தேவை பலமான எதிர்கட்சி

 

சமீபத்தில் மாநில எதிர்கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து மத்திய அரசு எடுத்த சர்வேயில் பல மாநிலங்களிலும் எதிர்கட்சிகளின் நிலை பரிதாபகரமாக இருப்பதாக தெரியவந்துள்ளதாம். பீகார், தமிழகம், உ.பி போன்றவை இப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்கள். அதைப்போலவே பலமான எதிர்கட்சி உள்ள மாநிலங்களின் பட்டியலில் மேற்குவங்கம், காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இடம் பிடித்துள்ளன.

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமை சரியாக செயல்படாததால் அக்கட்சி தொண்டர்களே பலத்த சோர்வடைந்துள்ளார்கள். தலைவி எப்போது என்ன செய்வார் / எங்கே இருப்பார் என்பதே சரியாக தெரியாத நிலையில் அ.தி.மு.க தொண்டர்கள் குழாயில் தண்ணீர் வராததற்கும், கொசு மருந்து அடிக்காததற்குமாக போராட்டம் நடத்தி தாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளும் நிலையில் உள்ளார்கள். நிலை இப்படி இருக்க தி.மு.க தலைமையை திட்டமிட்டு சரியான முறையில் எதிர்க்கும் வழி தெரியாமல் அவர்கள் தடுமாறுவது ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் நன்றாகவே தெரிகிறது. கிட்டத்தட்ட இதே நிலைதான் பீகார் மற்றும் உ.பியில். மாயாவதி ரூபாய் நோட்டால் மாலை போட்டுக்கொண்டாலும், எடைக்கு எடை தங்கம் வாங்கினாலும் மக்கள் மத்தியில் அவருக்கு எதிராக ஒரு பலமான புரட்சியை உண்டுபண்ண முடியாத நிலையில் உள்ளார் முலாயம்.  பீகாரில் லல்லுவின் நிலையும் கிட்டத்தட்ட ஜோக்கர் மாதிரிதான் உள்ளது. நிதீஷ் அரசுக்கு எதிராக எந்த ஒரு பலமான குற்றச்சாட்டையும் வைக்கமுடியாமல் தனது முந்தைய ஆட்சி ஊழல்களை மறைக்கும் முயற்சியிலேயே திணறிக்கொண்டிருக்கிறார் லாலு.

மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி – பலமான எதிர்கட்சி இருந்தால்தான் ஆட்சி சரியான முறையில் நடக்கும். எதிர்கட்சி சரியாக செயல்படாவிட்டால் ஆளும் கட்சி என்ன செய்தாலும் அது சரி என்ற நிலைதான் ஏற்படும். ஆளும் கட்சியின் முறைகேடுகளை மக்கள் மத்தியில் பலமான எதிர்கட்சியால்தான் சரியான முறையில் எடுத்துசொல்லமுடியுமே தவிர பலமற்ற எதிர்கட்சி என்னதான் உண்மைகளை மக்கள் முன் எடுத்து வைக்க முயன்றாலும் அதற்கு சரியான மரியாதை இருக்காது. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது மக்களுக்கு மட்டுமல்ல பலவீனமான எதிர்கட்சிக்கும் ரொம்பவே பொருந்தும். ஆட்சியில் இருந்தால்தான் நாங்கள் அசகாயசூரர்களாக இருப்போம் – பதவி இல்லாவிட்டால் பல்லைப் பிடுங்கிய பாம்பு என்ற நிலை எதிர்கட்சிகளிடம் நீடித்தால் மீண்டும் ஆளும் கட்சியாக அவர்கள் அமரவே முடியாது. 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 24, 2010 @ 7:35 pm