1999 : காங்கிரசில் வீசிய புயல்

Sonia_Gandhiசரத் பவார், சாங்கமா, மற்றும் தாரிக் அன்வர், மூவரும்  சோனியா காந்தியின் இத்தாலிய பூர்வீகத்தை காரணம் காட்டி அவர் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியபிறகு, சோனியா காந்தி கட்சித் தலைமைப்பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். 

மறுநாளே  டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் ராஜஸ்தான், மத்ய பிரதேஷ்,ஒரிஸ்ஸா முதல்வர்கள் திக் விஜய் சிங்,அஷோக் கெலோட்,கிர்தார் கமாங், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். "சோனியாவின் தலைமையால்தான் காங்கிரஸ் இந்த மாநிலங்களில் பதவிக்கு வந்தது. சோனியாவின் தலைமை காங்கிரஸ”க்கு இல்லாவிட்டால் தாங்கள் பதவியில் இருப்பதிலும் அர்த்தமில்லை" என்று இவர்கள் கூறினர். 

கட்சி  அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த  சமயத்தில்  நிலவிய அழுத்தமான சூழ்நிலையில் டில்லியில்  நான்  எடுத்த  பேட்டிகள்: 

மிகவும் ஆவேசமாகவும் ஆழ்ந்த வருத்தத்தோடும் காணப்பட்டவர் டில்லி முதல்வர்  ஷீலா தீக்ஷித். எதிர்ப்பு தெரிவிக்கும் மூவரையும் கட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று வலியுறுத்தியபோது இவர் மிகவுமே உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்.  

ஷீலா தீக்ஷித் பேட்டி:

பவாரின் கடிதம் பற்றி உங்கள் கருத்து? அவர் சொல்வதில் நியாயம் இல்லையா?

இது முழுக்க முழுக்க பிஜேபி கிளப்பிவிட்ட பிரச்சனை. கட்சியில் உள்ளவர்களுக்கு சொந்த கருத்துக்கள் இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனாலும் இவர்கள் இந்தக் கடிதத்தை வெளியிட்ட விதத்தில் பிஜேபியின் தொடர்பு உள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது.

சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற கேள்விக்கு இடமேயில்லை-அரசியல் சட்டப்படி அவர் இந்தியக்குடியுரிமைப் பெற்றுள்ளார் என்று நீங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள். அவர் இந்நாட்டு மருமகள் என்ற விதத்தில் உரிமை உண்டு என்பது உங்கள் கட்சியினரின் இன்னொரு வாதம்.

Shiela_Dixitஅப்படியே இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், அவர் இந்நாட்டு மருமகள் ஆகி 13 வருடம் கழித்துதானே குடியுரிமையை ஏற்றுக் கொண்டுள்ளார்? அது ஏன்?

நீங்கள் அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தைப் படித்தீர்களா? இந்தக் கேள்விக்கு பதில் அதுதான். இந்திய அரசியல் சாசனப்படி அவர் இந்நாட்டு குடிமகள். அவர் பிரதமர் பதவி ஏற்க முழு உரிமை உண்டு. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், இந்தியாவிலேயே மிகப்பழமையான, இந்தப் பெரிய கட்சியை வலுப்படுத்துவதற்காக தன் சிரமத்தைப் பாராது கஷ்டப்பட்டு பிரசாரம் செய்து கட்சியை ஒரு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியவரை நாட்டின் முதன்மைப் பதவிக்கு ஆதரிப்பதில் என்ன தவறு? இன்று காங்கிரஸ”க்கு ஓரளவு பலம் உள்ளதென்றால் அது சோனியாவால்தான். அவர் மேல் மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அவர் பிரசாரத்தினால் கட்சி பிழைத்தெழுந்ததை ஒத்துக்கொள்ளும்போது, பின்னர் அவர் பிரதமப் பதவியை அடைவதில் என்ன ஆட்சேபணை இருக்க முடியும்? அதை ஏற்றுக்கொள்ளும்போது இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?

அவர் இத்தாலியக் குடியுரிமையை இன்னும் கைவிடவில்லை; இரண்டு நாட்டுக் குடியுரிமையையும் வைத்துள்ளார் என்று சமீபத்தில் எழுந்த குற்றசாட்டுக்கு அவர் விளக்கம் அளித்து மக்கள் மனதில் தெளிவை ஏற்படுத்தியிருக்கலாமே?

அவர் என்ன செய்து இருக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் நான் கூறத்தயாராக இல்லை. எங்களைப் பொறுத்த வரையில் இந்த இரட்டைக் குடியுரிமை என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் இந்நாட்டுக் குடிமகள். இந்த நாட்டைத் தன் தாய்நாடு என்று கூறுகிறார். தன் உயிரைவிட மேல் என்கிறார். இதுதான் உண்மை. இல்லாத விஷயத்தைப் பெரிய பிரச்சனையாக கிளப்பிவிட்டு தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே விஷமம் செய்கிறார்கள் பிஜேபியினர். இதில் வருத்தமான விஷயம், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் இந்த வலையில் விழுந்து கட்சிக்கு துரோகம் செய்வதுதான். 

வெளிநாட்டுக்காரர் என்ற குற்றசாட்டுக்கிடையே சோனியாவையே ஏன் பிரதமராக்க காங்கிரஸ் முயலுகிறது? அவரை விட்டால் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களே கட்சியில் இல்லையா? சோனியாவுக்கு நாட்டை ஆள அனுபவம் போதாது என்ற கருத்துக்கு…?

பிரச்சனை அது அல்ல. காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்த தலைவர் அவர் – அதுவும் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தன் கடைசி நாட்களில் இருக்கிறது என்று அனைவருமே கைவிட்ட நிலையில் இருக்கும்போது கட்சியில் அடிப்படை ஊழியராக சேர்ந்து தன் அயராத உழைப்பின் மூலமும் தன் வலுவானக் கொள்கைகளின் மூலமும் கட்சியில் நம்பிக்கைத் துளிர்விடக்காரணமானவர். தன் அயராத உழைப்பினால் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் கட்சிக்கு நிறைய ஆதரவு திரட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார் – சாதாரண ஊழியராகவே. அடிமட்ட  மக்களிடம் அவருக்கு நிறைய செல்வாக்கு உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களிடம் செல்வாக்குதானே அடிப்படை தேவை?  

oooOooo

டில்லி சட்ட சபையில் ஒரு காங்கிரஸ் எம் எல் ஏவான மீரா பாரத்வாஜின் கருத்துக்கள்.

இந்தப் புயலின் அறிகுறிகள் உங்கள் கட்சிக்குள் ஏற்கனவே இருந்ததா?

இல்லை. எங்களுக்கெல்லாம் இது ஒரு அதிர்ச்சிதான். இவர்களின் சொந்த ஆதாயங்கள்தாம் இதன் அடிப்படை. இந்தியாவில் பெண்களுக்கு வீட்டு மருமகள் என்ற உரிமையும் மதிப்பும் என்றுமே உண்டே. சொத்து பத்துக்களில் உள்ள இந்த அதிகாரம் ஆட்சிக்கு இருப்பதில் என்ன தவறு? காங்கிரஸ”க்கு ஆக்ஸ’ஜன் அளித்தவர். மக்களிடம் பெருவாரியாக செல்வாக்கு உடையவர். சோனியா தலைமை இல்லையென்றால் காங்கிரஸ் சூன்யம்தான். அவர் நாட்டை ஆளவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் மக்கள். இவர்கள் யார் இதை முடிவு செய்ய?

சோனியா இன்னும் இத்தாலியக் குடியுரிமை வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு?

இதில் அர்த்தமேயில்லை. அப்படியே இருந்தாலும் பிறந்த நாட்டுடன் உறவு இருப்பதில் தவறென்ன? இப்போது நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தை விட்டு வந்துவிட்டதால் நம் பெற்றோர் உற்றோருடன் உறவு இல்லாமல் இருக்கிறோமா என்ன? ஒரு இந்தியப் பெண்ணுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டும் முக்கியம்தான்.

சோனியாவின் அனுபவக்குறைவு பற்றி?

இது ஒரு குறையேயில்லை. அனுபவம் தேவையென்றால் அவரை சுற்றியிருக்கும் பவார் போன்றவர்கள் அவருக்கு வழிகாட்டியாக இருக்கலாமே – சோனியா இல்லாவிட்டால், வேறு யார் ஆட்சி புரிய வேண்டுமாம்?  சோனியாவால்தான் கட்சிக்கு பலம்.சோனியா 7 வருடம் வீட்டைவிட்டுகூட வெளியே வராமல்தான் இருந்தார். அவரை நாங்கள்தானே காங்கிரஸ் கட்சி தலைமையை ஏற்கக் கெஞ்சி அழைத்தோம்? மொத்தத்தில் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. இப்படி ஒரு கடிதம் எழுதிவிட்டு சாங்மா ஏன் அமெரிக்கா சென்று விட்டார்? நின்று எதிர்ப்பை சமாளிக்க வேண்டியதுதானே?  பணத்தால் எதையும் சாதிக்கலாம்  என்று நினைக்கிறார்கள் சிலர். ஆனால் அவர்களுக்குத் தெரியாது.மக்களிடம் பணத்திற்கு மகிமை இல்லை;மனிதர்கள்  நல்லவர்களா என்று பார்த்துதான் மக்கள் இப்போது ஓட்டுப் போடுவார்கள்.

oooOooo

மணிசங்கர் ஐயரின் கருத்துக்கள். 

சோனியா காந்திதான் காங்கிரஸின் மிகப்பெரிய மூலதனம்  என்று குறிப்பிடுகிறீர்கள். ஒரு பிரதமாரவதற்கு வெறும் வாக்கு சேகரிக்கும் திறமை ஒன்றே போதுமா? ஒரு அரசை நிர்வகிக்க மற்ற திறமைகள்?

Mani-Shankarஉண்மையில் என் அனுபவத்தில் சொல்கிறேன். இன்றைய சூழ்நிலையில்,பிரதமராகக் கூடிய அத்தனை பேர்களுக்குள் சோனியா காந்திக்கு இந்தியாவைப்பற்றி இருக்கும் அத்தனை தீர்க்கமான பார்வையும், அறிவும் – பொருளாதாரம், வெளிநாட்டு உறவு, அணு சோதனை, மத வேற்றுமைகள், கலாசார வேறுபாடுகள் இப்படி பலவிதத்திலும் – இன்று வேறு எந்த தலைவரிடமும் கிடையாது என்று அடித்து சொல்லுவேன். தன் நேரு குடும்பத்திலிருந்து பலதரப்பட்ட இயல்புகளையும் நெறிகளையும் இவர் இயற்கையாகவே தனக்குள் ஸ்வீகரித்துக்கொண்டிருக்கிறார். எத்தனைப் புத்தகங்களைப்படித்து, ஆராய்ந்து விஷய ஞானம் சேகரிக்கிறார். இன்றைக்கு இவரளவு இந்திய கலை, கலாசாரம், பலதரப்பட்ட சமுதாயம், தொய்பொருள் பற்றியெல்லாம் எந்த அரசியல் தலைவருக்கும் தெரியாது. அதனால்தான் சொல்கிறேன் பிரதமராவதற்கு இவர் முற்றிலும் அருகதையுள்ளவர் என்று. கட்சியில் பல வருடங்களுக்குப் பின்பு, தான் தலைமையேற்றுகொண்ட எட்டே மாதங்களில் உட்கட்சி தேர்தல் நடத்திய செயல் ஒன்றே பலதரப்பட்ட  கட்சிகாரர்களை சமாளித்து காரியத்தை நிறைவேற்றும் சாமர்த்தியத்தைக் காண்பிக்கிறது. ஏதோ அவர் சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொள்வதாக நீங்கள் பத்திரிகையாளர்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் அவர் எத்தனை விதமான விவாதங்களை ஆராய்கிறார் என்று வெளியே தெரியாது. அணு சோதனை விஷயமாகட்டும், இன்ஷுரன்ஸ் மசோதாவாகட்டும், அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளாகட்டும் ஒரு பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்து கொண்டு பலதரப்பட்ட கோணங்களையும் கட்சியினரிடையே கலந்தாலோசித்துப் பின்னரே ஒரு முடிவுக்கு வருகிறார். நாட்டுப் பிரச்சனைப் பலவற்றில் கட்சியினரிடையே ஒத்த கருத்தை  உருவாக்க அவரால்தான் முடியும். தவிர, பல வருடங்களாக காங்கிரஸ் கட்சி தலைவர்தான் பிரதமராகவும் இருப்பது வழக்கம். இந்த முறையில்தான் சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்கிறோம்.

ராஜிவ் மறைந்து 7 வருடங்கள் இவர் பொது வாழ்வில் ஈடுபடாமலேதானே இருந்தார். பின்னர் திடீரென்று கட்சியில் சேரக் காரணம்?

உடைந்து கொண்டிருந்தக் கட்சியை நிலை நிறுத்ததான்.  அந்த 7 வருட காலத்தில் கட்சியில் பல தேர்ந்த,பழுத்த மிகக் கல்வியறிவுடைய தலைவர்கள் பலர் இருந்தார்களே…. அவர்களால் கட்சியை உடையாமல் சிதறாமல் கட்டிக் காக்க முடிந்ததா? இல்லையே? 

இவரது குடியுரிமைப் பற்றி…..

அரசியல் சாசனப்படி தேர்தலில் நின்று பிரதமராக இவர் தகுதியுள்ளவர். அவ்வளவுதான். மற்றவை எல்லாம் பிஜேபியினர் கிளப்பிவிட்ட பொய்கள். இத்தாலியக் குடியுரிமை வைத்துக்கொண்டே இந்தியக் குடியுரிமைப் பெற்றிருக்கிறார் என்று ஒரு குற்றசாட்டு.அதெப்படி சாத்தியம்? அபத்தமான குற்றசாட்டு. அவர்கள் கையில்தானே ஆட்சி உள்ளது. அவர்கள் நிரூபிக்கட்டுமே பார்க்கலாம்.

1980ல் குடியுரிமையில்லாமலே ஓட்டு போட்டார் என்பது உண்மையா?

சுத்த, அபத்தமான பொய்.

oooOooo

தாரிக் அன்வரின் கருத்துக்கள்

Tariq_Anwarசோனியா காந்தியைக் கட்சி தலைமைக்கு நீங்கள் கட்சிகாரர்கள்தானே வருந்தி அழைத்தனர்? காங்கிரஸ் வழக்கப்படி பெரும்பாலும் கட்சித் தலைவர்தான் பிரதமராகப் பதவியேற்பது வழக்கம்; அதனால் பின்னால் அவர் பிரதமராக நேரும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? ஏன் அப்போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் – பின்னர் சமீபத்தில் பிஜேபி அரசு கவிழ்ந்து மாற்று அரசு அமைக்கும் நிலையில் கூட உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இப்போது இந்தக் கட்டத்தில் வெளிப்படுத்தக் காரணம் என்ன?

முதலில் ஒரு Correction. சோனியாவைக் கட்சித் தலைமைக்கு அழைத்ததில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அந்தக் கடிதத்தில் கையெழுத்திடாத ஒரே CWC மெம்பர் நான்தான். ஆனால் பவார் மற்றும் சாங்மா அப்போது சோனியாத் தலைமைத் தாங்க வேண்டும் என்று ஒத்துக்கொண்டனர். ஏனென்றால், கட்சி நிலைமை மிகக் கவலைக்கிடமாக இருந்தது. அது மீண்டும் உயிர் பெற வேண்டுமானால் நேரு குடும்ப நபர் ஒருவர் தலைமைப் பொறுப்பையேற்க வேண்டுமென்று ஒத்துக் கொள்ளப்பட்டது. சோனியா காந்தியும் அந்த சமயத்தில் தான் வெறும் கட்சியைப் புதுப்பிக்கதான் பொறுப்பேற்பதாகவும் பிரதமராக விழையவில்லை என்றும் கூறினார். ஆனால் தற்போது பிஜேபி அரசு கவிழ்ந்து மாற்று அரசு அமைக்கும் சூழ்நிலையில் தான் பிரதமராக தயாராக இருப்பதை  வெளிப்படுத்தினார். இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தேர்தல் சமயத்தில் பிஜேபி இந்த வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சனையைப் பெரிது படுத்துவது காங்கிரஸ”க்கு நல்லதல்ல என்பது எங்கள் அபிப்பிராயம். அதனால்தான் காரியக்குழு கூட்டத்தில் இந்தக் குறைபாடைச் சுட்டிக்காட்டினோம்.

கட்சியைத் தன் முகராசியினாலும் மக்களிடையே செல்வாக்கினாலும் உயிர்பித்தவர் பிரதமராவதில் என்ன தவறு என்று சோனியா ஆதரவாளர்கள் கூறுவது பற்றி?

சோனியா காந்திக்கு மக்கள் ஆதரவு பெரிதாக உள்ளது என்பதையே நான் மறுக்கிறேன். மாநிலத் தேர்தலில் மூன்று மாநிலங்கள் வெற்றி பெற்றெதென்றால் அதற்கு விலைவாசியேற்றம் போன்ற பிஜேபியின் தவறுகள்தாம் காரணம். அப்படி சோனியாவின் பலத்தில் வெற்றியென்றால் மிசோரத்திலும் வெற்றி கிடைத்திருக்க வேண்டுமே? அதே சமயம் லோக் சபா தேர்தலில் காங்கிரஸ”க்கு அப்படி ஒன்றும் வெற்றி கிடைக்கவில்லையே?

சோனியா காந்திக்கு அனுபவம் போதாது என்கிறீர்கள். ஆனால் இந்தியக் கலாசாரம், மதப்பிரச்சனைகள்,வெளிநாட்டு உறவு போன்ற பலதரப்பட்ட விஷயங்களில் அவருக்கு இன்றையப் பல அரசியல் தலைவர்களைவிட நிறையவே தெளிவானக் கருத்துக்கள் உண்டு என்பது பற்றி?

இது விவரம் புரியாத குழந்தைத்தனமான வாதம். இந்தியாவின் வித்தியாசமான, ஆழமானப் பிரச்சனைகளைப்பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. 
          

oooOooo

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : June 2, 2014 @ 6:24 am