கொசு – 23

அத்தியாயம் இருபத்தி மூன்று

பயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள். இரண்டு வாய்ப்புகள் என்று முத்துராமன் நினைத்தான். இரண்டு பிரச்னைகளாக அவர்கள் இருந்தார்கள். பிரச்னை என்று நினைத்தால் வீடு உள்பட எதுவுமே பிரச்னைதான். ஏன் இது வாய்ப்பாக இருக்கக்கூடாது? இயல்பில் இல்லாவிட்டாலும் வாய்ப்பாக மாற்ற முடியாதா என்ன?

அப்படித்தான் அவன் நினைத்தான். அதையேதான் விரும்பவும் செய்தான். ஆனால் ஒன்றை அடுத்து இன்னொன்று, அதனை அடுத்து மற்றொன்று என்று ஏதாவது தலைவலி கொள்ள வந்துகொண்டேதான் இருக்கிறது. வட்டச் செயலாளர் சிங்காரத்தின் ஹோட்டல் பற்றி எரிந்து விட்டது. கண்டிப்பாகத் தானாக எரியக்கூடியதில்லை. யாரோ வேலை மெனக்கெட்டு மின்கசிவுக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அல்லது பெட் ரோலை ஊற்றி வாகான இடங்களில் பற்றவைத்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க இனிய தமிழ் அசைவ உணவகம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இயங்காது.

அட, இதையும் ஏன் அவரே பற்றவைத்துக்கொண்டிருக்கக் கூடாது? தோன்றிய மறுகணமே அவரிடம் கேட்டுவிட்டதுதான் பிழையாகிப் போனது.

‘மவன டேய், நேத்திக்கி பெஞ்ச மழைல இன்னிக்கி மொளச்ச காளான் நீயி. என்னிய பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டுப்புட்ட இல்ல? வெச்சிக்கறேண்டா டேய். எனக்குத் தெரியும்டா. இதெல்லாம் அந்தக் கபோதி ஏத்தி வுட்டு அனுப்பினதுதானே? உன்னையும் தெரியும், அவனையும் தெரியும், அவங்கப்பனையும் தெரியும்டா எனக்கு. அளிவுகாலம் வந்திரிச்சின்னு போய் சொல்லு அவனாண்ட. நாளைக்கு தலைவர பாக்கப்போறேன். நாளையோட சரி அவன் கதை. சொல்லிவை. வேணா போஸ்டர் அடிச்சி பஸ் ஸ்டாண்டாண்ட ஒட்டு. எப்பெம் ரேடியோவுல போய் சொல்லு. என்னிய ஒண்ணும் ஆட்டிக்க முடியாது அவனால. சிங்காரம் சாது, அப்புராணி, பொலம்புவானே தவிர ஒண்ணும் பண்ணமாட்டான்னு மட்டும் நினைச்சிராதிங்க. இன்னிக்கி எரிஞ்சது என்னோட ஓட்டலு இல்லடா. என் வயிறு. முப்பது வருச அரசியல்வாதிடா நான். நெனப்புல இருக்கட்டும். நாள கழிச்சி தெரிஞ்சிரும் உங்க பவுஷ¤.’

தொடர்பற்ற சொற்றொடர்களில் அவர் உணர்த்த விரும்பியதெல்லாம் ஒன்றுதான். இனி நான் உன் நண்பனல்ல. முத்துராமனுக்கு அதுதான் வியப்பாக இருந்தது. ஒரு எதிரியாகப் பொருட்படுத்திப் பேசுகிற அளவுக்குத் தனக்கு என்ன முக்கியத்துவம் வந்துவிட்டது என்று யோசித்துப் பார்த்தான். அப்படியொன்றும் தெரியவில்லை. எம்.எல்.ஏ. தங்கவேலு கூப்பிட்டு அனுப்பிப் பேசியது, பாளையங்கோட்டைக்கு ஒரு நடை போய்வந்தது தவிர அரசியலில் தன் பங்கு கடுகளவு காணாது. இப்படி நட்டநடுச் சாலையில் நிற்கவைத்து, சட்டையைப் பிடித்து வீர சபதம் செய்யக்கூடிய அளவுக்குத் தான் செய்ததுதான் என்ன? ஒன்றுமில்லை. கண்டிப்பாக ஒன்றுமில்லை.

உருப்படியாக ஒரு சாதனை செய்வதற்கு முன்னால் அரசியலில் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டுவிட்டதுதான் பெரிய சாதனை போலிருக்கிறது. கிளம்பும்போது எதற்கும் இருக்கட்டும் என்று அவன் சொன்னான்:

‘ஐயா, நீங்க என்ன நெனச்சிக்கினாலும் சரி. எம்மேல எந்தத் தப்பும் இல்ல. உங்க ஓட்டல கொளுத்தற அளவுக்கு நான் கீழ்த்தரமானவனும் இல்ல, அதுக்கு அவசியமும் இல்ல. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னுவாங்க. நீங்க பெரியவரு, அனுபவஸ்தரு. நீங்க இப்பிடி பேசினா நான் ஒண்ணுஞ்செய்ய முடியாது. எங்க குப்பத்துக்கு நல்லது செய்யறேன்னிட்டு வந்திங்க. எதோ வேலைய ஆரமிச்சிங்க. நீங்களே பாதில நிறுத்திட்டுப் பூட்டிங்க. அத்தப்பத்தி கேக்கலாம்னிட்டு வந்தேன். இனிமே உங்களாண்ட பேசி பிரயோசனமில்லிங்க. நான் வரேன்.’

‘போடாங்… பாத்துக்கினே இரு. உன் குப்பத்துல ஒரு போகி கொளுத்தறனா இல்லியா பாரு. பப்ளிக்கா இப்ப சவால் விடுறேன். முடிஞ்சா ஏம்மேல கேசு போட்டு அரெஸ்டு பண்ணு பாப்பம்.’

அதற்குமேல் முத்துராமன் அங்கே நிற்க விரும்பாமல் திரும்பி நடந்தான். வலித்தது. தன் கட்டுப்பாடுகளை மீறி என்னென்னவோ நடந்துகொண்டிருப்பதாக நினைத்தான். அவற்றில் ஏதாவது ஒன்றேனும் தனக்கு லாபகரமாக இருக்க முடிந்தால் நல்லது. எது இருக்கும்?

வீட்டுக்குப் போனபோது அப்பா வாசலில் நின்றுகொண்டிருந்தார். சுற்றிலும் ஏழெட்டு பேர் இருந்தார்கள். இங்கென்ன புதுக்கூத்து என்று நினைத்தபடி வந்தவனிடம், ‘வாடா. எம்.எல்.ஏ. ஆயிட்டியா?’ என்றான் சிநேகிதன் ஒருவன்.

‘அடச்சே சொம்மா கெட. மனுசன் என்னா பாடு படுறான்னு தெரிஞ்சி பேசுங்கடா.’

‘தபாரு குத்துராமா. இந்த டகிள்பாஜியெல்லாம் எங்களாண்ட வாணா. நாங்களும் பாத்துக்கினுதான் இருக்கோம். திடீர்னு எவனோ வட்டம் வந்து வேலை செய்யறான்ன. கல்லு மண்ணு கொண்டாந்து ரெண்டு ரவுண்டு போட்டான். ஆளுங்க நாலு பேரு வந்தாங்க. ரெண்டு நாள் வேலை நடந்ததோட செரி. தடால்னு எவனோ வந்தான், நடந்த வேலைய நிறுத்துன்னு சண்டைக்கு வந்தான். நீ வந்து பேசி என்னமோ செஞ்சி திருப்பி அனுப்பின. திருப்பி எப்ப ஆரம்பிக்கும்? அத்த சொல்லு மொதல்ல.’

‘தெரியலடா. அந்தாளுகிட்டதான் பேசலாம்னு போனேன். அவன் ஓட்டல் பத்தி எரிஞ்சிக்கிட்டிருக்குது.’

‘இதெல்லாம் வாணா. நாங்க வேற விசயம் கேள்விப்பட்டோம்.’

‘என்னான்னு?’

‘அவரு குடுத்த பணத்துல பாதிய நீ லவுட்டிக்கிட்டியாமே?’

‘டேஏஏஏஎய்..’ ஆக்ரோஷமாகப் பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான் முத்துராமன்.

‘டேய், சட்டைய விடுடா.. விடுறாங்கறேன்ல..’ அவனது அப்பா துள்ளி வந்து அவனை விலக்கினார். பல குடிசைகளுக்குள்ளிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கின.

‘தபாருங்கப்பா. எம்புள்ள பணத்த எடுத்திருந்தான்னா அது எனக்குத் தெரியாம இருக்காது. நீங்க என்னிய நம்புறிங்கல்ல?’

கூட்டம் பேசாதிருந்தது. ‘கேக்கறேன்ல? பொறந்ததுலேருந்து இங்க கெடக்குறவண்டா நான். சொல்லுங்க. என்னிய நம்புறிங்களா இல்லியா?’

‘தபார் பெர்சு. எங்களுக்கு உங்கமேல எந்த கம்ப்ளெயிண்டும் இல்ல. நம்ம மருதன் நேத்து அந்தாளு ஓட்டலுக்கு பிரியாணி துண்ண போயிருக்கான். அங்க கவுண்ட்டர்ல பேசிக்கிட்டாங்களாம். வட்டம் ஒரு நல்ல நோக்கத்தோடதான் இந்த குப்பத்துல வேலைங்க செய்ய ஆரமிச்சாரு. நடுவுல இவன நம்பி பணத்த குடுத்ததுலதான் பிரச்னை ஆயிருச்சாம். வேலைய கெடுக்க ஆளுங்க வந்திச்சில்ல? அத்த செட்டப் செஞ்சதே இவந்தான்னு சொன்னாங்க.’

அடிவயிற்றில் எரிந்தது முத்துராமனுக்கு. எத்தனை பெரிய பொய்! கடவுளே, எப்படி நிரூபிப்பேன்?

‘நீயே சொல்லு பெர்சு. இருந்து இருந்து நமக்குன்னு ஒருத்தன் வந்து வேலை செய்யறேன்னு வாரான். அத்தவிட்டுட்டு இவன் எதுக்கு நடுவால நாலு நாள் வெளியூர் எங்கியோ போவணும்?’

‘அடச்சே, நான் போவலடா. எம்.எல்.ஏ. அனுப்பினா மாட்டேன்னா சொல்லமுடியும்?’

‘த.. இத்தானே வேணாங்குறது? எம்.எல்.ஏவாண்ட இல்லாத ஆளுங்க. உன்னிய அனுப்புறாரு அவரு! டேய், கேக்கறவன் கேனயன் இல்லடா. நீ சிங்காரண்ணன் ஆளுன்னு தெரிஞ்சி எம்.எல்.ஏ. உன்னிய ஏண்டா அனுப்புறாரு? நீ கேனயனா? இல்ல அவரையே கேனயன்றியா?’

‘தபாரு கிஸ்டமூர்த்தி, வீணா சந்தேகப்படாத. உனுக்கு எதனா டவுட்டுன்னா நேரா எம்.எல்.ஏவாண்ட போயி கேளு. நீ நினைக்கறமாதிரி நான் சிங்காரண்ணன் ஆளும் இல்ல, எம்.எல்.ஏ. ஆளும் இல்ல. என்னா ஏதுன்னு விசயத்த முழுக்க தெரிஞ்சிக்கிட்டு பேசு.’

‘டேய் இதுக்குமேல இன்னாடா இருக்குது? எத்தினி லவட்டின? அத்த சொல்லு.’

‘வேணாம் மூர்த்தி. என்னிய சீண்டாத. நானே பேஜாராயி வந்திருக்கிறேன்.’

‘நீ என்ன ஆனா எங்களூக்கு என்னடா? நெனவு தெரிஞ்ச நாளா நாத்தத்துல வாழறோம்டா. நெனச்சிப் பாரு. எத்தினி எலக்சன் வந்து போச்சி? எத்தினி அரசியல்வாதிங்கள பாத்தோம்? எத்தினிபேருக்கு வேலை செஞ்சோம். எவனாச்சும் ஒருத்தன்.. ஒருத்தன் நமக்குன்னு ஒரு காரியம் செஞ்சிருப்பானா? கார்ப்பரேசன்ல பேசிக்குறாங்களாம். இந்த குப்பத்தையே இடிச்சிப் போடணும்னு. பட்டா வெச்சிக்கினா வாழுறோம்? பத்து பைசாவுக்கு வக்கில்லாதவங்கடா நாம! ஏன், நேத்திக்கி வரைக்கும் உன் கதி மட்டும் என்ன வாழ்ந்தது? நீயும் அன்னக்காவடிதானே? மொத்தமா பணத்த பாத்ததும் பால்மாறிட்ட? கரெட்டா?’

‘அடிங்..’ என்று பாய்ந்தவனை அவனது அப்பா மீண்டும் தடுத்தார். ‘முத்து, எதுன்னாலும் வாயால பேசு. அவன் கேக்குறதுல என்ன தப்பு? தடதடன்னு ஒரு வேலைய ஆரம்பிச்சிட்டு ரெண்டு நாள்ள நிறுத்திட்டுப் போனா என்னமோ ஏதோன்னு எல்லாருக்கும் தோணத்தானே செய்யும். மருதன் காதால கேட்டுட்டு வந்து சொல்லியிருக்கான். டேய், இங்க வாடா. என்னா கேட்ட நீ? எல்லார் முன்னாலயும் சொல்லு.’

‘அவங்க கேஷியரு பேசிக்கிட்டிருந்தாரு பெருசு. ரோடு போட, மருந்தடிக்க அண்ணன் அம்பதாயிரம் குடுத்துவிட்டிருந்ததாவும், அத்த முத்துராமன் சுட்டுட்டான்னும் பேசிக்கினாங்க.’

‘புழுத்துப்போவும்டா!’ என்றான் முத்துராமன்.

‘தபாரு. எங்களுக்கு என்னா தெரியும்? அவங்க பேசினத சொல்லுறேன்.’

‘என்னிய விட அவங்க பேசினது உங்களுக்குப் பெரிசாயிடுச்சி இல்ல? அம்பதாயிரம்! டேய், கனவுல கூட கையால தொட்டதில்லடா நான்! அந்தாள.. வெச்சிக்கறேன்..’ பல்லைக் கடித்தான்.

‘நீ வெச்சிப்பியோ, தச்சிப்பியோ, அது உம்பாடு. முன்னெல்லாம் ஒரு ஏமாத்தம்னா கேக்க ஒரு நாதி கிடையாது. இந்த விசயத்துல நம்ம குப்பத்துக்காரப் பய நீ முன்ன நின்னு செஞ்சியேன்னு சந்தோசப்பட்டோம்பாரு.. போலாம் வாங்கடா..’

முத்துராமனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. குவிந்திருந்த செம்மண் மேட்டின்மீது பன்றியொன்று ஏற முயன்று சறுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டான். அத்தனை ஆத்திரத்தையும் சேர்த்து ஒரு கல்லை எடுத்து அதன் மீது வீசினான். அது ழவ்வ் என்று குரல் கொடுத்தபடி ஓடிப்போனது.  சட்டையைக் கழற்றியபடி குடிசைக்குள் நுழைந்தான்.

அம்மாவும் தம்பியும் உள்ளே உட்கார்ந்திருந்தார்கள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. பேசத்தான் வேண்டுமா என்றும் நினைத்தான். எல்லாவற்றையும் எல்லாரையும் விட்டுவிட்டுக் கண்காணாமல் எங்காவது போய்விட நினைத்தான். பாளையங்கோட்டைக்குப் போய்விடலாம். எம்.எல்.ஏ. கொடுத்த வேலையையாவது நல்லபடியாக முடித்துவிட்டு வந்தால் நல்லது.

‘சாப்புடறியா?’ என்று அம்மா கேட்டாள்.

‘பசிக்கல. நான் வெளில போறேன்.’

‘எங்க போனாலும் எக்மோருக்கு ஒருநடை போயிட்டுப் போ. சம்மந்தி வூட்டு மனுசங்க வந்துட்டுப் போனாங்க. கல்யாணம் வேணான்னா நேரா வந்து சொல்லிட்டுப் போவறதுதானே, எதுக்கு அரசியல்வாதிங்கள வுட்டு அனுப்பறிங்கன்னு கேட்டுட்டுப் போனாங்க. என்னா ஏதுன்னு எங்களுக்குப் புரியல. நீயேபோயி அங்கயும் புரியவெய்யி.’ என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு எழுந்துபோனாள்.

பிடறியில் பேயடித்தது போலிருந்தது முத்துராமனுக்கு. கழற்றிய சட்டையை அப்படியே மாட்டிக்கொண்டு வெளியே பாய்ந்தான்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:53 pm