இலக்கியச் சொற்பொழிவு
இன்று (ஜூலை 09, 2010) அன்று எடிசனில் உள்ள ஹாலிடே இன்னில் தமிழ் இலக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழில் தலைமை எடிட்டர் திரு. இலந்தை எஸ்.ராமசாமி அவர்களும் இந்தியாவில் இருந்து வந்திருக்கும் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களும் கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சி நடைபெற்றது. நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தினரால் ஒருங்கிணைக்கப் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்திருந்தது மிக்க மகிழ்ச்சியாகவே இருந்தது.
அலுவலக வேலைகள் முடிவில்லாமல் இழுத்ததினால் தாமதமாகவே செல்ல முடிந்தது. நான் அரங்கினுள் நுழையும் பொழுதே இலந்தை ராமசாமி அவர்கள் பேச்சினை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். ஆகவே அவர் உரையைக் கேட்க முடியாமல் போய்விட்டது. சுவாரசியமான உரை என்பது அவர் முடித்த பின் அனைவரும் கை தட்டிய வேகத்தை வைத்தே அறிந்து கொள்ள முடிந்தது. அவரைத் தொடர்ந்து முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேச வந்தார்கள்.
பாரதி கவிதை ஒன்றினைச் சொல்லி ஆரம்பமான பேச்சு சுமார் ஒரு மணி நேரம் நிற்காமல் பெய்த மழை போல தங்கு தடையின்று வந்து விழுந்தது. தமிழ் இலக்கியங்களில் பெண்களின் நிலையைத்தான் பிரதான தலைப்பாக எடுத்துக் கொண்டார். பாரதி பெண்களிடத்தில் அச்சம், நாணம் மட்டும் தவிர்க்கச் சொன்னார். மடமையும் பயிர்ப்பும் அவர்களுக்கு வேண்டிய குணங்கள் என்று கருதியதால் அவற்றைத் தவிர்க்கச் சொல்லவில்லை என்று கூறி அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு போன்றவற்றை தம் பாணியில் விளக்கிச் சொன்னார் பர்வீன் சுல்தானா.
பாரதியைப் பற்றிப் பேசிவிட்டு அவரிடம் இருந்து பாஞ்சாலி, கண்ணகி, பெரிய புராணம், ராமாயணம் என்று பல இலக்கியங்களில் இருந்து பெண்களின் நிலை பற்றிப் பேசினார். பாஞ்சாலியை சபைக்குக் கூப்பிட வந்த சாரதியிடம் என்னை முன் வைத்தாரா இல்லை அவரை முன் வைத்தாரா என்று கேட்டதை அவளின் இமோஷனல் இண்டலிஜென்ஸின் வெளிப்பாடு என்றார். அதன்பின் கண்ணகி குறித்து பேசுகையில் பன்னிரெண்டு வருடங்கள் கழித்து வந்த கோவலன் கூப்பிட உடன் பதில் பேசாமல் கிளம்பிய அவள், அது குறித்து கோவலன் கேட்ட பொழுது ஒரு வார்த்தையில் அவனுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டியதை அழகாகக் பேசினார்.
சீதை ராவணனிடம் தான் பொறுமை காப்பதற்குக் காரணம் தான் ஏதேனும் செய்தால் அது ராமனின் வில்லின் மீது நம்பிக்கை இல்லாமல் செய்ததாக ஆகிவிடும் என்று எண்ணுவதால்தான் என்று பெண்ணின் பொறுமை பற்றிப் பேசினார். அதன் பின் பெரிய புராணத்திற்குள் நுழைந்து பிள்ளைக் கறி சமைத்தது தொடங்கி கோச்செங்கண்ணன் வரை பல உதாரணங்கள் தந்து பேசி என்னதான் நாயன்மார்களுக்குப் பெயர் கிடைத்தாலும் அதற்குக் காரணம் அவர்கள் பின் நின்ற பெண்களே என்றும், பல நேரங்களில் அவர்கள் பெயர்கள் கூட நமக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமே என்றும் பேசி உரையை நிறைவு செய்தார்.
பேச்சினூடே அருமையான பல குட்டிக் கதைகளையும், நகைச்சுவைத் துணுக்குகளையும் அவருக்கே உரிய பாணியில் குரலை ஏற்றியும் இறக்கியும் கூறி மக்களை மகிழ்வித்தார். கூட்டம் பல முறை சிரித்துக் கொண்டே இருந்தது. அவரின் உரை முடித்த பின்னர் ஒரு முதிய பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு இன்று பூராவும் உங்கள் பேச்சினைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று பேசியது மொத்த கூட்டத்தின் உணர்வினையே பிரதிபலிப்பதாக இருந்தது. பெண்கள் பெருமையை உயர்த்திப் பேசுவதற்காக கோவலனைக் கேவலன் எனக் கால் உடைத்தும், கோதண்டராமனைத் தண்டராமன் என்று தலையறுத்ததும் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியது.
செவிக்குணவு கொடுத்த பின் வயிற்றிற்கும் ஈயப்படும் என்ற சொல்லுவது போல இரு அருமையான உரைகளை ஒருங்கிணைத்து அதன் பின் இரவு உணவும் அளித்து நல்லதொரு மாலைப் பொழுதினைத் தந்த நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கத்திற்கு என் நன்றி.