தேர்தல் 2016 – லக லக #1

tnleaders

* தமிழகத்தில் எத்தனைக் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கூட்டணிகள் இந்தத் தேர்தலில். ஒரு சில தொகுதிகளில் மட்டும் ஒரு சில வோட்டுகளை வைத்திருக்கும் சில்லறைக் கட்சிகள் மட்டும் எப்படியாவது ஒரு தொகுதியையாவது பெற்று விட வேண்டும் என்று அதிமுகவிலோ, திமுகவிலோ என்று ஆதரவுக் கடிதம் கொடுத்து தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் திமுக பக்கம் என்றால் பிரச்னையே இல்லை. கோபாலபுரம் பக்கமாக நடந்து சென்றாலே உள்ளே பிடித்து இழுத்து உட்கார வைத்து ஒரு தொகுதியைக் கொடுத்து அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

* திமுக கூட்டணியில் முதலில் சேர்ந்த காங்கிரஸூக்கு எத்தனை தொகுதிகள் என்று இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் வரை முடிவாகவில்லை அல்லது அறிவிக்கப்படவில்லை. திமுக தரப்பில் 30 சீட்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகவும், காங்கிரஸ் தரப்பிலோ 60 சீட்டுகள் வரை கேட்டதாகவும், கட்டக் கடைசியாக 40 அல்லது 41 சீட்டுகளில் பேரம் படியலாம் என்று #பட்சி தகவல். பேச்சுவார்த்தைகளின் போது துரைமுருகனை அந்த ஏரியா பக்கமே இருக்க வேண்டாம் என்று துரத்தி விட்டார்களாம். “இத்தனை பேருக்கு சீட்டு கேட்கிறீங்களே. அத்தனை பேரு கட்சியிலே வேட்பாளர்கள் இருக்கிறார்களா?” என்று அந்த அனுகூலச் சத்ரு கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணமாக இருக்கக்கூடும்.

* நன்னிலம் நடராஜன், தீப்பொறி ஆறுமுகம், எஸ்.எஸ். சந்திரன் போன்றோரெல்லாம் அரசியலில் ஐந்தாம்தரப் பேச்சாளர்கள். வாயைத் திறந்தால் வெள்ளம் சுத்தப்படுத்தாத கூவம் பெருக்கெடுத்து ஓடும். திமுக தலைமையே இப்படிப்பட்ட பேச்சுகளை இன்றைய சூழலில் தாமாக பேச முடியாது என்று கருதி இவர்களை ஊக்குவிப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்களிலேயே பரவலான கருத்து உண்டு. அதிமுக சார்பில் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் நடிகை விந்தியா, சமீப காலமாக அதே போன்ற கீழ்த்தரப் பேச்சுகளை பேசி வருகிறார். ”பேட்டரி இல்லாத ஃபோனுக்கு ரெண்டு சிம் கார்டு எதுக்கு?” என்று நக்மா, குஷ்பு ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதை வைத்து இளங்கோவனைக் கேட்டிருக்கிறார். அதே போல கருணாநிதியின் வயதைக் காரணம் காட்டியும் நக்கலடித்திருக்கிறார். கடுமையான கண்டனங்கள்.

* சேலத்தில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைமைக் கழக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் என்பவர், “நபிகள் நாயகத்திற்குப் பிறகு முஸ்லீம் இனத்தைப் பாதுகாக்க வந்த இறைதூதர் கருணாநிதி தான்” என்று உளறித்தள்ளியிருக்கிறார். ஒரு காலத்தில் இஸ்லாமியர்கள் வோட்டுகள் முழுக்கவே திமுகவிற்குத் தான் என்று இருந்த நிலைமை மாறி இப்போது அவர்கள் வோட்டுகளும் பிரிந்து விழுந்து கொண்டிருக்கும் வேலையில் இந்த மாதிரியான பேச்சுக்கள் திமுகவுக்கு இன்னமும் வீழ்ச்சியைத் தான் தரும். அவர்கள் என்ன ஹிந்துக்களா, ‘திருடர்கள்’ என்று கருணாநிதி சொன்னாலும் போய் அவருக்கே வோட்டு போட?!

* மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்த பிறகு அந்தக் கூட்டணியை எப்படி அழைப்பது என்பது குறித்து இது வரையில் ஒரு தெளிவான முடிவுக்கு அந்தக் கூட்டணியினரே வரவில்லை. கேப்டன் நலக்கூட்டணி, விஜயகாந்த் கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி + தேமுதிக கூட்டணி என்றெல்லாம் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவதற்குள்ளாவது ஒரு பெயரை வைப்பார்களா?

* தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்தால் முகவிற்குப் பதில் ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று அவரது கட்சிக்காரர்களில் சிலர் இப்போதே கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே போல தேமுதிக கூட்ட்ணி ஆட்சிக்கு வந்தால் விஜயகாந்திற்குப் பதில் அவரது மனைவி பிரேமலதா தான் முதலமைச்சர் என்று அவர்களது கட்சிக்காரர்களில் சிலர் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். ‘எங்க தலைவர் குயின்மேக்கர். போன தடவை ஜெ.வை முதலமைச்சர் ஆக்கினார். இந்தத் தடவை பிரேமலதாவை முதலமைச்சர் ஆக்குவார்’ என்று பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

* அதிமுக – 130, திமுக -70, மற்றவை – 34 / அதிமுக – 105, திமுக – 111, மற்றவை – 18 என்றெல்லாம் ஆளாளுக்கு ஒரு கற்பனைக் கருத்துத் திணிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றிலெல்லாம் ஒரே ஒரு ஒற்றுமை. ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாரதிய ஜனதாவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முட்டையையே வாரி வழங்குகிறார்கள். “எங்களுக்கு ஒரு சீட்டு கூடக் கிடைக்காது என்பதிலிருந்தே இந்தக் கருத்து கணிப்புகளெல்லாம் பொய் என்பது தெளிவாகிறது” என்று பாரதிய ஜனதாவில் ‘சொந்தக் கருத்து” புகழ் டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 6, 2016 @ 7:24 pm