கொசு – 18

அத்தியாயம் பதினெட்டு

முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து கட்சி நடத்திய முக்கிய மாநாடுகள் அனைத்துக்கும் மழை ஒரு தூறல் அளவிலாவது சாட்சியாக இருந்திருக்கிறது. பலத்த மழை பொழியும்போதுதான் மேடையில் தலைவர்களுக்கு வீரம் அதிகரித்தது. விரல் நீட்டி எச்சரிக்கும் சந்தர்ப்பங்களில் வாகாக ஒரு இடி இடித்தால் கூட்டத்தில் விசில் பறக்கும். வீர உரை சம்பவத்துக்கு பொருத்தமாக, இயற்கை வழங்கும் பி.ஜி.எம்.

எல்லாம் மாநாடு தொடங்கியதற்குப் பிறகுதான். ஏற்பாடுகளின்போது, மழை வருவது என்பது மாவட்ட செயலாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி, அங்கே இங்கே அலைந்து திரிந்து ஆபத்துக்கு பாவம் பார்க்காமல் பொண்டாட்டி, சின்ன வீடு, மாமியார், சொத்துவரை விற்று, காசைக் கட் அவுட்டுகளாக்கி, கலையுணர்வை வெளிப்படுத்தும் செயல்வீரர்கள். போட்ட காசை எடுத்துவிட முடியும்தான். மாநாடு ஒழுங்காக நடந்து முடிகிற பட்சத்தில்.

பெரிய பிரச்னை கூட்டம் வராது என்பது, சாலைகளை அடைத்து ஊர்வலம் என்கிற கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது அவனது கட்சித் தலைவர்தான். கிராமப்புறங்களில் வயசுக்கு வரும் பெண்களுக்கு மயில் ஜோடித்து அழகு பார்ப்பது போல ஜோடித்த திறந்த வாகனத்தில் கூட்டத்தில் நீந்தி தலைவர் மிதந்து வருவார். அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அந்த எகத்தாளப் பார்வை. சடாரென்று யாரையோ பார்த்து கைகூப்பும் திடீர் பணிவு. பதிலுக்கு எழும்பும் வாழ்க கோஷம்.

தன் பின்னால் ஒரு மாபெரும் சமூகம் அணி திரள்கிறது என்கிற நினைவு தரக்கூடிய பலம் இவ்வளவு அவ்வளவு அல்ல. அது அதிர்ஷ்டத்தில் வந்ததல்ல. கால்நடையாகக் கட்சிக் கூட்டங்களுக்குப் போன காலத்திலிருந்து கார்களின் அணிவகுப்பு காலம் வரை உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.

முத்துராமனின் அப்பா பல முறை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அந்தக் கனவு இருக்கும். மாநிலத்தின் தலைவராகும் கனவு. ஒவ்வொரு மாநாட்டின்போதும் அந்தக் கனவு பரிணாம வளர்ச்சி கொண்டு வீதி உலா போகும் தலைவனின் அருகே நிற்கும் வாய்ப்பு மாநாட்டை முன்னின்று நடத்தும் மாவட்ட செயலாருக்கே கிடைக்கும். பக்கத்தில் நிற்கும் தலைவரை மானசீகமாக சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அந்த இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்க்காத மாவட்டச் செயலாளர் இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கும் இருக்க முடியாது.

‘மேலுக்கு வரணும்னு ஆசைப்படாத மாவட்ட செயலாளர் இருக்க முடியாது முத்து. எத்தினி உழைக்கிறோங்கறதை பொருத்த விசயம் அது. ஆனா ஒண்ணு. அரசியல் வேணாம்ணு ஒதுங்கின காலத்துல நான் புரிஞ்சுக்கிட்டது, அதுக்கு உழைப்பு மட்டும் போறாதுங்கிறது. எல்லாத்துக்கும் மேல ஒரு நேக்கு வேண்டியிருக்குதுடா. மாவட்ட செயலாளர்னா எம்.எல்.ஏ. அது ஒரு அந்தஸ்து. அதுக்கு மேலே மினிஸ்டர் ஆவுறதுக்கு, கட்சியில முக்கியஸ்தன் ஆவுறதுக்கு, இன்னதுதான் செய்யவேண்டியிருக்கும்னு சொல்ல முடியாது. சில பேருக்கு குத்தாலச் சாரல் மாதிரி பருவம் தப்பாம தானா கிடைச்சுடும். இன்னும் சில பேரு சிங்கியடிச்சு மூக்கால அழுது காரியத்தை சாதிச்சுப்பான். நம்மூர்ல நேக்கு தெரிஞ்சவன் ரொம்ப கம்மி. மேல வரதுக்குள்ள முழி பிதுங்கிறும். உச்சத்துக்குப் போறதுக்கு ஒரு அதிர்ஷ்டம் வேணும்.’

முத்துராமன் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பா சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால், அதிர்ஷ்டத்தின் பங்களிப்பை யார் தீர்மானிப்பது? சில அதிரடி நடவடிக்கைகள் தீர்மானிக்கலாம்.  சாமர்த்தியமான தகிடுதத்தங்கள் தீர்மானிக்கலாம். மேலிடத்துக்கு நெருக்கமாவது என்பது அறுபத்து ஐந்தாவது கலை. எப்படியாவது அதைப் படிக்காமல் விடக்கூடாது என்று அப்போது முடிவு செய்ததுதான்.

நேற்றைக்குவரை, வட்டச் செயலாளர் சிங்காரண்ணன். இன்றைக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு. நாளைக்கு இந்த பாளையங்ககோட்டை மாவட்டச் செயலாளராக இருக்கலாம். யாரால் என்ன உபயோகம் என்று இப்போது சொல்வதற்கில்லை. யாரும் உதவாமலே கூட போகலாம். ஆனால், என் முயற்சி சோர்வடையக்கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டான்.

ஜங்ஷனில் இறங்கியதும் ஸ்டேஷனிலேயே பல் தேய்த்து, காபி சாப்பிட்டான். ஊருக்குப் போகும் போது சாந்திக்கு மறக்காமல் இருட்டுக்கடை அல்வா வாங்கி செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அம்மாவுக்குக் கொடுத்தாலும் அல்வா இனிக்கத்தான் செய்யும். ஆனால், சாந்திக்கு வாங்கிச்செல்லவேண்டும் என்று நினைக்கும்போது தனக்கே இனிப்பதை சிறு புன்னகையுடன் நினைத்துப் பார்த்தான்.

வெளியே வந்து பஸ் பிடித்து, அரை மணியில் பாளையங்கோட்டை இறங்கினான். போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்திருந்தார்கள். சாலையோரங்கள், கட்அவுட்டுகளுக்கான கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மாட்டு வண்டிகளில், பிளாஸ்டிக் நாற்காலிகள் போய்க்கொண்டிருந்தன. திருவிழாதான். சந்தேகமில்லை.

வழியில் தென்பட்ட மாநகராட்சி நவீன குளியலறையில் இரண்டு ரூபாய் கொடுத்து குளித்துவிட்டு வெளியே வந்து வெள்ளைச் சட்டை, கட்சி வேட்டிக்கு மாறினான். ஓட்டலில் இட்லி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்கும் இடத்தில் கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டான். எம்.எல்.ஏ. கொடுத்தனுப்பிய •பைல் பத்திரமாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டான். எடுத்து, பிரித்துப் பார்க்க விருப்பம்தான். தயக்கமோ என்னவோ தடுத்தது. அநேகமாக பயமாக இருக்கலாம். யாருக்குத் தெரியப்போகிறது? படித்துத்தான் பார்ப்போமே என்றும் உள்ளுக்குள் ஒரு கெட்டிச்சாத்தான் குரல் கொடுத்தது. பசி தீர்ந்ததும் புத்தி வேலை செய்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

ஓட்டலைவிட்டு வெளியே வந்து, பஸ் ஸ்டாண்டை ஒட்டிய குட்டிச்சுவரில் சாய்ந்தபடி பையிலிருந்து •பைலை எடுத்தான். பிரித்ததும் நிறைய எண்கள் கண்ணில் பட்டன. வசூல் விவரம். புரட்டப் புரட்ட, சில அறிக்கைகள், குறிப்புகள், கணக்குகள், மேலும் கணக்குகள் என்று பக்கங்கள் நீண்டன. இதெல்லாம் எப்போதும் இருப்பதுதானே? தலைபோகிற முக்கியம் என்று வேலைமெனக்கெட்டு தன்னைக் கூப்பிட்டு கொடுத்தனுப்புவானேன்?

முத்துராமனுக்குப் புரியவில்லை. அலுப்புடன் •பைலை மூடி பையில் வைத்தான். கட்சிக்கொடி கட்டிய ஜீப் ஒன்று சாலையில் விரைந்து கடந்தது. மாநாடு நடக்கவிருக்கும் திடலுக்கு வழி கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

ஒன்றிரண்டு தூறல்கள் விழுந்தன. திடலில் கூரை வேய்ந்துகொண்டிருந்த உழைப்பாளிகள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள். முத்துராமன் அருகே சென்று ஒரு ஆளைப் பிடித்தான்.

‘வணக்கங்க. என் பேரு முத்துராமன். மெட்ராஸ்லேர்ந்து வரேன். எம்எல்ஏ தங்கவேலு அனுப்பினாரு.’ என்று சொன்னான்.

அந்த சகதொண்டன் அவனை ஏற இறங்கப் பார்த்தான். ‘சொல்லுங்க’

‘இங்க மாவட்ட செயலாளர பாக்கணும். ஒரு •பைலு கொடுத்தனுப்பிவிட்டிருக்காரு.’

‘அண்ணன் இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாப்ல. இப்பத்தானே போனாக.’

அண்ணன்கள் பெரும்பாலும் இப்படித்தான். தொண்டர்கள் தேடும்போதுதான் கிளம்புகிறார்கள். எங்கே பிடிக்கலாம் என்று முத்துராமன் கேட்டான்.

‘வீட்டு அட்ரஸ் தாரேன். ஆனாக்க, இப்பம் அங்க இருப்பாருன்னு சொல்லமுடியாது.’

‘வேற?’

‘மோகனசுந்தரம் கடைகிட்ட போய்ப் பாருங்க’ என்று அவன் சொன்னான். விலாசம் கொடுத்து வழியும் சொன்னான்.

ஆனால், மோகனசுந்தரம் யாரென்பதையோ, அவருடையது என்ன கடை என்பதையோ அவன் சொல்லவில்லை. சரவண பவன் மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். பெயர் சொன்னாலே போதும். எல்லாம் எளிதில் விளங்கும். மெட்ராஸ்காரனைத்தவிர மற்றவர்களுக்கு.

அவன் அந்த முகவரியைக் கண்டுபிடித்து போய்ச்சேர மணி பதினொன்றரை ஆகிவிட்டது. வருவது போல் இருந்த மழை இப்போது இல்லை. வெயிலடித்தது. வியர்த்தது. களைப்பாக இருந்தது. மோகனசுந்தரத்தின் கடையில் குறைந்தபட்சம் தனக்கொரு கோலி சோடாவாவது கிடைக்கும் என்று நினைத்திருந்தான். ஆனால், அது ஒரு காயலான் கடையாக இருக்கும் என்று அவன் எண்ணிப்பார்க்கவில்லை. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற காயலான் கடை போலிருக்கிறது. மாவட்டச் செயலாளர் உட்கார்ந்து மந்திராலோசனை செய்யுமளவுக்கு உள்ளே இடவசதி வேறு இருக்கிறது.

கடை வாசலில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அண்ணனைப் பாக்கணும் என்று சொன்னபோது தடை ஏதும் இல்லாமல் பின்புறம் அனுப்பிவைத்தார்கள். சென்னை தூதுவன். வரவேற்பு எப்படி இருக்கப்போகிறது? ஆவலுடன் அந்தக் கடையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனான்.

வழி முழுக்க பழைய செய்தித்தாள்கள். பழைய இரும்பு, ஈயம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள். உடைந்த பஜாஜ் ஸ்கூட்டரின் உதிரி பாகங்கள். க்ரீஸ் பூசிய சுவர்கள். பான்பராக் கறை படிந்த தரை. ஈக்களின் சாம்ராஜ்ஜியம். ஈரப்பதம் மிகுந்த சுற்றுச்சூழல். ஒரு மாதிரி நடனநங்கையின் நளினத்துடன் எதையும் மிதித்துவிடாமல் சுற்றிக்கொண்டு மந்திராலோசனை மண்டபத்துக்குப் போய்சேர்ந்தபோது, ‘செவிட்டு மூதி! கேக்கறன்ல? வாய தொறந்து பதில் சொல்லுல. நீ பேசாட்டி வீட்டுக்கு நீ போவ மாட்ட. ஒம் பொணந்தாம்ல போவும்.’

முத்துராமன் சூழல் புரியாமல் தயங்கி நின்றான். கோவக்கார எம்.எல்.ஏ. போலிருக்கிறது. ஒருவேளை, கோலி சோடா கிடைக்காமல் போகலாம்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:54 pm