கொசு – 25

அத்தியாயம் இருபத்தி ஐந்து

வண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? டியூப் பலவீனமடைந்திருக்கலாம். யாராவது வேலை மெனக்கெட்டு காற்றைப் பிடுங்கிவிட்டிருக்கலாம். இயல்பாகவே காற்றழுத்தம் குறைந்திருக்கலாம். கவனிக்கத் தவறியிருக்கலாம். எதுவானாலும் கொஞ்சதூரம் தள்ளிக்கொண்டு நடந்துதான் ஆகவேண்டும். எனவே, நடந்தான்.

குழப்பமாக இருந்தது. கோபமும் துக்கமுமாகப் பொங்கிக்கொண்டு வந்தது. பச்சக் என்று பரோட்டா மாவைக் கல்லில் வீசி அடித்தமாதிரி முகத்தில் ஓர் அவமானப் படலம் படிந்து இம்சித்தது. திரும்பத்திரும்ப அழுத்தித் துடைத்துக்கொண்டான். ம்ஹ¤ம். உரிந்து வருகிற மாதிரி இல்லை. தோலே உரிந்துவிட்டால் கூடத் தேவையில்லை. அடையாளம் மறைத்துக் கொஞ்சகாலம் சுற்றிக்கொண்டிருக்கலாம். வாழ்ந்தாகவேண்டியிருக்கிறது. காரணமிருந்தாலும் இல்லாது போனாலும்.

‘தபாரு முத்துராமா. உனுக்கு வயசு கம்மி. அனுபவம் கம்மி. எள ரத்தம் பாரு.. சீக்கிரம் கொதிச்சிரும். இதெல்லாம் பொதுவாழ்க்கைக்கு சரிப்படாதுய்யா. எரும மாடு தெரியுமா எருமமாடு? அதுந்தோலு மாதிரி இருக்கணும். மானம் பொத்துக்கிட்டு ஊத்தினாலும் தென்னாடுடைய சிவனே போற்றின்னு சொல்லிக்கினே அடிப்பிரதட்சிணம் பண்ணத் தெரியணும். இப்ப என்னா ஆயிருச்சின்னு இந்த குதி குதிக்கிற?’ என்று கேட்டார் எம்.எல்.ஏ. தங்கவேலு.

உண்மையில் ஒன்றும் ஆகவில்லை என்றுதான் அவனுக்கும் தோன்றியது.  தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமே தற்செயலாக ஒரே மேடையில் சந்திக்க நேர்ந்தால் அன்பை வாரி இறைத்துக் கட்டிப்பிடித்துக் கொஞ்சம் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கேவலம் ஒரு மாவட்டச் செயலாளரும் வட்டச்செயலாளரும் ஒன்று சேர்வதா பெரிய விஷயம்?

முதல் பார்வையில் பகீரென்றுதான் இருந்தது. எம்.எல்.ஏவின் கழுத்தை நெரித்துக் கொல்லும் ஆங்காரம் வந்தது. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டான். சிங்காரம் அட்டகாசமாகச் சிரித்தபடி வாய்யா என்று வரவேற்றபோது, போன ஜென்மத்தில் கூட ஒன்றுமே நடவாதது போலத்தான் கைகூப்பி வணங்கி அருகே சென்று தரையில் அமர்ந்தான்.

‘என்னாய்யா பாக்குற? திருடனுக்குத் தேள் கொட்னமாதிரி இருக்க?’ என்றார் சிங்காரம். எம்.எல்.ஏ. சிரித்தார்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லிங்களேண்ணே. நீங்கதான் எப்பவும் என்னிய தப்பாவே புரிஞ்சிக்கறிங்க.’ என்று சொன்னான்.

‘தபாருய்யா தங்கம்! நான் தப்பா புரிஞ்சிக்கறனாம். என்னா புள்ளய்யா இது!’ என்று ஆச்சர்யப்படுவது போல் பாவனை செய்தார். தங்கவேலு சிரித்தார். ‘சரக்கு அடிக்கிறியாய்யா?’ என்று கேட்டார். சிநேக பாவம் மேலோங்கித் தழைக்கும் காலம் போலிருக்கிறது.

‘சேச்சே. அதெல்லாம் வேணாம்ணே.’

‘சரி, என்னா விசயம் சொல்லு.’

‘ஒண்ணும் இல்லண்ணே. கெளம்பிப் போனேன். சட்னு திரும்பவும் உங்கள பாக்கணும்போல தோணிச்சி. அதான் ஓடியாந்துட்டேன். இங்க வந்ததுல சிங்காரண்ணனையும் பாத்துட்டேன். மனசுக்கு நிறைவாயிருச்சிண்ணே. அண்ணன் என்னிய ரொம்ப தப்பா நெனச்சிக்கிட்டிருக்காரு. அவரு ஓட்டல நாந்தான் கொளுத்திட்டேன்னு ஒரு கோவம். நீங்கதாண்ணே எடுத்து சொல்லணும்.’

‘யாரு சிங்காரமா? யோவ் என்னாய்யா இது? நம்ம முத்துவ தெரியாது ஒனக்கு? பீடி பத்தவெக்கக்கூட குச்சி கிழிக்கத் தெரியாதுய்யா அவனுக்கு’ என்றார். சிங்காரம் இதற்கும் அட்டகாசமாகச் சிரித்தார். முத்துராமனுக்கு நரகமாக இருந்தது. எது இவர்களை இத்தனை தூரம் இணைத்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தான். புரியவில்லை. அருகில் இருப்பது வேதனை தருவதாக இருந்தது. ஓடிவிடலாம் என்று தோன்றியது. கண்காணாமல். முடிந்தால் சென்னையை விட்டே.

‘என்னப்பா நீ சின்னபுள்ளையா இருக்கே. ஏண்டா பத்தவெச்சன்னு நாலு பேரு எதிர்த்தாப்புல நான் கேட்டன்னா, அதுக்கே நீ எனுக்கு தனியா ஒரு டிரீட் வெக்கவேணாமா? அரசியல்ல இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் கண்ணு. நீ எதிர்பாக்காத நேரத்துல உன் தலைமேல வந்து குந்திக்கற கிரீடம் மாதிரி. இந்த நிமிசம் எத்தினி பேர் மனசுல உன்னியப்பத்தி பெர்சா ஒரு இமேஜு டெவலப் ஆயிருக்கும் தெரியுமா? எனுக்கு ஓட்டல் எரிஞ்சது ஒரு ஸ்டேடசுன்னா, அதுக்கு நீ காரணம்னு நான் சொன்னது உனுக்கு ஒரு ஸ்டேடசு. புரியுதா?’

புரியவில்லை. சத்தியமாகப் புரியவில்லை அவனுக்கு. இதே சிங்காரம்தானே எம்.எல்.ஏவைப் பற்றி மேலிடத்தில் பேசி பதவிக்கே வேட்டு வைக்கவிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தவர்? இதே எம்.எல்.ஏ.தானே இந்த சிங்காரத்தை அரசியலைவிட்டே அப்புறப்படுத்த இருபத்தி நாலு மணி நேரமும் கனவுகண்டுகொண்டிருந்தவர்? என்ன ஆயிற்று?

‘தலைவரு சொல்லிட்டாரு தங்கம். இன்னமே நம்ம ஏரியாவுக்குள்ள ஒனக்கும் எனக்கும் ஒரு பிரச்னையும் வராது. நீ நெரந்தர எம்.எல்.ஏ. நான் நெரந்தர வாரியத் தலைவர். த.. இவன் இருக்கானே, சொன்னா சந்தோசப்படுவானே? தெரியுமா முத்து? இன்னமே ஐயாதான் கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு. தலைவரு பெருந்தன்மையா தூக்கிக் குடுத்திருக்காரு பதவி! மொதவேலை உன் குப்பத்த சரி பண்றதுதான்!’

தங்கவேலு புன்னகை செய்தார். ‘அதுக்கு என்னண்ணே? நீங்க பதவில இல்லாதப்பவே செய்ய நெனச்சதுதானே? எவனோ களவாணிப்பசங்க குறுக்கால பூந்து கெடுக்கப்பாத்தானுக. இன்னமே உங்க தேருக்கு ப்ரேக்கே கிடையாதுண்ணே. சும்மா அடிச்சி ஆடுங்க.’

மீண்டும் சிரித்தார்கள். முத்துராமனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. என்னவாவது செய்து இருவரையும் சாகடித்தால் மனம் அமைதியுறும்போலிருந்தது. ஆனால் கொல்வது எப்படி?

‘தங்கம் ஒரு விசயம் தெரியுமா ஒனக்கு? இன்னிக்கி காலைலதான் தோணிச்சி. ஒரு தத்துவ தரிசனம் மாதிரின்னு வெச்சிக்கயேன். தலைவர பாத்துட்டு வந்ததும் ஸ்டிரைக் ஆச்சு. ஒலகத்துலயே நெரந்தரமான பதவி எது தெரியுமா? கொசு ஒழிப்பு வாரியத் தலைவரு பதவிதான். ஆளு வேணா மாறலாம். இந்த டிப்பார்ட்மெண்ட இங்க ஒண்ணும் பண்ணமுடியாது.’

‘பின்ன? கொசுவ ஒழிச்சிர முடியுமாண்ணே? கல் தோன்றி மண் தோன்றாக்காலத்துலேருந்து இருக்குதில்ல? அட, ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னால திருவள்ளுவரே மலேரியா வந்துல்லா செத்திருக்காரு!’

‘இன்னாய்யா புதுசா சொல்ற?’

‘அடிச்சிவிடவேண்டியதுதானே? தபாருங்கண்ணே. மெட் ராசுல ஒரு குப்பத்த விடாதிங்க. டெய்லி மருந்து அடிக்கவைங்க. விழிப்புணர்வு கூட்டம் போடுங்க. புள்ளைங்களுக்கு ஹெல்த் செக்கப் முகாம் தொறக்க ஏற்பாடு பண்ணுங்க. நீங்க செஞ்சாத்தாண்ணே உண்டு. எம்.எல்.ஏன்னு பேரு. என்னா செய்ய முடியுது எங்களால? தெனம் சட்டசபைக்கு போயிட்டு வர்றதுக்குள்ளாரவே தாவு தீர்ந்துடுது. எப்பப்பாரு அடிதடி, ரகளை, சண்டை. நேத்திக்கி ஐயங்குறிச்சிப்பாளையம் சம்முகத்தோட அண்ட்ராயர உருவிட்டம்ல? தாளி சொம்மா ரவுசு உட்டுக்கினே இருந்தான். யாரையும் பேச வுடறதில்ல. பங்காளி கண்ண காட்னாரு. சர்தாம்போன்னு புட்ச்சி இழுத்துட்டேன்.’

‘பெரிய விசயம்யா. இன்னும் ஒரு மாசத்துக்கு பேப்பர்காரன் உன்னிய கவனிச்சிக்கினே இருப்பான். •ப்ரீ பப்ளிசிடி. பேட்டி குடுக்கசொல்லமட்டும் சாக்கிரதையா இருந்துக்க. தமிழ்ப் பண்பாட்ட அதுல கரீட்டா மெயிண்டெயின் பண்ணீரணும். எப்பிடியும் நாளைக்கு மினிஸ்டர் ஆயிட்டன்னு வையி. இதெல்லாம் மறந்துரும். இல்லென்னா உன் இமேஜுக்கு உரமாயிரும்.’

சிரித்தார்கள். முத்துராமனுக்குக் கொஞ்சம் புரிவது போலிருந்தது. தங்கவேலு அமைச்சராவது உறுதியாகியிருக்கிறது. உள்ளூரில் பிரச்னையில்லாதிருக்க, சிங்காரத்துக்கு வாரியத் தலைமைப் பதவி. இருவரையும் ராசியாகப் போகச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்க வேண்டும். தன் குப்பம்? அதன் நலப்பணிகள்? பாளையங்கோட்டை மாநாடு? தலைவர் குடும்பத்துக்குச் சேவை செய்யும் திருப்பணிகள்?’

‘அ, முத்துராமா ஒண்ணு சொல்ல நெனச்சேன். மறந்தே போனேம்பாரு. கட்சி மாநாடு பாளையங்கோட்டைல நடக்குதுய்யா. உன்னிய மாதிரி புதுப்பசங்கள்ளாம் செலவு பாக்காம வரணும். நாலு மாநாடு பாத்தாத்தான் ஒரு இது வரும். என்னண்ணே நாஞ்சொல்றது?’

‘பின்ன?’ என்றார் சிங்காரம்.

‘அண்ணே.. நான்..’

‘அட நீ ஒருத்தன்யா. சும்மா போயிப்பாரு. மூணுவேளையும் மாநாட்டுப் பந்தல்லயே சாப்பாடு குடுத்துருவாங்க. கட்சி கார்டு வெச்சிருக்கல்ல. அது போதும். அங்க நம்ம சினேகிதங்க இருக்காங்க. நானும் சொல்லிவிடறேன். போயிட்டு வாயேன்? இங்க சொம்மா துணி தச்சிக்கினு நையிநையின்னு லோல் பட்டுக்கினு. ஒரு ரெண்டு நாள் ஜாலியா போயிட்டு வா.’

அவனுக்குப் புரிந்தது. வேறொன்றும் செய்வதற்கில்லை இனிமேல். தலைவர் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு தனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லாதபடிக்கு வேறென்னவோ நடந்திருக்கவேண்டும். பதவி உறுதியாகாமல் இந்த உறவு சாத்தியமில்லை. வேகமாக ஓடி மூச்சிறைத்து நின்று திரும்பிப் பார்த்தபோது டிரெடில் மெஷினில் ஓடியது போலிருந்தது. எப்படியானாலும் ஓடியதற்கு ஒரு பலன் இருந்துதானே ஆகவேண்டும்? மெஷினில் ஓடினால் உடம்பு இளைக்கும்.

‘ஏண்ணே, இப்பிடி செஞ்சா என்ன? நம்ம முத்துராமனுக்கு பத்திருவது தையல் மிஷின் வாங்கிக்குடுத்து ஒரு இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சிரலாமே நீங்க? சைடுல ஒரு பிசினஸ் ஆச்சு. பொறுப்பா பாத்துக்குவான். இவனும் நாலு காசு சம்பாரிச்ச மாதிரியும் இருக்கும்?’

‘செய்யலாமே? இவங்கப்பாரு அந்தக்காலத்துல கட்சிக்கு என்னெல்லாம் செஞ்சிருக்காரு தெரியும்ல? பெரியாளு தங்கம்! தியாகத்துல ஊறின பரம்பரை!’

முத்துராமன் எழுந்துவிட்டான். சாந்தி வீட்டில் தன் திருநெல்வேலிப் பயணத்துக்குப் புதிய அர்த்தம் சொல்லி திருமணத்தையே கெடுத்த சிங்காரம் குறித்துப் புகார் சொல்லத்தான் அவன் வந்திருந்தான். ஒருவேளை அந்தத் திருப்பணியை எம்.எல்.ஏவேகூடச் செய்திருக்கலாம் என்று இப்போது தோன்றியது. காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது. தனக்குத்தான் உலகம் புரியவேண்டும்.

எழும்பூருக்குத்தான் திரும்பவும் போனான். சாந்தியின் குப்பத்தை நெருங்கிய தருணத்தில்  வண்டி அதிர, இறங்கிப் பார்த்தபோதுதான் காற்று தீர்ந்திருந்தது. தள்ளிக்கொண்டு போனபோது சாந்தி எதிர்ப்பட்டாள். நிம்மதியாக இருந்தது. கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும். நிறுத்தியபோது தடையேதும் சொல்லாமல் உடன் வந்தாள்.

என்னென்னவோ பேச நினைத்து எல்லாம் முட்டிமோதிச் சிதறிக்கொண்டிருந்தன. திரும்பவும் தோற்றுவிடுவோமோ என்று தோன்றியது. அழுகை வந்தது.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:53 pm