சூப்பர் ஸ்டார் ஆகணும் சார்
"சூப்பர் ஸ்டார் ஆகணும் சார். அதுதான் என் கனவு!" புதுமுகம் முதல் தளபதிகள் வரை நடிக்க வருபவர்களின் கனவு இதுதான்.
சூப்பர் ஸ்டார் ஆவது என்றால் என்ன ? தொடர்ந்து வசூல் மன்னனாகத் திகழ்வதா ?
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பாடியே மக்களைக் கவர்வதா? எம்.ஜி.ஆரைப் போல சண்டைக்காட்சிகளால் மனங்களை வெல்வதா? ரஜினியைப் போல ஸ்டைல்களால் ஈர்ப்பதா?
இதற்கு ஒரு சிலர் ஆம் என சொல்லக் கூடும். அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, பெண்கள் பின்னால் சுற்றியவர் என பெயரெடுப்பதா?
எம்.ஜி.ஆரைப் போல பிடிக்காத தயாரிப்பாளர்களை, நடிகர்களை ஓரங்கட்டியவர் என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல அரசியல் ஸ்டண்டுகளால் படங்களை ஓட வைப்பவர் என்று பெயரெடுப்பதா?
இப்படி பெயர் எடுத்தால் அவர் சூப்பர் ஸ்டார் அல்ல என்றுதான் பலரும் சொல்வார்கள். சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
சூப்பர் ஸ்டார் ஆவது
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, 5 தீபாவளி கண்ட வெற்றிப் படத்தை தருவதா?
எம்.ஜி.ஆரைப் போல சினிமாவில் பிரச்சாரம் செய்தே தமிழக முதல்வர் ஆவதா?
ரஜினியைப் போல வெளிநாடுகளிலும் புகழ் பரப்புவதா?
இந்தக் கேள்விக்கு பதிலாக மூன்றையுமே அனைவரும் பதிலாகச் சொல்வார்கள். சரி, அதே கேள்வியை மேலும் நீட்டித்தால்?
சூப்பர் ஸ்டார் ஆவது . . .
எம்.கே. தியாகராஜ பாகவதர் போல, கொலை வழக்கில் சிக்கி ஏழையாக வாழ்ந்து மடிவதா?
எம்.ஜி.ஆரைப் போல அட்டைக் கத்தி, வாய் உளறும், நடிக்கவே வராது என்று பெயரெடுப்பதா?
ரஜினியைப் போல மென்டல், கன்னடத்துக்காரன் என்று விமர்சனத்துக்கு உள்ளாவதா?
இந்த மூன்றில் எதையுமே ஒரு சூப்பர் ஸ்டாரின் தகுதியாக எவருமே ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் மேலே உள்ள முரண்பாடுகள் அத்தனையையும் கொண்டவர்கள்தான் சூப்பர் ஸ்டார்களாக நம்மிடையே இருக்கிறார்கள். வெற்றியடையும்போது சிகரங்களையும், தோல்வியின்போது அதல பாதாளங்களையும் அவர்கள் கண்டிருக்கிறாரகள், மீண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் கனவு காணும் ஒவ்வொருவரும் அவர்களுடைய வெற்றிகளை மட்டுமே பார்க்கிறார்கள். அந்த வெற்றிக்கான போராட்டங்களும், இழப்புகளும் மற்றவர்கள் கண்களுக்கு தென்படுவதே இல்லை. அதை விட முக்கியம், வெற்றி பெற்ற பின் அதை தக்க வைக்கும் போராட்டம்.
தோல்விக்கும், இழப்புகளுக்களை எதிர்கொள்ள ரெடியா ? அப்போ நீங்களும் சூப்பர் ஸ்டார் ஆக முயற்சி செய்யலாம்.