சென்னையில் ஒரு நாள் – விமர்சனம்
சில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஹிதயேந்திரன் என்ற இளைஞனின் இதயத்தை வேறொருவருக்கு பொருத்திய உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள கதை.
ஏற்கனவே மலையாளத்தில் வந்த திரைப்படத்தின் ரீ-மேக். பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் மிக அருமையாக பாத்திரத்துடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுவும் சேரன், சரத்குமார், இளைஞனின் தாயார், தந்தை ஜெயப்பிரகாஷ், பிரகாஷ்ராஜ், ராதிகா, பிரசன்னா ஆகியோர் கலக்கியிருக்கிறார்கள்.
இந்த ஒற்றை வரி உண்மைச் சம்பவத்தை இரண்டரை மணி நேர படமாக எப்படி விறுவிறுப்பாக கொண்டு செல்ல முடியும்? ஏதாவது மசாலா கலந்து பாடல்கள், காமெடி என்றெல்லாம் இணைத்து படுத்தியிருப்பார்களோ என்று நினைத்துப் போனால் அப்படியெல்லாம் இல்லாமல் வேறொரு ட்விஸ்ட் வைத்து மிகச் சிறப்பாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
சென்னையிலிருந்து வேலூருக்கு ஒன்றரை மணி நேரத்தில் கார் செல்ல வேண்டும். கார் வேகமெடுக்க எடுக்க திரைக்கதையும் வேகமெடுக்கிறது.
நடிகர் சூர்யாவை கடைசிக் காட்சியில் காட்டியிருப்பது திணிக்கப்பட்டதாக இருக்கிறது. அவருக்கு பதில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை நடிக்கச் சொல்லியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
இதே போன்ற திரைப்படங்கள் ஆடிக்கொரு தடவையாவது வந்து தமிழ்ச் சினிமா உலகத்தை காப்பாற்றட்டும்!
வாழ்த்துகள் – சென்னையில் ஒரு நாள் டீமுக்கு!