ஆதி பகவன் – விமர்சனம்
ஒரே வெளிநாட்டுப் படத்தின் சிடி ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்த் திரையுலக டைரக்டர்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வார்கள்?
ஒருவர் ‘சமர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுப்பார். இன்னொருவர் ‘அமீரின் ஆதிபகவன்’ என்ற பெயரில் எடுப்பார்.
எந்த வெளிநாட்டுப் படமோ.. அந்த சிடியை எப்படியாவது தேடிப்பிடித்து அந்தப் படத்தையாவது ஒழுங்காக எடுத்திருக்கிறார்களா என்று பார்த்து விட வேண்டும்.
ஒரிஜினல் படத்தில் கதைக்களம் தாய்லாந்து போல. சமரிலும் தாய்லாந்து தான். அமீரின் ஆதி பகவனிலும் தாய்லாந்து தான்.

ஒரு வேளை மிஷ்கினிடம் இந்த ஒரிஜினல் பட சி.டி. கிடைத்திருந்தால் உண்மையிலேயே சமர், அமீரின் ஆதிபகவன் திரைப்படங்களை விட சிறப்பானதொரு படத்தை கண்டிப்பாகத் தந்திருப்பார்.
இவ்வளவு நாட்களாம பல திரைப்படங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என்று சொல்லி தாய்லாந்தை காட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போதெல்லாம் தாய்லாந்து என்று சொல்லியே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாய்லாந்து என்றாலே பட்டாயா ‘வாக்கிங் ஸ்ட்ரீட்’ தான் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
சில காட்சிகளில் சமர் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ‘தாய்’(லாந்து) மொழி பேசும் போது உண்மையான தாய் மொழி பேசுபவர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்கிறார்கள். சில இடங்களில் சொதப்பியும் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து விட்டு அது நன்றாக இருக்கிறது என்று பொருள் பட ‘ஸூவை.. ஸூவை…ஸூவை’ என்று ஹீரோயின் சொல்கிறார். குழந்தைகளைப் பார்த்து ‘அழகு’ என்று சொல்வதற்கு ‘ஸூவை’ என்று சொல்லலாம். ஆனால் ‘டேஸ்டாக இருக்கிறது’ என்பதற்கு ‘ஹாலோய்’ என்று சொல்ல வேண்டும். அதையும் கூட அழுத்தந்திருத்தமாகச் சொன்னால் ’ஐநூறு’ என்றாகி விடும். அதெல்லாம் சரி.. இதெல்லாம் நம்மாட்களுக்கு எங்கே புரியப் போகிறது என்று கேட்கிறீர்களா? செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டாமா? அதே போல ஹீரோ ஒரு ஹை-க்ளாஸ் பாரில் உட்கார்ந்து செம்மத்தியாக சரக்கு அடித்து விட்டு நான்கு இருபது ரூபாய் தாய்லாந்து பாட் (அந்த நாட்டுப் பணம்) எடுத்து வைத்து விட்டுச் செல்கிறார். நம்மூர் காசுக்கு நூற்றிருபத்தைந்து ரூபாய். பேங்காக்கில் அந்த பார் எங்கே இருக்கிறது என்று அமீரிடம் கேட்க வேண்டும்.
இடைவேளைக்குப் பிறகு கோவாவில் படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் முழ்க்க முழுக்க ஹிந்தி (தானே?) பாடல் ஒன்று வருகிறது. இதே லாஜிக் படி யோசித்திருந்தால் முதல் பாதியில் தாய்லாந்து மொழியில் பாடல் ஒன்று வந்திருக்க வேண்டுமல்லவா?
எழுபதுகளில் திரைப்படங்களில் டபுள் ஆக்ஷனில் வித்தியாசம் காட்ட கன்னத்தில் ஒரு மரு வைத்து விடுவார்கள். இப்போது அரவாணி ஆக்கி விடுகிறார்கள். ஆனாலும் ஜெயம் ரவி அரவாணி வேஷத்தில் கலக்குகிறார்.

இசை என்றால் இரைச்சல் என்றாகி விட்டது. ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே புகுந்து விளையாடுகிறார்கள் இப்போதைய படங்களில்.
படம் பார்த்து விட்டு இரண்டு மணி நேரங்களுக்கு வெறும் துப்பாக்கிச் சப்தம் மட்டுமே காதுகளினுள்!
ஊரிலே எவனாச்சும் இந்தப் படம் மனதை புண்படச் செய்கிறது என்று தடை உத்தரவு வாங்கி இலவச பப்ளிசிடி கொடுத்து படத்தை ஓடச் செய்தால் தான் உண்டு.
மற்ற திரைப்படங்களுக்குச் சொல்லி முடிப்பது போல இந்தப் படத்திற்கு ஒற்றை வரி விமரிசனம் சொல்ல முடியாது.. ஸாரி.. உம்மாச்சி கண்ணைக் குத்திடும்!
SUPERB THIRAI VIMARISANAM. KEEP IT UP.