ஈரம்
காதல்,இம்சை அரசன் 23ஆம் புலிகேசி,வெயில் வெற்றிப்பட வரிசைகளில் தயாரிப்பாளர் சங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் மற்றுமொரு வெற்றித் திரைப்படம் 'ஈரம்'. தன் குரு சங்கருக்குச் சற்றும் சளைத்தவரில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
ஸ்ரீரங்கத்து பிராமணப்பெண் சிந்து மேனனுக்கும் ஆதிக்கும் கல்லூரிக் காலத்தில் காதல் மலர்கிறது. இவர்கள் காதலை நிராகரிக்கும் சிந்துவின் தந்தை அவரை நந்தாவிற்குத் திருமணம் செய்து வைக்கிறார். சில சந்தர்ப்பங்களுக்குப் பிறகு முன்னாள் காதலி சிந்துமேனனைப் பிணமாகப் பார்க்கும் போலீஸ் அதிகாரி ஆதி அதிர்கிறார். சிந்து கோழையில்லை,இது தற்கொலையுமில்லை,என்று சந்தேகிக்கும் ஆதி காதலியின் மறைவிற்குக் காரணமான மர்மங்களைக் கண்டறிய முற்படுகிறார். சிந்து தங்கியிருந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் சிலர் அடுத்தடுத்து இறந்து போகின்றனர். அவர்கள் இறந்ததற்கும் சிந்துவின் சாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை ஆராயும் ஆதி கொலைக்கான காரணங்களையும் ஆதாரங்களையும் கண்டறிய முயல்கிறார். ஒரு கட்டத்தில் சிந்துவின் ஆவியே இதைச் செய்கிறது என்பதை உணர்ந்து சிந்துவின் சாவிற்குக் காரணமான குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார். யார் அவர்? ஏன் செய்தார்? என்ற சிற்சில சஸ்பென்ஸ்களைத் திகில் கலந்தும் விறுவிறுப்புடனும் தந்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
நாயகி சிந்துமேனன் படம் முழுவதும் அழகு தேவதையாய் வலம் வருகிறார். கண்களாலேயே தன் மனக்குறிப்புகளை உணர்த்தும் இவர் அசத்தலான மறுவரவு,ஏற்கனவே யூத்,சமுத்திரம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் வந்து போனவர் என்றாலும் 'ஈரம்' திரைப்படத்தில் தான் அனைவர் உள்ளங்களையும் வென்று சென்றிருக்கிறார். இவர் தன் சாவிற்குக் காரணமானவர்களை பழி வாங்க தனக்கு மிகவும் பிடித்த மழையை (தண்ணீரை) ஊடகமாகப் பயன்படுத்துவது பார்க்கும் அனைவருக்கும் திக்திக் நிமிடங்கள். "என்னைப் பார்த்து சொல்லுங்க" என்ற சிந்துவின் வசனமும் இடது கைப்பழக்கமும் தலைமுடியை விரல்களால் ஓரம் தள்ளும் லாவகமும் படத்தில் இவரது ஸ்டைல் என்று நினைத்தால் அதையும் இயக்குனர் (தங்கை சரண்யா மேல் ஆவியாக வரும் சிந்து பேசுவது போல்) வேறு வகையில் பயன்படுத்திக் கொள்கிறார். எண்வகை மெய்ப்பாடுகளும் ஒரு சேர வருகிறது சிந்துவிற்கு, படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் சிறந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
கூடு விட்டு கூடு பாயும் வித்தையை எங்கிருந்து கற்றாரோ இந்த ஆதி? 'மிருகம்' கதாநாயகனா இந்த ஆதி, நிச்சயம் நம்ப முடியவில்லை. படத்திற்குப் படம் வித்தியாசம்,தன் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார். முறுக்கான போலீஸ் அதிகாரியாகவும் கல்லூரி மாணவராகவும் வாழ்ந்திருக்கிறார் ஆதி. ஆனால் ஒரு சில இடங்களில் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பதைத் தவிர்த்து முகபாவங்களை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
நந்தாவிற்கும் அருமையான ரோல். இவரது பாத்திரம் நிச்சயம் பேசப்படும். தமிழ்ப்படங்களுக்கு ஒரு அழகான நடிக்கத் தெரிந்த தங்கச்சி கிடைச்சாச்சு. தங்கச்சி ரோலா கூப்பிடுங்கப்பா சரண்யாவை என்பது போல் இருக்கிறது சரண்யாவின் அழகும் நடிப்பும். இவர் மேல் சிந்துவின் ஆவி ஏற இவர் பார்க்கும் பார்வையும் நடிப்பும் சபாஷ். மற்ற பாத்திரங்களும் படத்தின் சஸ்பென்ஸ் முடிச்சுகளுக்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தமனின் இசை அற்புதம். 'விழியே விழியே' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெட்டு. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு அருமை.
கொலைக்குக் காரணமனவரைக் கண்டுபிடித்தும் நீளும் கிளைமாக்ஸ் காட்சிகள் தமிழ் சினிமாவின் எழுதப்படாத ஹீரோயிச பார்முலா. அபார்ட்மெண்டில் வசிக்கும் அனைவருக்கும் சிந்து கெட்டவராகி விட்டாரா? ஒரு மனிதர் கூட சிந்துவைப் பற்றி நல்ல விதமாக சொல்ல மாட்டாரா? என்பது ஆச்சர்யமூட்டுகிறது. ஒரு தற்கொலைக்காகவோ கொலைக்காகவோ போலீஸ் டிபார்ட்மெண்டே கூடிப் பேசுவது நம்பகத்தன்மை இல்லாத விஷயம். இருந்தாலும் படத்தின் கதையும் திரைக்கதையும் புதுசு கண்ணா புதுசு. பசிக்குக் காபியோ ஜூஸோ கிடைத்தால் கூடப் போதும் என்று எண்ணி ஹோட்டலுக்குச் சென்றால் அறுசுவை விருந்து கிடைத்தால் இருக்கும் மன உணர்வு, படம் பற்றிய எவ்வித எதிர்பார்ப்பும் விமர்சனமும் படிக்காமல் திரையரங்கிற்குள் 'ஈரம்'பார்க்கச் சென்றால் கிட்டும். பெரிய கதாநாயகர்கள் நடித்து பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகும் பெரிய பட்ஜெட் படங்கள் கூட வித்தியாசமான நல்ல கதையுடன் கூடிய மீடியம் பட்ஜெட் படங்களுடன் மோதித் தோற்கும் என்பது நிதர்சனமான உண்மை. 'ஈரம்' வெற்றிக்கு இல்லை தூரம்.