வீரம் – திரை விமர்சனம்

veeramமுரட்டுக்காளை, வானத்தைப் போல போன்ற அண்ணன் – தம்பி பாசம் பற்றிய கதைக்களம் தான். ஆனால் அஜீத்தைக் கிராமத்துவாழ் பாசக்கார அண்ணனாகப் பார்ப்பது  நமக்கெல்லாம் புதியது. நகரத்துக்கதைகளிலே கோட் – சூட் போட்டு நடித்து வந்த அஜீத் இதில் வேட்டிக்கு மாறியிருக்கிறார். 

எதிரிகளுக்கு விருந்து கொடுத்து தெம்பாக்கி அடிக்கும் பாசக்கார அண்ணன் அஜீத்துக்கு நான்கு தம்பிமார்கள்.இவருக்கு அடிதடி பிடிக்கும் அளவிற்குப் பெண்களைப் பிடிக்காது. திருமணம் செய்தால் வரும் பெண் தன் தம்பிகளிடமிருந்து தன்னைப் பிரித்து விடுவார் என்று திருமணமே செய்யாமல் தம்பிகளுக்காக வாழ்கிறார். ஆனால் தம்பிகள் ஆளுக்கொரு பெண்ணைக் காதலிக்க, அண்ணனுக்கு மணமுடிக்காமல் எப்படி மணமுடிப்பது என்று யோசிக்கிறார்கள்.அண்ணனுக்குப் பிடித்த பெயருடைய பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துப் பழக விடுகின்றனர். நாயகனுக்கு அடிதடி விடும் மூச்சு என்றால் நாயகியோ அஹிம்சாவாதி. தம்பிகளின் திட்டம் நிறைவேறியதா?  இவர்கள் காதல் வென்றதா? இவையெல்லாம் வெள்ளித்திரையில் கண்டுகளிக்கலாம். சிறுத்தை' படத்திற்குப் பிறகு 'வீரம்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. இறுதிக்காட்சியில் அதுல் குல்கர்னியை வைத்தே அஜீத்தின் புகழை நாசர் குடும்பத்திற்குத் தெரியப்படுத்துவது இயக்குனரின் சாமர்த்தியம். 

தீபாவளிக்கு அஜீத் ஆரம்பம் கொடுத்து அசத்தி விட்டு அடுத்த இரண்டு மாதங்களிலே வீரத்தில் நடித்து வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார். வீரம் அஜீத் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து தான். மங்காத்தா, ஆரம்பம், வீரம் என அனைத்திலும் பிற நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்து வருவது பாராட்டத்தக்கது. கதையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் வரவேற்பிற்குரியது.  அஜீத் நரைத்த முடியிலும் அழகாக இருக்கிறார், அதற்காகப் படத்திற்குப் படம் இதே பாணியில் வலம் வந்தால் ரசிகர்களுக்குச் சலிப்புத் தட்டி விடுமே..! 
விஷால் படங்களில் தூக்கலாக இருக்கும் காதலியின் குடும்பத்தைப் பாதுகாக்கும் அடிதடிப்பாத்திரத்தை அஜீத் கிராமத்து வேடத்தில் செய்துள்ளார்.  மனிதர் என்னமா நடித்திருக்கிறார்.    பாசம், காதல், ஆக்ரோஷம், கோபம், வீரம் என்று பல்வகைக்களத்திலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டுகிறார். அஜீத் கார், பை ரேஸ் மட்டுமில்லாமல் நடிக்கவும் தெரிந்த திறமையாளர். ஆனால் பாதி படங்களில் கோட்சூட், கிளாஸ் போட்டு நடிக்க வைக்காமல் நடக்க வைத்தே வீணடித்திருப்பார்கள். அஜீத் நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களைத் தர வேண்டும்.  தமன்னா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தரிசனம் கொடுத்திருக்கிறார். நடிக்கக் கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்தியிருக்கிறார்.  நல்லவேளை அஜீத் அழகில் தமன்னா மயங்கிக் காதலிப்பதாகக் காட்சிகளை வைக்கவில்லை.  மனதைத் தொடும் சிறு சிறு நிகழ்வுகளால் காதல் மலர்கிறது என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் இவர்களுக்குக் கூடுதல் காதல் காட்சிகளை அமைத்திருக்கலாம். 

தம்பிகளாக முன்னாள் இன்னாள் நாயகர்கள் பாலா, விதார்த்துடன்  இரண்டு புதுமுகங்கள், பெரிதாக வேலையில்லை என்றாலும் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். 
முன்பாதி கலகலப்பு, பின்பாதி விறுவிறுப்பு கொஞ்சமும் தொய்வு கொஞ்சமுமாய் முடிகிறது.

"நம்ம கூட இருக்கிறவங்களை நாம் ஒழுங்காபார்த்துக்கிட்ட நம்மளை நமக்கு மேல இருப்பவன் நல்லா பார்த்துப்பான்."

"எவ்ளோ பேரு இருக்காங்கறது முக்கியமல்ல… யாரு இருக்காங்ககிறது தான் முக்கியம்." போன்ற பரதனின் வசனங்கள் படத்திற்குப் பலம் கொடுத்துள்ளது. தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் தேறுகின்றன. ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவு ரசிக்கத்தக்கது. வழக்கமான கதையாக இருந்தாலும் காட்சிகளைச் சுவாரஸ்யமாக உருவாக்கியிருக்கிறார்கள்.  

புரியாத விஷயங்கள்:

1.முதிர்கண்ணனாகத் தோன்றும் அஜீத்தின் வயதைத் தமன்னா வீட்டில் கேட்கவே இல்லையே.. அட, அஜீத்தின் மூன்றாவது தம்பியை உடன் பணிபுரியும் தமன்னாவின் தோழி(அவள் பெயர் தமிழரசி நந்தகியோ?) காதலிக்கும் போதும் கூட அஜீத்தின் வயதை யாரும் கண்டுகொள்ளவே இல்லையே.
2. சந்தானம், ரமேஷ்கண்ணா நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எல்லாம் இருக்காமல் சதா அஜீத் குடும்பத்தையே சுற்றி வலம் வருகின்றனர். 
3. தம்பிமாரும் அண்ணனுக்குப் பெண்ணைப் பார்த்துக் கட்டி வைப்பதையே கொள்கையாகக் கொண்டு திரிகிறார்கள். இது தான் இவர்கள் பிழைப்பா?
4. நாசர் வாலிபர்களை வயதுப் பெண்கள் இருக்கும் வீட்டில் தங்கச் சொல்கிறார். ஊரில் உள்ள வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அண்ணன் தம்பிகள் இவர்கள் வீட்டில் தங்கி விடுகின்றனரே..! ஏன்? அதை வேறு மாதிரி காட்சிப்படுத்தியிருக்கலாமோ?
5. காதலிக்கலாமா வேண்டாமா என்று அப்பாவின் அனுமதியை வேண்டி நிற்கும் ஒருவர் சின்ன இடிக்குப் பயந்து கட்டிக் கொள்கிறாரே, ஏன்?
6. நாசரின் அஹிம்சாவாதக் கொள்கை எல்லாம் சரி. தானாகச் சண்டைக்குப் போகக் கூடாது, ஆனால் வந்த சண்டையை விடக் கூடாது. தன்னைத் தற்காத்துக் கொள்ள மற்றவர்களை எதிர்க்கலாம் என்று சொல்லியிருக்கலாமே. யாரிடமும் சண்டை போடக் கூடாது என்பதைக் கடைபிடித்தால் எதிரிகள் வீழ்த்தி விட்டுப் போவார்களே..!

உபரித்தகவல்கள்:

1. இரயிலில் நடக்கும் சண்டைக்காட்சியில் டூப் போடாமல் அஜீத்தே நடித்திருக்கிறார். வேறு நபரைப் பயன்படுத்தலாம் என்று இயக்குனர் சொன்ன போது, காதல் காட்சிகளுக்கு டூப் போடுகிறோமா? இதையும் நான் தான் செய்ய வேண்டும், செய்வேன் என்று அஜீத் சொன்னது கலைஞனுக்குள் இருக்கும் தொழில்பக்தியைக் காட்டுகிறது.
2. விஜய்யின் போக்கிரியும், அஜீத்தின் ஆழ்வாரும் ஒரே நாளில்(பொங்கலின் போது) வெளியானது, போக்கிரி வெற்றியையும் ஆழ்வார் தோல்வியையும் சந்தித்தது, இப்போதும் அது போல நடக்கும் என்ற அனுமானங்களை உடைத்தெறிந்து விட்டது.
3. ஆஞ்சனேயா, ஆழ்வார், தீனா, ரெட், பரமசிவன் போன்ற படங்கள் பொங்கல் வெளியீடுகள். தீனாவைத் தவிர மீதி எதுவும் ஓடவில்லை. பொங்கல் வெளியீடான வீரமும் தோல்விப்படங்கள் வரிசையில் செல்லும் என்ற கணிப்புகளைப் பொய்யாக்கிக் கதை வலுவாக இருந்தால் சகுனங்கள் தடையல்ல என்று வீரமாய் நிரூபித்திருக்கிறது.
4. தம்பியாக வரும் பாலா அன்பு, காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்தவர். இவர் இப்பட இயக்குனர் சிவாவின் சகோதரர் என்பது கூடுதல் தகவல்.

 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 22, 2014 @ 10:22 pm