தமிழக காங்கிரஸ்

பீகார், உத்திரப்பிரதேசத்தை அடுத்து தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்தும் நோக்கத்தில் தமிழக விஜயம் செய்யும் ராகுல் காந்தியின் முயற்சி வரவேற்கத்தக்க விஷயம். கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் கழக ஆட்சிக்குத் துணை போனதைத் தவிர வேறு ஒன்றையுமே சாதிக்காத – கோஷ்டிப்பூசல்களால் மக்களிடையே மதிப்பிழந்து போன தமிழக காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக கண்டித்ததோடு கட்சிப்பொறுப்பாளர்களை இனி இளைஞர் காங்கிரஸ் தான் வெளிப்படையான தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி கட்சியை பலப்படுத்தினால் நிச்சயம் தமிழகத்தில் தனித்து ஆட்சியைப் பிடிப்போம் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் – கட்சியை அகில இந்திய அளவில் பலப்படுத்தவேண்டும் என்பதற்காகவே தன்னைத் தேடிவந்த அமைச்சர் பதவியைக் கூட மறுத்த ராகுலின் நடவடிக்கை நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும். ராஜீவிடம் காணப்பட்ட உற்சாகத்தை விட பல மடங்கு அதிக உற்சாகத்தையும் பொறுப்புணர்சியையும் இன்று ராகுலிடம் காண்கிறோம். இது டெல்லி அரசியல்தலைவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். உத்திரப்பிரதேசத்திலும் பீகாரிலும் எங்கே என்று தேடவேண்டிய நிலையில் இருந்த காங்கிரஸ் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்க ராகுலின் முயற்சிகளே பெரும் காரணம் என்றால் அதில் மிகையில்லை.

கோஷ்டிப்பூசலாலேயே தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்கும் வாய்ப்பை காங்கிரஸார் இழந்தனர். மேலும் தி.மு.க அ.தி.மு.க இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி வைத்துதான் கதையை ஓட்டி வந்துள்ளார்களே தவிர தனித்து நிற்க ஒருபோதும் முயன்றதில்லை.. இவ்வளவு ஏன் – காங்கிரஸார் போட்டியிடும் தொகுதியில் கூட கூட்டணிக்கட்சிகள் தான் மாங்கு மாங்கென்று வேலை செய்வார்களே தவிர கோஷ்டிப்பூசல் நிபுணர்களான காங்கிரஸார் ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார்கள். இது பலகாலமாக நாம் பார்த்துவரும் ஒரு  நிகழ்வுதான். அகில இந்திய அளவில் காங்கிரஸில் கோஷ்டிப்பூசலில் முதலிடம் தமிழகத்திற்குத்தான். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவே முடியாது.

தமிழக நிலை இப்படி இருக்க கோஷ்டிப்பூசலைத் தவிர்க்க வேண்டும் – இளைஞர்களை முன்னிருத்தி காங்கிரஸை வளர்க்கவேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை தமிழக தலைவர்கள் எப்படி நிறைவேற்றப்போகிறார்கள் என்பதில் தான் உள்ளது தமிழகத்தில் தனித்து ஆட்சி என்ற ராகுலின் கனவு. மேலும் தற்போதைய அரசியல் சாணக்கியரான தி.மு.க தலைவரும், சமயம் கிடைத்தால் காங்கிரஸூடன் ஒட்டிக்கொள்ள நினைக்கும் அ.தி.மு.க தலைவியும் காங்கிரஸை எந்த காலத்தில் தனித்து போட்டியிட அனுமதிப்பார்கள் என்பதும் கேள்விக்குறியான விஷயம்.

டெல்லி மேலிடம் சாட்டையைக் கடுமையாக சுழற்றி தமிழக காங்கிரஸ் கோஷ்டிப்பூசலுக்கு ஒரு முடிவு கட்டினால்தான் ராகுலின் இந்தக்கனவு நிறைவேறுமே தவிர சாமான்யமாக நிறைவேற சாத்தியமே இல்லை. உ.பி மற்றும் பீகாரில் மாயாஜாலம் காட்டிய ராகும் தமிழகத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:40 pm