கொசு – 04

அத்தியாயம் நான்கு

இனிய தமிழ் அசைவ உணவகத்தின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து, அதன் மேல் மாடியின் பின்புறம் அமைந்திருந்த வட்டச் செயலாளரின் அலுவலக அறையை எடைபோட்டுவிட முடியாது. ஸ்தாபிதம் 1967 என்கிற காரை பெயர்ந்த புடைப்பு எழுத்துகளைப் போலவே அவரது அறையும் அநேகமாகக் கண்ணில் தென்படாது. உடைந்து, கால் ஆடும் மேசைகளும் உட்புறம் பச்சை மிகுந்த தம்ளர்களும் அழுக்கும் ஈரமுமாகக் கால்வைக்க முடியாத அளவுக்குப் பராமரிக்கப்படுகிற கைகழுவும் இடமும் பசியோடு உணவருந்த வருகிறவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சாப்பிட்ட பிரியாணிக்கோ, சாப்பாட்டுக்கோ பில் பணம் கொடுத்துவிட்டுச் சிறிய ஏப்பமுடன் பெருஞ்சீரகம் மென்றபடி வெளியேறும் கூட்டம் ஒருபோதும் அந்த மேல் மாடி அறை குறித்து நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வட்டச் செயலாளர், வட்டச்செயலாளர் ஆன முதலாமாண்டு நிறைவை ஒட்டி அந்த அறையைக் கட்டினார். நாநூறு சதுர அடிகள் கொண்ட அறை. உள்புறம் முழுவதும் மரவேலைப்பாடுகள் செய்து சத்தத்தைத் தடை செய்திருந்தார். தரையில் விரித்திருந்த கம்பளம், கஸ்டம்ஸ் ட்யூட்டி கட்டாமல் எடுத்துவரப்பட்டது. ஒளிரும் சாண்டலியர் விளக்குகளும் கிரானைட் இழைத்த மேசையும் தந்தச் சிற்பங்கள் அணிவகுத்த குஷன் சோபாக்களும் இன்னபிறவும் அவரது ரசனைக்குச் சான்று சொல்பவை. இயற்கை அன்னையின் அழைப்புக்கு எனப் பிரத்தியேகமாக ஓர் ஓய்வறை இணைத்திருந்தார். பொதுவாக வட்டச் செயலாளர் செய்திகளை முந்தித்தரும் தினத்தந்தியை அங்கே அமர்ந்துதான் படிப்பது வழக்கம். முன்னதாக ஒவ்வொரு நாளும் அதிகாலை அவரது எடுபிடி வடிவேலு செய்தித்தாள் வந்ததும் ஸ்டேப்ளர் பின் அடித்து அங்கே ஷெல்பில் வைத்துவிடுவான். ‘எளவு அங்க குந்திக்கிட்டு படிச்சாத்தான் பேப்பர் படிச்ச திருப்தியே கிடைக்குது’ என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் வட்டம், பாத்ரூம் சுவர்களுக்கும் கிரானைட் பதித்த முதல் தமிழர் என்பது பலருக்கும் தெரியாது.

பட்டனை அழுத்தினால் நகர்ந்து வரும் மரத்தாலான மதுவறை, பணம் அடுக்கப் பிரத்தியேகமாக ஒரு கல் சதுரம், ரெக்கார்டிங் கருவி பொருத்தப்பட்ட ரகசியச் சுவர் என்று வளமான எதிர்காலத்தை உத்தேசித்து நிறைய சௌகரியங்கள் செய்துவைத்திருந்தார். தேர்ந்தெடுத்த சிலரை மட்டுமே தன் அலுவலக அறைக்கு அழைப்பார். விவாதிப்பவை எதுவும் வெளியே போகலாகாது. வட்டம் என்பவர் திட்டங்களின் நாயகன். அப்படித்தான் வருபவர்கள் நினைக்கவேண்டும். அதுதான் அவரது விருப்பம். என்றைக்கு இருந்தாலும் எம்.பி ஆகப்போகிறவர். என்றைக்காவது ஒருநாள் மத்திய அமைச்சராகாமல் உயிர்விடப் போவதில்லை. தவிரவும் பிராந்தியத்தில் மிகப்பெரிய லாரி முதலாளி. என்ன குறைச்சல்? ஆங்.. கொஞ்சம் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும். கனவின் பெரும்பகுதி வெற்றி அதில் இருக்கிறது. எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக்கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.

உலகம் பார்ப்பதற்கு ஒளி விளக்கு ஏற்றப்பட்ட இரண்டு கட்டு வீடு. தழையத் தழையத் தமிழ்த்தாலியும் நெற்றி நிறைத்த குங்குமமும் அணிந்த மனைவி. வருபவர்களுக்கு அங்கே வாழை இலை போட்டு அவசியம் உண்டு வீட்டுச் சாப்பாடு. அம்மா கையால சாப்ட்டு எத்தினி நாளாச்சு என்று உறிஞ்சி உண்டவர்களில் பெரும்பாலானோர் அவரது இன்னொரு சிறிய இல்லத்துக்கு வரக்கூடியவர்கள் இல்லை. அதற்கொரு தனித்தகுதி வேண்டும். அதிலும் விஞ்சியவர்களை மட்டுமே பொதுவாக அவர்தம் பிரத்தியேக அலுவலகத்துக்கு அழைப்பார்.

முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. அவனுக்கு வட்டத்தைத் தெரியும். கூட்டங்களில் பார்த்ததும் தோளில் தட்டி நலம் விசாரிக்கிற வட்டம். அப்பா எப்படி இருக்குறாரு என்று அன்புடன் இரண்டு சொற்கள். வீட்டுக்கு அழைத்ததில்லை. அதுவும் இரண்டாவது வீட்டுக்கு? வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இரண்டு இனிய இல்லங்கள் பற்றியும் மூன்றாவதான அந்த ரகசிய அலுவலகம் குறித்தும். என்றைக்காவது ஒருநாள் வட்டத்தின் அன்பு வட்டத்துக்குள் வரமாட்டோமா என்பதுதான் அவனது நீண்டநாள் ஏக்கமாக இருந்தது. ஆனால் விதி அவனை நகரச் செயலாளரைத் தாண்டவிடாமல் அடித்துக்கொண்டிருந்தது.

ஒரு சமயம் விளம்பர டிசைன் ஒன்றை வட்டத்திடம் காட்டி ஒப்புதல் பெறவேண்டியிருந்தது. நானே கொண்ட்டுபோய் காட்டிட்டு வந்துடறேங்க என்று அவன் நகரச் செயலாளரிடம் சொன்னான். உண்மையில் அப்போது முத்துராமனுக்கு உள்நோக்கம் ஏதுமிருக்கவில்லை. ஆனாலும் நகரம் கண்டிப்பாக மறுத்துவிட்டது.

"இந்தாபாரு முத்துராமா. நீ அரசியல்ல நாலு வருசமா இருக்க. நான் ஏளு வருசம். நமக்குள்ளார கண்ணாமூச்சியே வேணாம். இன்னும் மூணு வருசம் நீ எனக்கு சேவ செய்யி. அப்பால நீ வட்டத்தாண்ட போவலாம். அநேகமா அப்ப நான் வட்டமா இருப்பேன். உன்னிய நல்லாத் தெரிஞ்சவனா, லச்சணமா வாய்யான்னு கட்டிப்புடிச்சி வரவேற்பேன். என்னா நாஞ்சொல்றது புரியுதா?"

முத்துராமனுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. இது அரசியல். மின்சாரத்தைவிடவும் அபாயம் பொருந்தியது. நெருங்குவதில் கவனம் வேண்டும். தொடுவதில் மேலும். சற்று அசந்தாலும் உருக்கிச் சுருட்டி எறிந்துவிடும். ஆகவே தவறிழைத்துவிட்டவன் போல் வாய்பொத்திப் பின்வாங்கிப் போய்விட்டான்.

என்றாவது ஒருநாள். எப்போதாவது ஒரு தருணம். கண்டிப்பாகத் தான் மேலே வந்தே தீரவேண்டும் என்பதே அவனது லட்சியமாக இருந்தது. படித்து முடித்து ஆபீசராகும் உத்தியோகமில்லை இது. தொண்டு செய்துதான் வந்தாக வேண்டும். அவனுக்குத் தெரியும் அது. எதற்கும் சளைக்காமல்தான் இயங்கிக்கொண்டிருந்தான். தீவிரமாக. மிகவும் உக்கிரமாக. அதிகநாள் அவகாசம் தேவைப்படும் என்று அவன் நினைக்கவில்லை. எப்படியும் பத்து வருடங்களுக்குள் தானொரு எம்.எல்.ஏ. ஆகிவிட முடியும் என்றுதான் நினைத்தான். பின்புலம் இல்லை. அதனாலென்ன? ஆர்வம் இருக்கிறது. கவனம் இருக்கிறது. நோக்கத்தில் திசை தடுமாறாத உறுதி இருக்கிறது. போதாது?

ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தான் அவன் காத்திருந்தான். ஒரு வகுப்பில் படிக்காமல் கடந்து மேலே போகிற சந்தர்ப்பம். திறமைக்குக் கிடைக்கிற அங்கீகாரம் போல உழைப்புக்கும் ஒருநாள் கிடைக்காமலா போய்விடும்?

"நீ வேலைக்காரன்னு உன்னிய கூப்புடல முத்துராமா. நீ மூளைக்காரன். அது எனக்குத் தெரியும். நம்ம பசங்களும் பல சந்தர்ப்பத்துல சொல்லியிருக்கானுக. போன எலக்சன் டயத்துல வீட்டுக்கு வீடு குங்குமச் சிமிழ் குடுத்தப்ப, நீதான் உள்ள குங்குமத்த ரொப்பி, ஒரு வெள்ளி காயின் வெச்சிக் குடுங்கன்னு சொன்னியாம்? வடிவேலு சொன்னான். என்னாமா ஒர்க் அவுட்டு ஆச்சு பாத்தல்ல?  அதான். அதான் வோணும் எனக்கு. பொம்பளைங்கள கவர் பண்ணீரணும்டா. செலவு ஒரு மேட்டரே இல்லன்னு வையி. எனக்கு இப்ப என்னா வோணும்? ஒரு கவன ஈர்ப்பு. ஜனவரில கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்கப்போவுது. மெயின் அஜண்டா இன்னா தெரியுமா? சென்ட் ரல் மினிஸ்டிரில ரெண்டு சீட்டுக்கு பை எலக்சன் வருதில்ல? அதுக்கு யாரப் போடலாம்னிட்டு முடிவு பண்ணப்போறாங்க.."

முத்துராமனுக்குக் குழப்பமாக இருந்தது. இவர் என்ன சொல்ல வருகிறார்? எப்படி இவரால் மத்திய அமைச்சர் பதவி வரை யோசிக்க முடிகிறது?

"புரியிதுரா.. நீதான் இன்னும் வளரணும். தபாரு.. லைனுகட்டி சொல்லிக்கினே வரேன். கரெக்டா பாயிண்ட புடிச்சிக்கிட்டே வா. புரியும். ரெண்டு சீட்டு அங்க வேகண்டு. ஆள் போட்டாவணும். யார போடுவாங்க? இது தினத்தந்தி படிக்கற எல்லாருக்கும் தெரியும். நான் அத்த சொல்லல. ரெண்டு தலைங்க புச்சா கேபினட்டுக்குள்ளார போச்சின்னா அந்த போஸ்டுக்கு இன்னும் ரெண்டு நவுரும். யார் அந்த ரெண்டு? ராஜ்ய சபாவுல வெத்துக்கு பல்லு குத்திக்கினு குந்திக்கினுகீதுங்களே, அதுங்கள்ள ரெண்டு. ஏன்னா நமக்கு லோக் சபா எம்பி பவர் வேற இல்ல. அப்பிடியே நவுந்து நவுந்து வந்திச்சின்னு வையி. எப்பிடியும் எங்கயாச்சும் அதே ரெண்டு சீட்டு வேகன்சி வந்துதான் ஆவும். என்னிய ராஜ்ய சபா எம்பி ஆக்குவாங்கன்னு கூட நான் எதிர்பார்க்கல. அட்லீஸ்டு, அதுக்கு பக்கத்து வூட்டு காம்பவுண்டு செவுரு மேல குந்திக்கற மாதிரியாச்சும் ஒரு சான்ஸ் இப்ப கிடைச்சாவணும். இத்த வுட்டேன்னு வையி. அடுத்த ரெண்டு வருசம் ஜென்ரல் எலக்சன் வர்ற வரைக்கும் இப்பிடியே வட்டமா சுத்திக்கினு இருக்கவேண்டியதுதான்."

முத்துராமனுக்குப் பாதி புரிந்து, பாதி புரியாதது போலிருந்தது. ராஜ்ய சபா எம்.பிக்களில் இருவர் அமைச்சரானாலும் அங்கு வேகன்ஸி ஏற்பட சந்தர்ப்பம் இல்லையே? ஆனால் மேற்கொண்டு கேள்வி கேட்டு வட்டத்தை டென்ஷன் ஆக்கவேண்டாம் என்று முடிவு செய்து, ‘சொல்லுங்க தலைவரே, நான் என்ன செய்யனும்?’ என்றான் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு. வட்டம் எம்பி ஆகிறாரோ, என்னமோ, ஓரடுக்கைத் தாண்டித் தன்னுடைய தொடர்பு விரிவடையப்போகிற சந்தோஷம் அவனுக்குள் பரவியிருந்தது.

"எனக்கு ஒரு ஐடியா வோணும் முத்துராமா. மாவட்டச் செயலாளராண்ட நமக்கு நல்ல கனெக்சன் இருக்குது. வெவசாய அமைச்சரும் வேண்டப்பட்டவருதான். ஆனா பாரு.. பாத்தா நல்லாருக்கியான்னு கேக்கறாங்களே தவிர, எனக்கு நல்லது செய்யணும்னு அவிங்களுக்குத் தோணமாட்டேங்குது. நான் ஒருத்தன் முக்கியஸ்தன்னு புரியவெக்கணும். எனக்கு அப்பால வந்த நாலு பயலுவ மேல பூட்டானுங்க. இருவது வருசமா கட்சில இருக்கேன். என்னா சொகத்த கண்டுட்டேன்? இந்த நெனப்பு சாஸ்தியாயிட்டா தூக்கம் வரமாட்டேங்குது முத்துராமா. பதவிசொகம்னு இல்ல. எதுக்காக இத்தினி வருசம் உழைச்சோம்னு ஒரு கேள்வி வருதில்ல? சாமி இல்லன்னு சொல்லிட்டு, சாமி சொன்னமாதிரி, கடமைய செய்யி, பலன எதிர்பார்க்காதன்னு மேலிடம் சொன்னா கேக்கமுடியுமா?"

முத்துராமனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அதுநாள்வரை நான்கு வார்த்தைகளுக்கு மேல் மொத்தமாகப் பேசியிராத வட்டச் செயலாளர். இப்படிக் கூப்பிட்டு சோபாவில் உட்காரவைத்துவிட்டு எதிரே மேசைமீது சம்மணமிட்டு அமர்ந்து நூறு வருடம் பழகியவர்போல் பேசுகிற மனிதர். எத்தனை உரிமை, எத்தனை சுவாதீனம்? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் பேட்டையில் முத்துராமனின் மதிப்பு அந்தக் கணமே பலமடங்கு அதிகரித்துவிடும்.

"வேணாம் முத்து. உன்னோட வெச்சிக்க. நீ ரகசியம் காப்பேன்ற நம்பிக்கையில சொல்லுறன்.. எனக்கு ஒரு டக்கர் ஐடியா மட்டும் குடு. அது ஒர்க் அவுட்டு ஆயிருச்சின்னா நான் எங்கியோ போயிருவேன். எனக்கு ஹெல்ப் பண்ண உன்னிய மறக்காம கண்டிப்பா நல்லது செய்வேன். மாநாட்டுக்கு முன்னால நாம செய்யப்போற காரியம் ஹிட்டாகி, தலைவராண்ட போவணும். அட எவண்டா அவன், சூப்பரா ஒரு வேலை பண்ணிட்டானேன்னு அவரு ஆச்சர்யப்படணும். இன்னமே உப தேவதைங்கள நம்பி பிரயோசனமில்லன்னு முடிவுக்கு வந்துட்டேன்.."

முத்துராமனுக்கும் அதுவே சரியென்று பட்டது. அவனளவில் நகரம் ஒரு உப தேவதை. வட்டம் தேவதை. நாளைக்கு வட்டம் உபதேவதையாகும். மாவட்டம் தேவதையாகும். தேவதைகளின் வழியே தெய்வத்தை அடையவேண்டும். நீண்ட பயணம்தான். ஆனாலும் தொடங்குவதற்கு இதோ ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

பரபரவென்று யோசித்தான். ஒரு செயல். ஒரே ஒரு செயல். ஆனால் ஒட்டுமொத்த கட்சியாட்களின் கவனத்தையும் கவரவேண்டும். தலைவர் வரை சென்று தாக்கவேண்டும். வட்டம் சொன்னதுபோல, அந்தச் செயலின் வெற்றியை அவர் தலைவரின் காலடியில் சமர்ப்பித்து வணங்கும்போது அவருக்கு டில்லி செல்லும் விமானத்தில் ஒரு டிக்கெட் கிடைத்தாக வேண்டும். என்ன செய்யலாம்?

வட்டம் மேசையிலிருந்து கீழிறங்கி, நாற்காலிக்கு வந்தார். முத்துராமன் சடாரென்று எழுந்து அவரருகே சென்று கைகளைப் பிடித்தான்.

"ஒரு ஐடியா தலைவரே!"

"சொல்லு! சொல்லு!" என்று பரபரப்பானார்.

"கொசு!" என்றான் முத்துராமன்.

(தொடரும்..)
 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:14 pm