T20 உலகக் கோப்பை: ஒரு வாழ்த்தும், இரு மேட்ச் குறிப்பும்.

கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னர்களான இங்கிலாந்து கடைசியில் இன்று முடிசூடிக் கொண்டுவிட்டார்கள். 2010 T20 உலககோப்பை இறுதிப் போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை அநாயசமாக ஜெயித்து வரலாற்றில் இடம்பிடித்து விட்டார்கள். முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் ஆஸியின் மேல்தான் நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் ஆட்டநாயகன் கிரேக் கீஸ்வெட்டர் கம்பாக நின்று ஆஸ்திரேலியாவின் T20 சாம்பியன்ஷிப் கனவை தவிடுபொடியாக்கிவிட்டார். இங்கிலாந்திற்கு வாழ்த்துகள்.

அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒன்-சைடடாக நடந்து முடிந்த இறுதி ஆட்டத்தைவிட சென்ற வெள்ளிக்கிழமை நடந்த அரையிறுதி போட்டி கிரிக்கெட் விளையாட்டின் மேல் வைத்திருக்கும் நமது காதலை கொண்டாட்டமாக மாற்றி விட்டது. என்ன செய்வது… கிரிக்கெட்டில் அரசியல், மில்லியன் கணக்கில் ஊழல், தாதாக்களின் பெட்டிங், ஷாருக்கானின் Kidding, அராஜக ஹர்பஜனின் அலேக்கான அணைப்பு, சியர்லீடர்ஸ் சிருங்காரம் எல்லாம் தாண்டியும் சில சமயம் நிஜமாகவே கிரிக்கெட் விளையாடிவிடுகிறார்கள்.

இந்த வருட T20 உலகக் கோப்பையின் 'The Match' என்றால் 14-மே-2010 நடந்த பாக்-ஆஸி அரையிறுதி போட்டிதான். 2006ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஜோஹன்ஸ்பெர்கில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி நினைவிருக்கிறதா? முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 434 ஓட்டங்கள் எடுத்து ஒரு நாள் ODI வரலாற்றிலேயே அதிக ஓட்டங்கள் எடுத்த அணி என்று புதிய சாதனையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த சாதனையின் ஆயுள் அதிகபட்சம் 3 மணி நேரங்கள் கூட இல்லை. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா ஆர்பாட்டமேயில்லாமல் 438 ஓட்டங்களை எடுத்து ஆஸியை தோற்கடித்தார்கள். அன்று விட்டதை ஆஸி சென்ற வெள்ளிக்கிழமையில் பிடித்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!

அஞ்சாநெஞ்ச ஆஸிக்கள் அதிரடியாக அரையிறுதி போட்டியில் ஜெயித்தாலும் பாகிஸ்தானியர்களுக்கு உரிய பாராட்டுகளை தந்தே ஆக வேண்டும்.

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியினருக்கு என்ன சிக்கல்? என்று கேட்பதை விட என்ன சிக்கல் இல்லை என்று கேட்டால் சுலபமாக பதில் சொல்லலாம். 2010 IPLல் பங்கேற்க விருப்பம் தெரிவித்த பாக் ஆட்டக்காரர்களை ஏலத்தில் எடுக்க ஆளே இல்லை. போதும் போததற்கு ஆஸ்திரேலியா டூரில் முழுவதுமாக 'வெள்ளை அடித்துக்' (white wash) கொண்டு வெளிறிப் போய் வந்து பாகிஸ்தான் போர்டின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டார்கள். அஃப்ரிதி கிரிக்கெட் பந்தை கமர்கட் உருண்டையாக கடித்து கீ-ஹோல் கேமராவில் சிக்கிய சாமியார் போல பிரபலமாகியிருந்தாலும், அவர்தான் T20  உலக கோப்பை அணிக்கு கேப்டன். இத்தனை பின்னடைவுகளையும் தாண்டி தொடர்ந்து மூன்று உலகக் கோப்பையிலும் அரையிறுதிவரை வந்த அணி என்ற பெருமையை பெறுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு பாராட்டுகள்.

அரையிறுதி போட்டி: பாக் Vs ஆஸி

Peaking at the right time என்பார்கள். நீண்ட தூர ஓட்டபந்தயத்தில் தொடக்கதில் சமநிலையில் ஓடி பாதி தூரம் தாண்டிய பிறகு உத்வேகத்தை கூட்டி சக போட்டியாளரை தாண்டிச் சென்று இறுதிக் கோட்டை தொடுவார்கள். அது போல பாகிஸ்தான் சரியான சமயத்தில் ஆஸி அணியினருக்கு கிடுக்கிப் பிடி போட்டார்கள். டாஸை வென்ற கிளார்க் பாகிஸ்தானை பேட் செய்ய அழைக்க '20 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்தாலே பெரிய விஷயம். கடினமான ஆடுகளம்' என்று செயிண்ட் லூசியா ஆடுகளத்தைப் பற்றி சைமன் டோல் சொல்லிக் கொண்டிருந்தார். மழை பெய்ததினால் ஆட்ட தொடக்கம் தாமதப்பட்டு பாக்கிஸ்தானை பயமுறுத்தியது. ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் ஆஸி ஸ்ட்ரெய்ட்டாக ஃபைனல் போய்விடுவார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்த ஆட்டத்தில் மூன்றாவது ஓவரில்தான் முதல் பவுண்ட்ரி அடித்தது பாகிஸ்தான். பிறகு ஒரே ரன் மழைதான். ஓவருக்கு 8 ஓட்டங்கள் என்று சராசரியில் அடிக்க அரம்பிக்க ஆறாவது ஓவரில் மூத்த அக்மலுக்கு ஒரு கிச்சா கொடுத்து ஊக்குவித்தார்கள் ஆஸிக்கள். ஆனந்தப்பட்ட அக்மல் அடி பின்னி எடுத்து 32 பந்துகளில் 50 அடித்து தூள் கிளப்பினார். அடுத்து வந்து இளைய அக்மலோ அண்ணனின் காலடித் தடத்தில் தப்பாமல் நடந்து 29 பந்துகளிலே அரைசதம் அடித்து ஆஸிக்களை டரியல் ஆக்கினார். சகோதரர்கள் இணைந்து அடித்த நூறோடு, சல்மான் பட், அஃப்ரிதி, காலிஃப் போன்றோர் அவசரமாக சேர்த்த ஓட்டங்களோடு பாக் அணி 20 ஓவர்களில் 191 ஓட்டங்கள் எடுத்து கம்பீரமாய் தன் சவாலை ஆஸிக்கள் முன் வைத்தது. முந்தைய குரூப் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்த ஆஸி எடுத்திருந்த அதே ஸ்கோர். சராசரியாக ஓவருக்கு 9 ஓட்டங்களுக்கு மேலே எடுத்தால்தான் ஆஸி ஜெயிக்க முடியும். வலுவான சவால்தான்.

ஆஸ்திரேலியா இந்த முறை T20 கோப்பையை மிகவும் உறுதியான திட்டத்தோடே அணுகியிருந்தார்கள். கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா கைப்பற்றாத ஒரே கோட்டை 20-20 உலககோப்பை. இந்த ஆட்டங்களைப் பொறுத்தவரையில் ஓரிரு ஓவர்கள் போதும் வெற்றி-தோல்வி விகிதாச்சாரத்தை மாற்றிப் போட. அந்த pivotal ஓவர்கள் ஆட்டத்தின் எந்தப் பகுதியிலும் அமையலாம் என்பது நிச்சயமில்லாததன்மையை கூட்டுகிறது. முகமது ஆமிர் வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்டை சாய்த்துவிட்டார். ஒரு ரன்னிற்கு (அதுவும் எக்ஸ்ட்ராதான்) ஒரு விக்கெட்டை இழந்து அவலமாக நின்றது ஆஸ்திரேலியா.

நடுங்கும் முழங்கால்களை மறைத்துக் கொண்டு பொறுமையாக ஆடுகளத்தில் நின்று பந்தின் போக்கையும் களத்தின் தன்மையையும் புரிந்து கொண்டு, மோசமான பந்துகளை மட்டும் அடித்து… விக்கெட்டுகளை இழக்காமல் தற்காத்து… இருங்கள்.. இருங்கள்… அதெல்லாம் அந்தக் காலம் ஐயா. ஆஸிக்கள் தங்கள் ஹோம்வொர்க்கை சரியாகவே செய்து வந்திருந்தார்கள். இரண்டாம் ஓவருக்குள் ஒரு சிக்ஸர், மூன்று ஃபோர்கள் என்று தங்கள் ரன்ரேட்டை கூடுமானவரை உயரத்திலேயே வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஆனால் 'வெள்ளிகிழமை ஜின்க்ஸ் (jinx)' பாகிஸ்தானுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது. மூன்றாவது ஓவரில் வாட்ஸ்ன் காலி. ஆஸி கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்த டோர்னமெண்ட்டை பொறுத்தவரை "ரெட்டை லொட்டாங் காலோடு நடனம் ஆடிக் கொண்டிருந்தார்" (Dancing with two left feet). பாகிஸ்தானின் போதாத காலம் அவர் நிறைய நேரம் நின்று பந்துகளை வீணடிக்காமல் ஹாடினோடு சேர்ந்து அவரும் சீகிரமே ஆட்டமிழந்தார். 9 ஓவரில் 63 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆஸ்திரேலியா. பரிதாபமாக தோன்றவில்லை. ஏனென்றால் 20-20 போட்டிக்கென்றே நேர்ந்து விடப்பட்டு பொலிகாளைகளாக வளர்த்து வரப்படும் ஹுஸ்ஸே சகோதரர்கள், கேமரூன் வொயிட் போன்றோர் பெவிலியனில் கழுத்தை வளைத்து சொடக்குப் போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள். பாகிஸ்தான் இதுவரை சரியாகவே தனது பங்கை விளையாடிக் கொண்டிருந்தது. அணித்தலைவரான அஃப்ரிதியே முன்நின்று இரண்டு ஓவர்களில் 6 ஓட்டங்களை கொடுத்து கிளார்க்கின் விக்கெட்டையும் கைப்பற்றி பெரும் உந்துசக்தியாக இருந்தார். 

அடுத்து வந்த ஓவர்களில் வொயிட்டும் மைக்கேல் ஹுஸ்ஸியும் மாறி மாறி அடித்து நிமிர்த்தினாலும் பாகிஸ்தான் கை ஓங்கியே இருந்தது. மூன்றே ஓவர்களில் 48 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் சரியாக ஒரு விக்கெட்டையும் சாய்த்து ஆஸிக்கு நன்றாகவே ஆப்பு வைத்தார்கள். இந்த இடம்த்தில்தான் ஆஸி அணியினர் தங்களுடைய Temperament ஐ நிரூபித்தனர். மூன்றே மூன்று நல்ல பந்துகளில் ஆஸி ஆல்-அவுட் ஆகக் கூடிய சூழ்நிலையில் அஞ்சாமல், கவனம் சிதறாமல் 18ம் ஓவரில் 14 ஓட்டங்கள், அடுத்த ஓவரில் 16 ஓட்டங்கள் என்று எடுத்து தங்களுடைய வெற்றி வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருந்தார்கள். அதுவும் பதினெட்டாம் ஓவரின் இறுதிப் பந்து முக்கியமானது. ஆமீர் சரியாகவே 'ப்ளாக் ஹோலை'ப் குறிவைத்து யார்க்கர் பந்தாகவே வீசினார். ஆனால் ஹுஸ்ஸியின் திட்டம் வேறாக இருந்தது. பிட்ச்சில் முன்னேறி அந்தப் பந்தை முன்பே சந்தித்து மிட்விக்கெட் பக்கம் பவுண்ட்ரி அடித்தார். ஹுஸ்ஸி தனக்குத்தானே தன்னம்பிக்கையை உறுதிபடுத்திக் கொண்ட ஷாட் அது. ஹுஸ்ஸி 38 ஓட்டங்களோடும் ஜான்ஸன் 4 ஓட்டங்களோடும் ஆடிக் கொண்டிருந்தனர்.

அந்தப் புகழ்பெற்ற 20ம் ஓவரை நீங்கள் நேரிலோ, டிவியிலோ, யூட்யூபிலோ பார்த்து அல்லது க்ரிக்இன்ஃபோவிலோ படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். புதியதாக எழுத என்ன இருக்கிறது? அஜ்மலை தொடர்ந்து மூன்று பந்துகளில் 6, 6 மற்றும் 4 அடித்த ஹுஸ்ஸி ஆஸியின் ஸ்கோரை 191க்கு உயர்த்தினார். ஆட்டம் சமநிலை. அட்வாண்டேஜ் ஆஸ்திரேலியா. அடுத்த பந்தை லாங்-ஆன் மேல் சிக்ஸர் அடிப்பது ஹுஸ்ஸிக்கு வெகு சாதாரண செயல் போல் ஆகிவிட்டது.  17வது ஓவரில் பூட்ட கேஸ் என்று இருந்த ஆஸி அணி ஒரு பந்து மிச்சம் இருக்கும்போதே ஜெயித்துவிட்டது. பின்னர் சாம்பியன்ஷிப் கோப்பையை இங்கிலாந்திடம் தோற்றது சோகக் கதை.

இந்த வேர்ல்ட் கப்பில் ஆஸி அணியினரின், வார்னர், வாட்ஸன், வொயிட், ஹுஸ்ஸி சகோதரர்கள் இணைந்து அடித்திருக்கும் சிக்ஸர்கள் மட்டும் 52. இயான் சாப்பல் ஹுஸ்ஸியிடம் கேட்டாராம் 'பயிற்சியில் உனக்கு பந்தை தரையில் அடிப்பது பற்றி கற்றுக் கொடுக்கவில்லையா?' என்று. ஆமாம். அதுதான் ஆஸ்திரேலியா அணியினரின் T20 போட்டி பயிற்சி முறை. கொஞ்சம் பேஸ்பால் பக்கமாக போவது போல் இருந்தாலும் அதிக சிக்ஸர்கள் அடிப்பது T20 போட்டிகளில் முக்கிய ஸ்ட்ராடிஜியாக இருக்கப் போகிறது.

இந்தியாவில் நாம் என்னவென்றால் ஏன் சச்சின் டெண்டுல்கர் T20 போட்டிகள் ஆடக் கூடாது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம். சச்சினை ஒவ்வொரு டோர்னமெண்ட்டும் ஆட வைத்து இந்திய அணி தோற்றவுடன்  அவர் டவுசரை உருவும் விளையாட்டு போதும். இந்த வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கு பந்தை பார்க்க, ஃபீல்டரை பார்க்க, பௌலரின் கையைப் பார்க்க சொல்லித் தருவதை விட 'பார்க்'குக்கு வெளியே பறக்க விட கற்றுக் கொடுப்பதே முக்கியம்.

"கிரிக்கெட் விளையாடும் கனவான்களே! அந்த கிரிக்கெட் பந்து உங்கள் மட்டையால் உயரத்திற்கு அனுப்பபடவே எறியப்படுகிறது.  அடிங்…!"

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 16, 2010 @ 6:44 pm