மாண்ட்

இசை என்பது வெறும் கேளிக்கைக்கான விஷயம் அன்று. இறைவன் நாத வடிவானவன் என்று மறைகள் கூறுகின்றன. பாரதி, கலைவாணியை, "வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்" என்கிறார். ஒவ்வொரு ராகத்துக்குள்ளும் ஏதோ ஒரு ஆழ்ந்த தத்துவம் எங்கோ பொதிந்திருக்கிறது என்பது என் எண்ணம். இந்துமத தர்மத்தின்படி, இறைவனை அடைய 9 வழிகள். அவற்றுள் இசையையும் ஒரு வழியாக  குறிப்பிட்டுள்ளனர். தியாகராஜர், மீரா ஆகியோர், இப்படித்தான் இறையெய்தியதாக சரித்திரம். அத்தனை ராகங்களில் உள்ள தத்துவம் எல்லாம் விளங்க நான் ஞானி அல்ல. இருப்பினும், சில ராகங்களைக் கேட்க்கும்போது, ஏதோ ஒரு விஷயம் மனதுள் தோன்றும். அது என் பிரம்மையாக இருக்கலாம்! அப்படிப்பட்ட சில ராகங்களுள் ஒன்றுதான் மாண்ட்.

மாண்ட் சங்கராபரண ராகத்தின் ஜன்யம். இதை கேட்கும்போதெல்லாம் எனக்கு புத்தரின் தர்மச்சக்கரம் தோன்றும். வாழ்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது போல இந்த ராகத்தின் ப்ரயோகங்கள் அமைந்துள்ளது.

வள்ளலாரின், "வானத்தின் மீது மயிலாட கண்டேன்" என்ற பாடல், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களுள் பிரபலமான ஒன்று.

இந்த ராகம் திரையிசையில் ஓரளவு பிரபலமான ஒன்று. திருவிளையாடல் படத்தில் வரும் "ஒரு நாள் போதுமா" பாடலை தெரியாத நான்கு தமிழரைக் காட்டிவிட்டால் ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று தைரியமாகப் பந்தயம் கட்டலாம். இந்த ராகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த "அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி" பாடலைக் கேட்டால் அவருக்கு இசைப்புயல் என்ற அடைமொழி தவறோ, இசைத்தென்றல் என்று வைத்திருக்க வேண்டுமோ என்று சந்தேகம் வந்துவிடும். தன்னிடம் இருக்கும் மாணிக்கத்தை உணராதிருந்த கர்நாடகயிசை உலகுக்கு, கதிரி கோபால்நாத் என்ற கலைஞரை அடையாளம் காட்டிய 'டூயட்' படத்தின் அற்புதமான பாடல் இது. தாலாட்டுவது போன்ற மென்மையான 'saxophone' இசையும், சித்ராவின் தேன்மதுரக்குரலும் பாடலின் முன்னிசையை நிரப்புகின்றன. காதலில் கரையும்  காதலனின் நிலையை 'பாடும் நிலா' பாலுவின் குரல் அழகாகப் பிரதிபலிக்கிறது. பாடலின் இடையிசையில் சித்ரா மயிலிறகால் வருடுவதுபோல் மாண்ட் ராகத்தின் வெவ்வேறு பிரயோகங்களை படம் பிடித்துக் காட்டுகிறார்.

பாடலின் இரண்டாவது இடையிசையில், அற்புதமான குழலிசை கிறங்க அடிக்கிறது. ஆழ்ந்து கவனித்தால், அந்த குழலிசை மாண்ட் ராகத்தில் அமைவதில்லை. ஒரு திரையிசையமைப்பாளனுக்கு பாடல் காட்சியாக்கப்பட்ட விதம், சூழ்நிலை, கதையின் ஓட்டம், போன்று பல விஷயங்களை மனதில் கொண்டும் பாடலமைக்க வேண்டியிருக்கிறது. அந்த பாடலின் சூழ்நிலைக்கு இந்த குழலிசை சரியாகத்தான் பொருந்துயுள்ளது. இப்படி ராகத்தை விட்டு வெளியில் செல்வதில் தவறொன்றும் இல்லை. இப்படி கர்நாடகயிசைக் கச்சேரியில் செய்திருந்தால் தவறென்று கூறலாம். சினிமாவில் இப்படி செய்ததற்காக, (சிலர் கூறுவது போல்) "மாண்ட் மாண்டுவிட்டது", "கேதாரத்துக்குச் சேதாரம்" என்றெல்லாம் கூறுவது நியாயமன்று.

"என்னவோ என் நெஞ்சினில் இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது"

ஆஹா! பாடலுக்கு ஜீவன் சேர்த்த வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஒரு ஷொட்டு!

தொடரின் இந்த இடத்தில் இன்னொன்றும் கூறிவிடுகிறேன். இந்த தொடரின் நோக்கம், ராகங்களை உங்களுக்கு புரிய வைப்பதே. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரும்பாலும் ஒரே பாடலுள் பல ராகங்கள் கொண்ட கலவையாக இருப்பதால், குழப்பம் தவிர்க்க வேண்டி இங்கு அதிகம் இடம் பெறாமல் போகலாம். இதனால் அவரைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அவருடைய ரசிகர்கள் நினைத்துவிடக்
கூடாது.

சங்கமம் படத்தில் வரும் " சௌக்கியமா கண்ணே" பாடலும், பழைய பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு" என்ற அம்பிகாபதி படத்தில் வரும் பாடலும், இந்த ராகத்தில் அமைந்தவையே!

அடுத்த வாரம் சிந்து பைரவி ராகத்தை பற்றி பார்ப்போம்.

இந்த ராகத்தை கேட்க கீழே கிளிக்கவும். (நன்றி : ஷீலா ராமன்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 14, 2010 @ 10:45 pm