சீறும் சிறுத்தை – கங்குலி

கோல்கததா க்நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2010 போட்டிகளில் மற்றும் ஒரு வெற்றி பெற்றது. மேம்போக்காக பார்த்தால் கோல்கத்தா அணி தில்லி அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என வெறும் புள்ளிவிபரக் கணக்காகத் தெரியும்  2008 ஆம் ஆண்டிம் மெக்கல்லமின் அதிரடி முதல் ஆட்டத்தைத் தவிர ஏனைய பெரும்பாலான ஆட்டங்களில் தோற்று கோமாளியைப்போல வெளியேறிய கோல்கத்தா போனவருடமும் பெரிதாகச் சாதிக்கவில்லை. அணி வீரர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திராத மெக்கலலம் அணியின் தலைவராகப் பொறுப்பேற்றாலும் கோமாளி அணிக்கு மற்றொரு மகுடமாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போன வருட ஆட்டங்களில் கடைசி இடம் தான் கிடைத்தது. அணியின் உரிமையாளர் ஷாருக்கானின் சேட்டை வேலைகளும் 'புரளி' ஐபில் ஆட்டக்காரரின் வலைப்பதிவுகளும் கோமாளி என்ற அடையாளத்திற்கு மேலும் வலுசேர்த்தது. 

மீண்டும் வந்தது 2010 ல் ஐபில் , சௌரப் கங்குலி அணியின் தலைவராக்கப்பட்டார். வாசிம் அக்ரம் பந்து வீச்சுக்கு பயிற்சியாளராக உள்ளே வந்தார். ஷாருக்கான் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். 37 வயதில் ஆமை வேக ஆட்டம், நூடுல்ஸ் சமைக்கும் நேரத்தில் உள்ளேப் போய் வெளியே வருகிறார் வழக்கமான கேலிகள், ஆட்ட வர்ணனைக்குப்போகலாம் என்ற அறிவுரை வேறு, கங்குலியின் பலமே எப்பொழுதெல்லாம் அவரை மட்டம் தட்டுகின்றனரோ அப்பொழுதெல்லாம் சிறுத்தையாய் சீறி வருவார். சேப்பல் உடன் ஆன தகராறுக்குப் பின் கிரன் மோர்ரே கும்பலால் கட்டம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்குப்பின் திரும்ப வந்து டெஸ்ட் ஆட்டங்களிலும் ஒரு நாள் ஆட்டங்களிலும் கலக்கு கலக்கியவர் என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.  

எள்ளல் பேச்சுகளுக்கும் கேலி கிண்டல்களுக்கும் தனது மட்டையால் பதில் சொல்லி வருகிறார். இதுவரை ஆடியுள்ள பத்து ஆட்டங்களில் 3 அரைசதங்களுடன் (அதிக பட்சம் 88) 333 ஓட்டங்கள் எடுத்து  அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் நான்காவது இருக்கிறார். 

இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றால் அல்வா சாப்பிடுவது போல அதிரடியாக ஆடும் கங்குலி இரண்டாவது ஓவரை வீசிய வெட்டோரியின் மூன்று பந்துகளை பௌண்டரிக்கு அனுப்பி கிறிஸ் கெய்லுடன் இணைந்து மற்றொரு நல்ல துவக்கத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது அரை சதக் கணக்கையும் உயர்த்திக் கொண்டார். பஞ்சாபுடன் நடந்த ஆட்டத்தில் தோற்றாலும் , அதற்கு முந்தைய தக்காண அணியுடன் ஆடிய ஆட்டத்தில் 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை வாங்கிய கங்குலி இன்றும் கம்பீரை ரன் அவுட் செய்ததன் மூலமும் , தலைக்கு மேல் சென்ற பந்தை அலேக்காக எம்பிப் பிடித்து தனக்கு களத்தடுப்பும் வரும் என நிருபித்துள்ளார். தொடர்ந்து வரும் ஆட்டங்களில் பெங்களூர் , சென்னை, மும்பை , ராஜஸ்தானுடன் மோத வேண்டியுள்ள கோல்கத்தா அணி, ஏதேனும் மூன்று போட்டிகளில் வென்றால் அரையிறுதிப்போட்டியில் நுழைய பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது. கங்குலியின் தலைமைப் பண்பு மட்டும் அல்ல, மட்டையும் தொடர்ந்து பிரகாசித்தால் அது கைக்கெட்டப்போகும் கனிதான்.

2008 ஆம் ஆண்டில் கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற பெங்களுர் , தக்காணம்( ஹைதராபாத்) அணிகள் 2009 ஆம் ஆண்டுப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் ஆடின. அதேபோல 2009 வருடத்தில் கடைசி இரண்டு இடங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் மும்பையும் சௌரப் கங்குலியின் கோல்கத்தாவும் இறுதிப்போட்டியில் மோதினால் அற்புதமான ஐபிஎல் ஆக நிறைவுறும் என்பதில் வியப்பில்லை.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “சீறும் சிறுத்தை – கங்குலி

  • November 19, 2010 at 3:38 am
    Permalink

    always mass player in ganguly

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 7, 2010 @ 7:54 pm