அபியும் நானும்

 

சண்டைகளும் குத்துப்பாட்டுகளும் நிறைந்ததுதான் தமிழ் சினிமா என்ற எண்ணத்தை தனது முந்தைய படங்களில் மாற்றிக்காட்டியவர் இயக்குனர் ராதா மோகன். குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் – காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும் அழகான மொழி பேசியவர் தாய்மை உணர்வை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார் அபியும் நானும் படத்தில். தாய்மை என்பது அம்மாவுக்கு மட்டும் சொந்தமல்ல – அப்பாவிற்கும் சொந்தம் தான் என்பதை அவர் விளக்கியுள்ள விதம் அபாரம்.

அன்பான அப்பா அம்மா – பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யா. இவர்களது அன்பு மகள் த்ரிஷா. பெற்ற பெண்ணே உலகம் என்று வாழும் அப்பாவான பிரகாஷ்ராஜ் – பெண்ணின் எல்.கே.ஜி அட்மிஷனுக்காக நாள் கணக்கில் காத்திருந்து படிக்காத பாடமெல்லாம் படிக்கும் பிரகாஷ்ராஜ் –  தன் பெண் ஆசைப்பட்டாள் என்பதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெரியவளாகி காதல் என்ற பெயரில் வாலிபன் ஒருவனோடு வந்து நிற்க, அதிர்ந்து போகிறார். முதலில் பெண்ணின் காதலனை மனமார வெறுப்பவர் பிறகு எப்படி மனம் மாறி அவர்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதே மீதிக்கதை.

பிரகாஷ்ராஜின் குணச்சித்திர நடிப்பை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்தப்படத்தில் ஒரு பாசமான அப்பாவாக மாறுபட்டு மிளிர்கிறார். மகளை எல்கேஜியில் சேர்த்துவிட்டு கண்கள் பனிக்க டாடா சொல்லும் – சைக்கிளில் போகும் மகளை ஜீப்பில் பின்தொடரும் அக்கறையான அப்பாவாக வலம் வருபவர் மகள் தான் ஒரு பையனை காதலிப்பதாக கூறியவுடன், பொங்கி வெடிக்கும் காட்சியில் கலக்குகிறார். அதிலும் தன் வருங்கால மாப்பிள்ளையின் குடும்பத்தினரை அவர் சந்திக்கும் காட்சி – சிரிப்பு வெடி.. கடைசியில் ஐஸ்வர்யாவிடம் "உங்க அம்மா அப்பாவும் நமக்கு கல்யாணம் நடக்கும்போது உன்னைப் பிரியனுமேன்னு இப்படித்தானே வருத்தப்பட்டிருப்பாங்க" என்று நெகிழும் இடம் அருமை.

நாலு காட்சிகளில் வந்து தலையைக் காட்டிவிட்டு – ஹீரோவோடு சேர்ந்து 2 டூயட் மட்டும் ஆடிவந்த த்ரிஷா இந்தப்படத்தில் நிஜம்மாக அபியாகவே மாறியுள்ளார். சிறுவயது பெண்ணாக இருக்கும் போது பிச்சைக்காரனை அழைத்துவந்து பெரிய பேங்க் ஆபீசர் ரேஞ்சிற்கு அறிமுகப்படுத்துவதிலிருந்து குளிரில் தவிக்கும் மனநோயாளிக்கு தன் அப்பாவின் சட்டையை கழற்றி மாட்டிவிடும் காட்சியிலெல்லாம் சூப்பர். ஆனால் கிட்டத்தட்ட ஒரு நண்பனைப் போலப் பழகிய அப்பாவிடம்  "நாங்க 16 ந்தேதி மேரேஜ் பண்ணிக்கறதா முடிவு பண்ணியிருக்கோம்" என்று கூருவது லேசாக இடிக்கிறது.

அம்மாவாக ஐஸ்வர்யா.. யதார்தமான அம்மாவாக மிளிர்கிறார். பிச்சைக்காரனை கூட்டிவரும் போது கண்களாலேயே முறைக்கும் இடம் அருமை. மகளின் காதலை பக்குவமாக ஏற்றுக்கொண்டு அவர்களது குடும்பத்தோடு ஒட்டி உறவாடும் இடத்தில் தனது அருமையான நடிப்பால் கவர்கிறார்.

யாருடைய நடிப்புக்கும் நான் சளைத்தவன் அல்ல என்பதாக அமைந்திருக்கிறது குமரவேலுவின் ஆக்டிங். பிச்சைக்காரனாக இருந்தாலும் சர்வ அலட்சியத்தோடு தான் டி.வி யில் கிரிக்கெட் பார்க்கிற விஷயத்தை சிலாகித்து சொல்லும் போதும் "மெட்ராஸ்ல சர்ச்பார்க் கான்வெண்ட் பக்கத்துல உட்கார்ந்து பிச்சையெடுத்தேன்.. கிளைமேட் ஒத்துக்கல. அதனாலத்தான் ஊட்டிக்கு வந்தேன் " என்று சொல்லும்போது சிரிப்பு பீரிட்டு கிளம்புகிறது. மேலும் பிரகாஷ்ராஜிடம் த்ரிஷாவைக் காட்டி "இவங்க உங்களுக்கு வேணும்னா பொண்ணு – எனக்கு அம்மா" என்று கூறும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

புதுமுகம் கணேஷ் வெங்கட்ராமன் சூப்பர்.  தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உண்டு. சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் மனதில் பதிகிறார் தலைவாசல் விஜய். சர்தார்ஜிகளை மட்டமாக எண்ணி அவர்களைக் கிண்டலடித்தே ஜோக் சொல்லியே பழக்கப்பட்ட நம்மவர்களுக்கு சர்தார்ஜிக்களை பற்றி இவர் கூறும் உண்மைகள் பளார் என் அறைகிறது.

வித்யாசாகர் இசையில் 'ஒரே ஒரு ஊரிலே' பாடலும் பின்னணி இசையும் அற்புதம். பிரீத்தாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் யதார்த்தமான – நகைச்சுவை உணர்வு மிக்க, அப்பா மகள் பாசத்தை விளக்கும் ஒரு அருமையான படத்தை கொடுத்ததற்காக தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் மற்றும் இயக்குனர் ராதாமோகனுக்கு பாராட்டு பத்திரங்கள் பல வழங்கலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 12, 2010 @ 8:51 am