தில்லாலங்கடி

தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘கிக்’ திரைப்படத்தையே ‘தில்லாலங்கடி’யாக ரீமேக்கியிருக்கிறார்கள். எதிலும் கிக் வேண்டும் என்று எண்ணும் விசித்திரமான நாயகன் ரவி. தன் ‘கிக்’ கொள்கைக்காக எதையும் செய்யத் துணிந்தவர். நண்பனின் கல்யாணத்தில் மணப்பெண் தோழி தமன்னாவுடன் கலாட்டா செய்யும் இவர் காதலிக்கவும் ஆரம்பிக்கத் தமன்னா இவரை வெறுக்கிறார். தமன்னாவிடம் ‘என்னை லவ் பண்ணறேன்னு சொல்லிடாதே, அப்படி சொல்லிட்டா கிக் இருக்காது’ என்று அவரைச் சீண்டி சீண்டியே அவரை மட்டுமில்லாமல் பார்க்கும் ரசிகர்களையும் குழப்புகிறார். தன்னுடைய கிக்கிற்காக எதையும் செய்யத் துணியும் ஒருவரோடு வாழ முடியாது என்று முடிவெடுக்கும் தமன்னா போலீஸ் அதிகாரி ஷாமைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஷாமிடம் தன் கடந்த காலக் குடைச்சல் காதலனைப் பற்றி எடுத்துரைக்க, ஷாமும் தனக்கு ஒருவன் சவாலாக இருப்பதாகக் கூற ஷாம் குறிப்பிடும் அந்தத் தில்லாலங்கடியும் ரவி தான் என்று தெரிகிறது. ஏன் ரவி இப்படி செய்கிறார்? தமன்னாவுடன் இணைந்தாரா? போன்ற பரபரப்புகளைக் கலகலப்புடன் கூறி முடித்திருக்கிறார் இயக்குனர் ராஜா.
 
தமன்னாவைச் சீண்டியே காதல் வலைக்குள் விழ வைக்கும் ரவியின் தந்திரம் புதுசு. ஆனால் அவர் அடிக்கடி கூறும் ‘கிக்’ அவர் பாத்திரத்தில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுவது மைனஸ். இவரது நடனம், காதல், அடிதடி, நகைச்சுவை அனைத்தும் அழகு. தமன்னாவிற்குப் படம் முழுவதும் நடிக்க வாய்ப்பு. கவர்ச்சியுடன் நடிக்கவும் செய்திருப்பது ஆறுதல். ஷாமிற்குப் போலீஸ் பாத்திரம். டம்மி பீஸாக்கியிருப்பார்களோ என்ற அச்சம் வேண்டாம். ரவிக்கு இணையான பாத்திரம். இந்தப் படத்தில் தான் ஷாம் நன்றாக நடித்திருக்கிறார். வடிவேலுவின் காமெடி அபாரம்.  இவரது காட்சிகளுக்கு மட்டுமில்லாமல் சந்தானத்தின் காமெடிக்கும் கொடுக்கலாம் கைத்தட்டல்கள். இவர்களுடன் மனோ பாலா, மன்சூர் அலிகான் போன்றவர்களும் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
 
தெலுங்கு படம் ‘கிக்’கை ஒவ்வொரு இஞ்சுமாகச் சுட்டிருக்கிறார்கள். ரவி தேஜா-ரவி,இலியானா- தமன்னா, பிரம்மானந்ததிற்குப் பதில் வடிவேலு, ஷாயாஜி ஷிண்டே-கவிதா பாத்திரத்தில் பிரபு- சுகாசினி என்று பாத்திரங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். தெலுங்கு திரைப்படத்தையே தமிழில் பார்க்கும் வாய்ப்பு. தமிழுக்கேற்ப கொஞ்சமாவது இயக்குனர் ராஜா காட்சிகளை மாற்றி மெனக்கெட்டிருக்கக் கூடாதா?
 
செல்வகுமாரின் ஒளிப்பதிவில் மலேசியாவைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. ‘சொல் பேச்சு கேட்காத’ பாடல் படமாக்கப்பட்ட விதம் புதுசு. ஐந்தாறு ரவிக்களும் ஆறேழு தமன்னாக்களையும் ஒரே திரையில் பார்த்தது புதுமையான முயற்சி.
 
எடிட்டர் கத்திரியைத் தொலைத்து விட்டாரோ? படத்தின் நீளம் மிகப் பெரிய மைனஸ். கிளைமாக்ஸிற்காகக் காத்திருக்கும் வேளையில் பாடலைப் போட்டு ரசிகர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார்கள். படத்தில் விறுவிறுப்புக் காட்சிகள் பஞ்சம்,லாஜிக் மீறல்கள் கொஞ்சம்.குலுக்கி எடுத்தால் வண்ண மயமான கலகலப்புக் காட்சிகள் எஞ்சும். இந்தத் தில்லாலங்கடியை லாஜிக் பார்க்காமல் ஜாலியாக ரசித்து விட்டு வரலாம்.
 

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “தில்லாலங்கடி

 • September 24, 2010 at 12:41 pm
  Permalink

  sandhanam comedy thevaillai .
  vadivelu sema ragalai panni irukaaru.
  jayam ravi nulla kamadiyum panni hand some boy ya valam vararu.
  thamanna solla oru visyam illa.
  sam wait role super police .
  mansooralikhan sir kalakkal police avar innum kondu vantha nulla irukkum .
  padathil krish pada scene ondru varuvathu antha padama copy adichitangalaonnu thoanuthu.
  trust scene arumai kankalil neer varukirathu unmail athu than kick
  thilalangati mothathil uttalakatee

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 5, 2010 @ 10:22 pm