தேவிபாலா – சீரியல் கில்லர்

சூடுபிடிப்பதற்குள் சுருண்டுவிட்டது விஷயம். சல்மான் ஸாரி கேட்டதில் எத்தனை பேருக்கு வருத்தமோ? உண்மையில் நேஷனல் சானல்கள் ஒப்பாரி வைக்காத குறை. எத்தனையோ குண்டுவெடித்தாலும், மும்பை குண்டுவெடிப்புக்குத்தான் ஓவர் ஹைப் கொடுத்துவிட்டார்கள் என்று சல்மான் சொல்லி வைத்ததும தேசபக்தி வியாபார சந்தை சுறுசுறுப்பானது. என்டிடிவியில் ஓவர் ஸ்பீடில் வண்டி ஓட்டும் சல்மானை கலாய்த்தார்கள்.  முதல்நாள் வசூலில் இடியட்டுகளை முந்திவிட்டதாம் சல்மானின் லேட்டஸ்ட் படம். இரண்டு நாளைக்கு மீடியாவை அல்லோகலப்படுத்தியிருக்கலாம்.  எவன்டா கண்டுபிடிச்சது ஸாரி?

கேப்டன் டிவியில் தேவிபாலாவின் நேர்முகம். முன்னால் நாவலாசிரியர். இந்நாள் சீரியல் கில்லர். கேள்வி கேட்கக்கூட நேரம் விடாமல் பேசிக்கொண்டே இருந்தார்.  அழுகை சத்தம், டைட் குளோஸப், திடுக்கிடும் திருப்பம் என்றெல்லாம் வகைதொகையில்லாமல் கேள்விகள் வந்து விழுந்தன.  சளைக்காமல் விளையாடினார்.  சீரியல்னா அப்படித்தான் இருக்கும் என்று கட்டுடைத்து பிரபஞ்ச ரகசியத்தை வேளிப்படுத்திய பின்னர் பந்துவீச்சு நின்று போனது. ஒரே ஒரு சிச்சுவேஷனை மட்டும் சொல்லுங்க, நாலு நாளைக்கு கதையை சுவராசியம் தட்டாம  இழுத்துட்டு போறேன் என்று சொன்னதில் அசாத்திய தன்னம்பிக்கை தெரிந்தது. ஆயிரக்கணக்கில் நாவல்கள் எழுதிக் குவித்ததில் கிடைத்த அனுபவம் பேசுகிறது!

சஸ்பெண்ட் உத்தரவு ரத்தானதும் பிரஸ் மீட் ரெடியானது.  கலைஞர் டிவி தவிர மற்றவர்களெல்லாம் ஆஜர். குடும்ப சகிதம் வந்திருந்து வியர்க்க விறுவிறுக்க பேசினார் உமாசங்கர்.  அதான் பிரச்னை முடிந்துவிட்டதே, அப்புறம் எதற்கு பிரஸ் மீட் என்று யாரும கேள்வி கேட்கவில்லை.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேனாம்பேட்டை சிக்னலில் தூக்குப்போட்டுக்கொள்வதாக பன்ச் டயலாக் வேறு.  இடுப்பில் கைவைத்தபடியே போஸ் கொடுக்கும் தேவரின் கையில் தூக்குக் கயிற்றை கொடுப்பது முறையோ?  தகுமோ?

ரஜினி வீட்டுக் கல்யாணம். என்டிடிவி ஹிந்துவில் நேரடி ஒளிபரப்பு. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பில் திணறிவிட்டார்கள். ஸ்டுடியோவிலிருந்து மோசஸ் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்லக்கூடாது என்று சத்தியம் செய்துவிட்டு வந்திருந்தார்கள். ரஜினி மகளுக்கு வாழ்த்துச் சொல்பவர்களும் டயல் செய்யலாம் என்றதும் ஏகப்பட்ட அழைப்புகள். அம்பத்த்தூரிலிருந்து எழுபது வயது பெரிசு, சிரத்தையாய் ஆங்கிலத்தில் வார்த்தைகளை தேடிப்பிடித்து வாழ்த்தி முடிப்பதற்குள் கொட்டாவி வந்துவிட்டது. அடுத்து வந்து மூன்று நாட்களுக்கும் அதையே ரிபீட் செய்தார்கள். எந்திரன் ஆடியோ, டிரெயிலர் விழாவே இதுக்கு பெட்டர்!

Vijay TV Krishna Jayanthi விஜய் டிவியில் கிருஷ்ண ஜெயந்தி. கோஷ்டி கானமாய் கிருஷ்ண கானங்கள். மேடையிலும், ஆடியன்ஸ் பகுதியிலும் ஏராளமான குட்டி கிருஷ்ணர்கள்.  தலையில் மயிலிறகு, கையில் புல்லாங்குழல் சகிதம் ஒரே கெட்டப்தான். ஆனால் விதவிதமான முகபாவங்கள். சோகமான கிருஷ்ணன், தலையசைக்கும் கிருஷ்ணன், கண்ணீர் விட்டு கதறி அழும் கிருஷ்ணன், மிரண்டு நிற்கும் கிருஷ்ணன், கையில் இருககும் புல்லாங்குழலால் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணனின் வயிற்றை பதம் பார்க்கும் குறும்பு கிருஷ்ணன்.  கிருஷ்ண கானங்களை விட கிருஷ்ணனின் பல கோலங்கள்தான் சுவராசியமாக இருந்தது. எதைப்ப்ற்றியும் கவலைப்படாமல் அருணா சாய்ராம் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டே போனார்.பக்கத்தில் இருந்த ஒரு பரிதாப கிருஷ்ணன் விட்ட கொட்டாவி ஏ கிளாஸ்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 14, 2010 @ 5:01 pm