விண்ணைத் தாண்டி வருவாயா

 

படத்தின் தலைப்பே சர்க்கரையாக இனிக்கிறது. மனதை மயிலிறகால் வருடி விட்டுச் செல்லும் உணர்வு படத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிறது. கார்த்திக்காக சிம்பு, ஜெசியாக திரிஷா இவர்களுக்குள் ஏற்படும் காதல் நிகழ்வுகளைச் சுற்றியே படத்தின் முழுக்கதையும் நகர்கிறது. இந்தக் காதலர்களின் தவிப்பும் துடிப்பும் காதலில் விழாதவரையும் காதலின் வலியை உணரச் செய்யும் அழகிய அவஸ்தை தருணங்கள்.

மலையாள் கிறிஸ்தவப் பெண்ணான மாடி வீட்டு ஜெசியின் மேல் மெக்கானிக்கல் எஞ்சினியரும் உதவி இயக்குனருமான கார்த்திக்கிற்குக் காதல். ஜெசியின் அழகில் பார்த்ததும் பற்றிக் கொள்ளும் கார்த்திக்கின் மனது அவரது காதலைப் பெறத் துடிக்கிறது. ஓடிப் போன சகோதரி, அப்பா-அண்ணன் மேல் உள்ள பயம் காரணமாகக் காதலை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் ஜெசியின் உள்ளத்திலும் கார்த்திக் காதல் சூறாவளியை ஏற்படுத்தி விட்டுச் செல்ல மிச்சம் மீதி சுவாரஸ்யங்கள் அடி மனதில் பாரத்தை ஏற்றி விட்டுச் செல்கிறது. 

படம் பார்த்து முடித்ததும் காதல் நாவலைப் படித்த உணர்வு ஏற்படுகிறது. சிம்பு கச்சிதமாகக் கார்த்திக் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்துகிறார். உணர்ந்து நடித்திருக்கும் சிம்பு இதே நடிப்பை இனி வரும் படங்களிலும் வழங்கினால் சிறந்த திறமை வாய்ந்த நடிகராகத் திரையுலகைக் கலக்கும் வாய்ப்பிருக்கிறது. காதலில் உருகுவதும் பிரிவைத் தாங்க முடியாமல் வேதனைப்படுவதும் அட சிம்புவின் கண்களும் உடலும் படம் முழுக்க நடித்திருக்கிறதே.தன் விரல் வித்தைகளையும் ஹீரோயிசங்களையும் மூட்டை கட்டி வைத்து இயக்குனரின் செல்லப்பிள்ளையாக அழகாக நடித்திருக்கிறார். தேவதையாகத் திரிஷா சிம்புவின் மனதை மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகனின் மனதையும் காயப்படுத்தி விட்டுச் செல்கிறார். கண்களின் சுருக்கம் இவரின் வயதைக் காட்டிக் கொடுத்தாலும் ஜெசியாக வாழ்ந்து தன் பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். இவருக்குப் பாடகி சின்மயியின் பின்னணி குரல் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.'அபியும் நானும்', 'விண்ணைத் தாண்டி வருவாயா' என்று அருமையான படங்களைத் தேர்ந்தெடுத்து அழகாக நடித்து ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் குடியேறியிருக்கிறார். சிம்புவின் நண்பராக வரும் கணேஷ் அழகாக நடித்து பாராட்டுக்களை அள்ளிக் கொள்கிறார்

'உன்னை எந்தப் பையனும் சைட் அடிக்க்லையா?' என்ற சிம்புவின் கேள்விக்கு 'அவங்கலாம் உன் கண்ணாலே என்னைப் பார்க்கலை போல' என்ற திரிஷாவின் பதில் அழகான ஹைக்கூ. படம் நெடுகிலும் ஆங்காங்கே கவிதைத் துளிகள். யதார்த்தமான-மென்மையான  காதல் கதையைச் சுவாரஸ்யமாகத் தந்திருக்கும் இயக்குனர் கெளதமிற்குப் பாராட்டுகள்.ஏ.ஆர்.ரகுமானின் இசை ராஜ்ஜியம் அற்புதம். ஆஸ்கார் கிடைத்த மகிழ்ச்சியில் ரகுமான் அதிக சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் இசையமைத்திருப்பார் போல. பாடல்களும் பின்னணி இசையும் ராகசங்கமம். 'ஹோசன்னா','ஓமனப்பெண்ணே' பாடல்கள் அழகான மெட்டுக்கள்.

மனோஜ்ஜின் ஒளிப்பதிவில் கேரளாவின் அழகு பூலோக சொர்க்கம். இவர் ஒளிப்பதிவும் கதையுடன் ஒன்றிப்போக ஒரு காரணம். திரிஷாவிற்கும் சிம்புவிற்குமான நளினி ஸ்ரீராமின் ஆடைகளின் வடிவமைப்பு அற்புதம். 

படத்தின் நீளத்தை இன்னும் சுருக்கியிருந்திருக்கலாம். படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய தொய்வு நிலை, மருந்திற்குக் கூட காமெடி இல்லாத நிலை, இடைவேளைக்குப் பிறகு திரிஷாவும் சிம்புவும் சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், மற்ற பாத்திரங்களுக்கு முக்கியத்துவமின்மை,கெளதம் மேனன் படங்களுக்கே உண்டான பாத்திரங்களின் ஆங்கிலக்கலப்பு ஆகியனவற்றைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

படத்தின் கிளைமாக்ஸை அனைத்து தரப்பினருக்கும் புரிகிற மாதிரி மாற்றியிருக்கலாமோ என்ற சிறு குறைகள் மட்டுமே படத்தில் நெருடலான விஷயங்கள். மற்றபடி தரமான அழகான காதல் படத்தைப் பார்த்து விட்ட திருப்தி.

சிம்பு+திரிஷா+ஏ.ஆர்.ரகுமான்+கெளதம் மேனன்+ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா ஆகியோரின் அர்ப்பணிப்பும் மெனக்கெடலுமே படத்திற்கு நிறைவையும் அழகையும் தந்திருக்கிறது என்றால் மிகையல்ல. 

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “விண்ணைத் தாண்டி வருவாயா

 • May 28, 2010 at 8:16 am
  Permalink

  Dear Akka,

  Thalaivar padam solave vendam..Really simbhu is a hero opt for all types of roles,including anti role…Nanga fan akara thuku munnadi oru thana nala research panit than aguvom..Sakkala vallavan!
  Regards,
  R.Aravndbalaji

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 6, 2010 @ 3:39 pm