மத்திய மந்திரியின் சிறுபிள்ளை செயல்

தன் மகனை லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ கைது செய்ததை கண்டித்துப் பேசியுள்ள பூட்டாசிங் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியதோடு ராஜினாமா செய்யுமாறு தன்னை யாராவது நிர்பந்தித்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். பல முறை மத்திய அமைச்சராக இருந்துள்ள ஒரு பொறுப்பான நபர் பேசும் பேச்சா இது ?

தன் மகன் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை பூட்டாசிங்கிற்கு உள்ளது. அப்படி செய்ய முடியாவிட்டால் அவரே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டுமே தவிர ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம்பிடிப்பதோ – தற்கொலை செய்துகொள்வேன் என்று பிதற்றுவதோ சரியல்ல.. மத்திய அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பெரும்பான்மையான நேரங்களில் மெளனம் கடைபிடிக்கும் பிரதமர் பூட்டாசிங்கின் பேச்சிற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கவேண்டும்.

யாராவது ஒருவர் தன்னைப் பற்றி குற்றம் சொன்னாலே அமைச்சராக இருந்தவர் ராஜினாமா செய்தது அந்தக்காலம் (உதாரணம் லால் பகதூர் சாஸ்திரி). குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குப் போனாலும் விடாப்பிடியாக மந்திரிப்பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தக்காலம் (சிபுசோரன்).  இதில் தற்கொலை மிரட்டல் விடுத்து மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பூட்டா செய்யும் தந்திரத்தை வம்பு வழக்குகளில் சிக்கி கம்பி எண்ண காத்திருக்கும் மந்திரிகள் எத்தனை பேர் தொடரப்போகிறார்களோ தெரியவில்லை. இதற்கு சரியான கடிவாளம் போட பிரதமர் முன்வரவேண்டும்.

ஒரு குறிப்பு : பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்துள்ள தமிழக முதல்வர் இது தனது 18 வருட கனவு என்றும் அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது என்றும் கூறியுள்ளார். திருவள்ளுவர் சர்வயஞ்ர் சிலையைத் திறப்பதில் காட்டும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பகுதியாவது காவிரிப் பிரச்சனையைத் தீர்ப்பதில் இரு மாநில முதல்வர்களும் காட்டினால் தமிழக மக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 6:43 pm