மனிதாபிமானமே உன் விலை என்ன ?
சில நாட்களுக்கு முன்பாக மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்தியா வந்த பிரபாகரனின் தாயாரை அவசர கதியில் திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமானநிலைய அதிகாரிகள். 80 வயது உடல் நிலை சரியில்லாத ஒரு மூதாட்டியை விரட்டாத குறையாக வெளியேற்றுகிற அளவுக்கு காட்டுமிராண்டிகளாக ஆகிவிட்டார்களா நம் தமிழக ஆட்சியாளர்கள்?? தன்னை நோக்கி கேட்கப்படும் கேள்விகளை திசை திருப்புவதில் வித்தகரான கருணாநிதி ''பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது நள்ளிரவு வரை தெரியாது” என சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார்..
எப்பேற்பட்ட வடிகட்டிய பொய் இது? தமிழக முதல்வருக்கு தெரியாமல் நடக்கக்கூடிய விஷயமா இது? நள்ளிரவில் விமான நிலையத்தில் வைகோ விற்கு எதிராக போலீஸ் படை ஏன் குவிக்கப்பட்டது? தன் மாநில தலைநகர விமான நிலையத்தில் என்ன நடக்கிறது என்பது கூட ஒரு முதல்வருக்கு தெரியவில்லை என்றால் – அதுவும் உள்துறை, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பவருக்குத் தெரியவில்லை என்றால் அவர் அந்த பதவிக்கே லாயக்கல்ல.
இவருக்கு ஜால்ரா அடிக்க ராமதாஸ் வேறு – ”பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட தற்கு தமிழக அரசோ தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை” என்று கூறி தி.மு.க கூட்டணியில் மீண்டும் துண்டு போடத் துடிக்கிறார்.
2003-ம் ஆண்டு பிரபாகரனின் பெற்றோர் இலங்கைக்கு சென்றவுடன் அன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை அனுப்பியது. 'மீண்டும் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் தமிழகம் வருவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. மத்திய அரசும் அதனடிப்படையில் தடை ஆணையைப் பிறப்பித்தது. அந்தத் தடை ஆணையின் அடிப் படையில் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படக் கூடாத நபர்களின் பட்டியலில் வேலுப்பிள்ளை
தம்பதியின் பெயரும் இடம் பெற்றுவிட்டது. தற்போதும் அதன் காரணமாகத்தான் விமான நிலைய அதிகாரிகள் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் – அவருக்கு உரிய விசா வழங்கப்பட்டிருந்தும்கூட! இதைக் காரணம் காட்டி தப்பிக்க கருணாநிதி முயல்வது அபத்தத்திலும் அபத்தம். தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கை வைத்து தன் குடும்பத்தாருக்கு பதவி வாங்குவதில் அவர் காட்டும் மும்முரத்தில் 1000ல் 1 பங்கைக் காட்டியிருந்தாலும் பார்வதி அம்மாள் சென்னையிலிருந்து நள்ளிரவில் திருப்பி அனுப்பட்டிருக்க மாட்டார்கள்.
2003ல் விடுதலைப் புலிகளின் நிலை வேறு – இன்றைய நிலை வேறு. அதிலும் ஒரு 80 வயது மூதாட்டி – தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளக்கூட இயலாத நிலையில் இருக்கும் அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகத்தான் இங்கு வந்தார். அதுவும் திருட்டுத்தனமாக கள்ளத்தோணியில் வரவில்லை, முறைப்படி விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, மலேசியாவிலிருக்கும் இந்திய தூதரகமும் மருத்துவ காரணங்களுக்காக ஆறு மாதங்கள் தமிழகத்தில் தங்கியிருக்க அவருக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,
சென்னை வந்துள்ளார்.
உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வரும் யார் யாருக்கோ தமிழகத்தில் ராஜவைத்தியம் நடந்து அவர்கள் மகிழ்வோடு திரும்பிச் செல்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ் மூதாட்டிக்கு நம் தமிழக அரசு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து இரவோடிரவாக மற்ற நாட்டிற்கு துரத்துகிறது. இதை விட வெட்கக்கேடான விஷயம் ஒன்றுமே இல்லை. இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வில் தமிழக அரசியல்வாதிகள் யாருக்கும் உண்மையான அக்கரை கிடையவே கிடையாது என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துள்ளது.
Politicians death rate is very low. I’m worried appreciate your article.