தேன் கூட்டில் கைவிட்ட கதை

தேன் கூட்டில் கை விட்ட கதையாக ஆந்திராவைப் பிரிக்க மத்திய அரசு செய்த முடிவினால் ஆந்திரா முழுவதும் ஏற்பட்ட கொந்தலிப்பு கொஞ்சமும் குறையாத நிலையில் இரண்டு நாட்களில் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வை மத்திய அரசு அறிவிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார். அவசர அவசரமாக மாநில நிலைமை குறித்து சரியாக ஆராயாமல் ஒரு சாராரை திருப்தி படுத்த மத்திய அரசு அறிவித்த தனித்தெலுங்கானா ஆந்திரா முழுவதுமே தற்போது வெடித்துவரும் ஆதரவு – எதிர்ப்பு வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது துரதிஷ்டமானது. ஐம்பதாண்டுகளாக இருக்கும் பிரச்னைக்கு, ஒரே நாளில் தீர்வு காண மத்திய அரசு முயன்றதுதான் இத்தனை வன்முறைகளுக்கும் அடிகோலியுள்ளது.

சர்தார் பட்டேலின் முயற்சியால் ஒன்றுபட்ட இந்தியாவாக 1947ல் மலர்ந்த நம் நாடு மொழிவாரி மாநில சீரமைப்பில் முதல் பிரிவினை அடைந்ததே ஆந்திராவால்தான். பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரத பலனாக, மொழிவாரி மாநிலமாக, முதன் முதலில், 1953ல் பிரிக்கப்பட்டு, இன்று 28 மாநிலங்கள், ஏழு யூனியன் பிரதேசங்களுடன் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம். தற்போதுள்ள மாநிலங்களிலேயே எத்தனையோ பிரச்னைகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கேரளா – தமிழ்நாடு பெரியாறு அணை பிரச்னை, காவிரி நதி நீர் பிரச்னை, இன்னும் பல்வேறு பிரச்னைகள். இதன் மூலம் வெடிக்கும் வன்முறைகளில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான்.

தனித்தெலுங்கானா மட்டும் வந்தால் எல்லா மாநில அரசியல்வாதிகளும் தத்தமது ஜாதி வாரியான மாநிலத் துண்டுகள் கேட்பது மறுக்க முடியாததாகிவிடும். அவர்களுக்கு தனி தெலுங்கானா ஒரு முன் உதாரணமாகிப் போகும். அரசியல் நடவடிக்கைகள், சட்ட திட்டங்கள் போன்றவை தொலைநோக்கு பார்வை உடையதாய் இருக்க வேண்டுமேயொழிய சுயலாப பங்கீடுகளாக இருக்கவே கூடாது. மத்திய அரசும் ஆந்திர மாநில அரசும் முயன்றால் தெலுங்கானாவில் நல்ல நிர்வாகத்தைக் கொண்டுவந்து அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியாதா??

தனி மாநில கோரிக்கை அப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுகிறதோ இல்லையோ – அப்பகுதி அரசியல்வாதிகள் தங்களது சொத்துக்களை கணிசமான அளவில் அதிகரித்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. ஜார்கண்ட் தனி மாநிலமாக என்ன முன்னேற்றத்தைக் கண்டதோ தெரியாது – ஆனால் அம்மாநில முதல்வராக 2 ஆண்டுகளுக்கும் குறைவாக பதவி வகித்தவர் கின்னஸின் இடம் பெறும் அளவிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஊழல் செய்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில், வன்னியருக்கு தனி மாநிலம் கேட்டார் ராமதாஸ். இது தொடர்கதையாகி, கவுண்டர், தேவர், நாயக்கர், செட்டியார், ஆச்சாரி என்று பட்டியல் நீளும். இனி, தெலுங்கானா பிரிக்கப்பட்டால், தொடர்ந்து மேற்கு வங்கம் அருகே உள்ள கூர்கர்கள், தங்களுக்காக தனி நாட்டையும், அடுத்தது மகாராஷ்டிரம் என கோரிக்கைகள் வலுக்கும்.

அப்படி மீண்டும், மீண்டும் நம் நாடு பிரிக்கப்பட்டால் கி.பி.1600ல் எப்படி 566 சிற்றரசுகள் இருந்தனவோ, அதே போல் இந்தியா ஆகிவிடும். எப்போது நேரம் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானும், சீனாவும், எளிதில் நம் நாட்டை கசக்கி விடும் என்பதை ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டும்.

பாரதம், மீண்டும் ஒரு பிரிவினைக்கு ஆளாகக் கூடாது. இனி அடிமை நிலை வரக்கூடாது. சிந்திக்குமா மத்திய அரசு??

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 3, 2010 @ 5:58 am