லடிக்காம, அதுல இன்னும் சில வண்ணங்களைச் சேர்த்துகிட்டா, பல நன்மைகள் உண்டு.’
 
‘முதல்ல, ஒரேமாதிரி மைண்ட் மேப் வரைஞ்சா, குறிப்பா ரொம்பப் பெரிய மைண்ட் மேப்கள் தயார் செய்யறபோதெல்லாம், ஒரு கட்டத்துக்கப்புறம் நமக்கே லேசா போர் அடிக்க ஆரம்பிச்சுடும். அதை மாத்திச் சுவாரஸ்யம் கூட்டறதுக்கு நாம விதவிதமான வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.’
 
சீனு முகத்தில் லேசான ஏமாற்றம், ‘ச்சே, அப்போ இந்தக் கலர்ல்லாம் வெறும் அலங்காரம்தானா?’
 
‘அப்படியில்லை சீனு, மனுஷ மூளை வெவ்வேற வண்ணங்களை வெவ்வேறவிதமாப் புரிஞ்சுக்குது, உதாரணமா, சிவப்பு வண்ணத்தைப் பார்த்தாப் பசி எடுக்கும்ன்னு சொல்வாங்க, பல ஃபாஸ்ட் ஃபுட் கடைகளோட உள் அலங்காரம் சிவப்பு நிறத்துல இருக்கறது அதனாலதான்னு கேள்வி.’
 
‘அதுபோல, ஒரு காகிதத்துல நிறைய விஷயங்கள் எழுதப்பட்டிருக்கு, ஒரே ஒரு வரிக்குமட்டும் சிவப்பு மையால அடிக்கோடு போட்டிருக்குன்னா, நாம சட்டுன்னு அதைதான் முதல்ல கவனிக்கறோம். இல்லையா?’
 
‘கரெக்ட்!’ என்றான் சீனு, ‘மைண்ட் மேப்லயும் நாம உடனே கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயங்களை சிவப்புக் கலர்ல எழுதலாம், அப்படிதானே?’
 
‘அது உன் இஷ்டம், சிவப்புக்கு ஓர் அர்த்தம், பச்சைக்கு இன்னோர் அர்த்தம்ன்னு நீயே தீர்மானிச்சுகிட்டுப் பயன்படுத்தவேண்டியதுதான், இதுக்குன்னு தனியா ரூல்ஸெல்லாம் கிடையாது.’
 
‘ஆனா ஒரு விஷயம், இந்த மைண்ட் மேப்ல சிவப்புன்னா முக்கியம்ன்னு அர்த்தம்ன்னு தீர்மானிச்சுட்டு, அப்புறம் இன்னொரு மைண்ட் மேப்ல அதே சிவப்புக் கலருக்கு முக்கியமில்லாத விஷயம்ன்னு அர்த்தம் வெச்சுகிட்டா, பின்னாடி நமக்கே குழப்பம் ஏற்படும்.’
 
’அதனால, எந்தெந்தக் கலருக்கு என்னென்ன அர்த்தம்ன்னு ஏற்கெனவே தீர்மானிச்சுக்கணும், அப்புறம் அதைத் தொடர்ந்து ஒரேமாதிரி யூனிஃபார்மாப் பின்பற்றணும், தேவைப்பட்டா இதைத் தனியா ஒரு மைண்ட் மேப்பா வரைஞ்சு வெச்சுக்கலாம். ஏதாச்சும் டவுட் வந்தா சட்டுன்னு எடுத்து உறுதிப்படுத்திக்கலாம்.’
 
‘இப்படிக் கலர்களுக்கு என்னென்ன அர்த்தம்ன்னு ஒருவாட்டி தீர்மானிச்சுட்டா, அப்புறம் ஒவ்வொருமுறை மைண்ட் மேப் வரையும்போதும், ஒவ்வொரு கிளை, ஒவ்வொரு வட்டத்துக்கும் எந்த வண்ணம் தேவைன்னு யோசிச்சு, அதன்படி பயன்படுத்தணும், அதன்மூலம் நம்ம மைண்ட் மேப் கலர்ஃபுல்லா மாறுறது ஒருபக்கம், அதைப் பார்க்கும்போது மூளையில இன்னும் அழுத்தமாப் பதியும், வேகமாப் புரட்டறதும் ஈஸி, அதை ஞாபகத்துல வெச்சுக்கறதும் ரொம்ப ஈஸி.’
 
’அப்படீன்னா, மைண்ட் மேப்ல ஒருவாட்டி கலர்களைப் பயன்படுத்திட்டா, அப்புறம் எப்பவும் கலர்களைப் பயன்படுத்தியேதான் தீரணுமா?’
 
‘ம்ஹூம், இல்லை, உங்கம்மா வீட்டு வாசல்ல கோலம் போடறாங்க, சில நாள் வெறும் வெள்ளை மாவுக் கோலம், சில நாள் கலர்ஃபுல்லான ரங்கோலி, ஏன்?’
 
‘சிம்பிளான கோலம்ன்னா கலர் தேவையில்லையே.’
 
’அதே ரூல்தான் இங்கேயும். ரொம்ப சிம்பிளான மைண்ட் மேப்களுக்கு விதவிதமாக் கலர் பூசவேண்டிய அவசியம் இல்லை, எப்போ ஒரு கலர், எப்போ பல கலர்ன்னு நீயே தீர்மானிச்சுக்கலாம்’ என்றபடி கரும்பலகையில் பல வண்ண சாக்பீஸ்களைக் கொண்டு ஒரு மைண்ட் மேப் வரைய ஆரம்பித்தான் நரேன்.
 
05 06
 
’இந்த மைண்ட் மேப்ல, எனக்கு ரொம்பப் பிடிச்ச வகுப்புகள், ஆசிரியர்களோட பெயரையெல்லாம் ப்ளூ கலர்ல குறிப்பிட்டிருக்கேன், அவ்வளவாப் பிடிக்காததையெல்லாம் சிவப்புக் கலர்ல குறிப்பிட்டிருக்கேன்’ என்றான் நரேன், ‘இதுமாதிரி ஒவ்வொரு மைண்ட் மேப்லயும் நாம பயன்படுத்தற கலர்களுக்கு ஏற்ற அர்த்தங்களைத் தீர்மானிச்சுகிட்டு, அப்புறம் அதைக் கவனமாப் பின்பற்றணும்.’
 
‘இன்னொரு விஷயம், எழுத்துகளுக்குமட்டும்தான் வண்ணங்களைப் பயன்படுத்தணும்ன்னு எந்த அவசியமும் இல்லை, கிளைகளுக்குக் கோடு வரையறோம் இல்லையா, அதுக்கும், வட்டங்களுக்கும்கூட விதவிதமாக் கலர் கொடுக்கலாம், எல்லாம் நம்ம இஷ்டம்தான்.’
 
’கலர்தவிர, நம்ம மைண்ட் மேப்ல சில குறிப்பிட்ட பகுதிகளுக்குமட்டும் ஸ்பெஷல் கவனம் தர்றதுக்கு வேற பல வழிகளும் உண்டு.’
 
‘உதாரணமா, மத்த எழுத்துகளையெல்லாம் சின்னதா எழுதிட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியைமட்டும் பெர்ர்ர்ர்ரிய எழுத்துல எழுதலாம், அல்லது, தடிமனா எழுதலாம், அடிக்கோடு போடலாம், பின்னணிச் சாயம் பூசலாம், டிஸைன் பண்ணி அழகா அலங்கரிக்கலாம்… இப்படிப் பல டெக்னிக்ஸ் இருக்கு’ என்ற நரேன், போர்டில் இருந்த அதே மைண்ட் மேப்பில் மளமளவென்று சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தான்.
 
05
 
‘அப்புறம், அந்தக் குட்டிக் குட்டி பொம்மைகள்?’
 
‘அதுவும் கலர்ஸ்மாதிரிதான், மூளைக்கு ஒரு மாற்றத்தைக் கொடுக்கறதுக்காகவும், மைண்ட் மேப் வரையற அனுபவத்தை ஜாலியா மாத்தறதுக்காகவும் ஆங்காங்கே சின்னச் சின்ன பொம்மைகளை வரையறோம்.’
 
‘எதை வரையறது? சும்மா பூ, மரம்… அப்படியா?’
 
‘நோ நோ, இதெல்லாம் அலங்கார பொம்மை இல்லை, ஒவ்வொண்ணுக்கும் அர்த்தம் இருக்கணும்.’
 
‘என்னமாதிரி அர்த்தம்?’
 
‘உதாரணமா, ஒரு குறிப்பிட்ட மைண்ட் மேப் கிளையில நீ ஒரு புது ஐடியாவைப்பத்திப் பேசறேன்னு வெச்சுக்குவோம், அங்கே ஒரு பல்ப் எரியறமாதிரி பொம்மை போடலாம், இன்னோர் இடத்துல நீ ஒரு காமெடியான விஷயத்தைக் குறிப்பிடறேன்னா, அங்கே ஒரு சிரிக்கிற முகத்தை வரையலாம், எதையாவது சந்தேகமாக் குறிப்பிடும்போது, ஒரு பெரிய கேள்விக்குறி வரையலாம்… இப்படி கற்பனையைத் தட்டிவிட்டா ஆயிரக்கணக்கான ஐடியாஸ் கிடைக்குமே!’
 
’சிலர், வெறுமனே படங்களை வெச்சே ஒட்டுமொத்த மைண்ட் மேப்பும் வரைஞ்சுடுவாங்க, நாம அந்த அளவுக்குப் போகாட்டியும், அப்பப்போ எழுத்துகளுக்குத் துணையாப் படங்களை நிறுத்திவைக்கலாம், அதன்மூலம் நம்ம மூளைக்குக் கூர்மையான சிந்தனை கிடைக்கும்.’
 
‘ஆனா, எனக்குப் படமெல்லாம் வரையத் தெரியாதே!’
 
‘டேய், நீ என்ன படம் வரைஞ்சு பிக்காஸோவோட இடத்தையா தட்டிப் பறிக்கப்போறே? சும்மா உனக்கு என்ன வருதோ அதைக் கிறுக்கினாப் போதும்டா.’
 
’அப்ப சரி’ என்றான் சீனு, ’மைண்ட் மேப்ல இருக்கற எல்லாக் கிளைகளுக்கும் படம் வரையணுமா?’
 
‘அவசியமில்லை, எங்கே படம் வரைஞ்சா விஷயம் தெளிவாப் புரியும்ன்னு நினைக்கறியோ அங்கேமட்டும் படம் வரைஞ்சாப் போதும்’ என்றபடி போர்டின் இன்னொரு மூலைக்குச் சென்றான் நரேன், அங்கே ஒரு புதிய மைண்ட் மேப் வரையத் தொடங்கினான்.
 
06
 
’இந்த பொம்மைக்கெல்லாம் என்ன அர்த்தம்?’ புரியாமல் கேட்டான் சீனு.
 
நரேன் அவற்றை விளக்கத் தொடங்கினான். ‘இங்கே பன்னிரண்டு இந்திய மாநிலங்களோட பேர் இருக்கு, அதுல நான் நாலு மாநிலங்களைமட்டும்தான் நேர்ல பார்த்திருக்கேன், அதனால அந்த மாநிலங்களுக்குப் பக்கத்துல டிக் போடறமாதிரி ஒரு பொம்மை வரைஞ்சிருக்கேன்.’
 
‘இதுல தமிழ் நாட்டுலதான் என்னோட வீடு இருக்கு, அதனால அங்கே ஒரு குட்டி வீடுமாதிரி பொம்மை வரைஞ்சிருக்கேன், கேரளாலயும் வங்காளத்துலயும் என் உறவுக்காரங்க இருக்காங்க, அவங்களோட ஃபோன்ல பேசியிருக்கேன், அதனால, அங்கே ஃபோன் பொம்மை.’
 
‘அப்போ அந்த பெங்குவின்?’
 
’காஷ்மீர்ல குளிர் ஜாஸ்தியாச்சே, அதான் பெங்குவின்’ என்று சிரித்தான் நரேன்.
 
’டேய், டூப் அடிக்காதே, காஷ்மீர்ல பெங்குவின்ல்லாம் கிடையாது!’
 
‘உனக்குப் பிடிக்காட்டி அழிச்சுட்டு வேற பொம்மை போட்டுக்கடா’ என்றான் நரேன், ‘இதெல்லாம் சும்மா ஜாலிக்கு வரையறது, ஆராயக்கூடாது!’
 
’அது சரி, இந்தமாதிரி கலர் கலரா எழுதறது, டிசைன் பண்றது, படம் வரையறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சா, மைண்ட் மேப்பை ஒழுங்கா வரையறதுக்கு நேரம் இருக்காதே!’
 
‘உண்மைதான்’ என்று சிரித்தான் நரேன், ‘அதனாலதான், இந்தமாதிரி ஜிகினா வேலைகளை அவசியப்பட்டாமட்டும்தான் செய்யணும், அதுவும் அளவாச் செய்யணும். மத்தபடி மைண்ட் மேப் எதுக்காக உருவாக்கறோமோ அந்தக் கடமையிலதான் நம்ம கவனம் முழுசும் இருக்கணும். ஜாக்கிரதை!’
 
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 19, 2013 @ 9:06 pm