நியுட்டனின் மூன்றாம் விதி

 

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்கிறது நியுட்டனின் மூன்றாம் விதி. இந்தக் கோட்பாட்டின்படி தான் படத்தின் மொத்தக் கதையும் நடைபெறுகிறது. 

எஸ்.ஜே.சூர்யா ஆள்பலம்,அதிகார பலம் மற்றும் பணபலம் நிறைந்த ஈகிள் தொலைக்காட்சியின் நிறுவனரான ராஜீவ் கிருஷ்ணாவைக் கொல்லத் திட்டமிடுகிறார். அதுவும் எப்படி? இத்தனை மணிக்குள் ராஜீவ்வைக் கொலை செய்யப் போவதாக அவருக்கே போன் செய்து சவால் விடுகிறார். ஏன்? எதற்கு? என்று ஆராயும் ராஜீவ் கிருஷ்ணா தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளூம் சூர்யா செய்யும் சாகசங்களும் தான் படத்தின் கதை. இந்த துரத்தல் ரோலர் கோஸ்டரில் இறுதி வெற்றி யாருக்கு என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த செய்தி தான். ஆனாலும் படத்தின் கடைசி ரீல் வரை படபடப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்குகிறது இயக்குனரின் நேர்த்தியான இயக்கம். 

ஷாயாலிக்கும் சூர்யாவிற்கும் இடையே உள்ள காதலை விளக்க ஆங்காங்கே பின்னோக்கு உத்தியைப் பயன்படுத்தியிருப்பது ரசனை. டூயட் பாடல்களைக் குறைத்து விட்டு சூர்யா-ஷாயாலி காதலில் கூடுதல் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எஸ்.ஜே.சூர்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பு நிறைவு. இவர் குரு பாத்திரத்தில் தன்னைக் கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார். எதிரியின் கள்ளக் காதலை அம்பலப்படுத்துவது, அரசியல் தலைவருடன் மோசடி செய்வதை வெளிப்படுத்துவது, பதுக்கி வைத்திருக்கும் கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வருவது என்று ஆடுபுலியாட்டத்தில் புலியாய் பாய்கிறார் சூர்யா. கண்களில் காதலியை இழந்த சோகம், செயலில் எதிரியைப் பலி கொடுத்து பழிவாங்கத் துடிக்கும் வேகம் என்று ஜமாய்க்கிறார். ஆக்ஷன் ஆடுகளத்தில் ரசிக்க முடிந்த சூர்யாவைக் காதல் காட்சிகளில் ரசிக்க முடியாதது ஏமாற்றமே.

வழக்கமாக எஸ்.ஜே.சூர்யா பேசும் ரெட்டை அர்த்த வசனங்களை இந்த முறை நாயகிக்கு விட்டுக் கொடுத்து விட்டார். குழந்தைகளுடன் அமர்ந்து சூர்யா-ஷாயாலியின் காதல் காட்சிகளைப் பார்க்க முடியாது. அவ்வளவு உவ்வே ரகம். எத்தனையோ திறமை வாய்ந்த அழகான தமிழ் நடிகைகள் இருக்க தமிழ் மொழியே தெரியாத வேற்று மாநில நடிகைகளைத் தேடிப் பிடித்து நடிக்கச் செய்வது புரியாத புதிர். அந்த வகையில் ஷாயாலிபகத்தும் வட இந்திய வரவு. இவருக்கு வடக்கத்திய முகம், திரையரங்கை விட்டு வெளியில் வரும் போது அழுத்தமான பாத்திரமான இவர் முகம் ரசிகர்களின் நினைவில் நிற்க வேண்டுமே…ம் ஹ¥ம்.. கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கும் ஷாயாலி இறக்கும் தருவாயில் மட்டும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

ஆஹா ராஜீவ் கிருஷ்ணா ஆஹா என்று வில்லத்தனத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். இவருக்குக் கதாநாயகனுக்கு இணையான எதிர் நாயகன் பாத்திரம். இத்தனை திறமை வாய்ந்த கலைஞனைத் தமிழ்த்திரையுலகம் கண்டு கொள்ளாதது ஆச்சர்யமே. இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு ராஜீவ்விற்கு ஓஹோவென்று வாய்ப்புகள் கொட்டினாலும் வியப்பதற்கில்லை. துணைப் பாத்திரங்களில் யுகேந்திரனுக்குச் சிறப்பிடம் கிடைத்துள்ளது. மற்ற பாத்திரங்கள் கதைக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

நீலிமாராணி, கெளதமி, தாரிகா, ராஜ்காந்த் என்று ஏகப்பட்ட சின்னத்திரை முகங்கள் சின்ன சின்னப் பாத்திரங்களில் வந்து போகிறார்கள். சரவணனின் ஒளிப்பதிவும் வசனகர்த்தா ரவியின் வசனங்களும் கோபியின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்திற்கு உதவி இருக்கிறது. இசையமைப்பாளர் வினய்யின் பின்னணி இசை மட்டும் பாராட்டிற்குரியது. பாடல்கள் பரவாயில்லை ரகம் தான். ஆக்ஷன் திரையில் இடையிடையே பாடல்கள்  வருவது படத்திற்குத் தொய்வைத் தருகிறது. பாடல் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு காண்போர் மத்தியில் நிலவுவது படத்தின் பலம்.

காதலியைக் கொன்றவனைக் காதலன் பழி வாங்கும் வழக்கமான கதையை ஒரு கைதியின் டைரி, கஜினி என்று எத்தனையோ படங்களில் பார்த்து இருந்தாலும் இந்தப் படம் காண்போரைக் கட்டிப் போடும் வித்தியாசமான சேஸிங் விருந்து. தொடக்கத்தின் பதினைந்து நிமிடங்கள் சாதாரணமாக செல்ல, அதன் பின் வீறு கொண்டெழும் திரைக்கதையின் வேகம் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல வைத்திருக்கிறது. நியுட்டனின் மூன்றாம் விதி இயக்குனரின் நுட்பமான மதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. முதல் படத்திலேயே வெற்றிக்கொடி நட்டிருக்கும் புதிய இயக்குனர் தாய்முத்துச்செல்வனுக்குத் தமிழ்த்திரையுலகம் ரத்தினக்கம்பள வரவேற்பு அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இவர் அசத்தலான கதையை இயக்கி ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார். மொத்தத்தில் வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய வெற்றித் திரைப்படம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 12, 2010 @ 8:32 am