கும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா!

 

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள். ஒரு மேட்சைச் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. தோணி ஒரு அதிரடி ஆட்டம் ஆடி அந்த போட்டியை ஜெயித்துக் கொடுத்தார். அரையிறுதியில் நுழைந்த சென்னை அணியினர் அட்டகாசமாக விளையாடி கோப்பையை வென்றது சரித்திரம்.

 அதே போல சேம்பியன்ஸ் ட்ராபியிலும் முதலிரண்டு ஆட்டங்களை எளிதாக வென்றாலும் மூன்றாவது ஆட்டத்தை சூப்பர் ஓவரில் கோட்டை விட்டதால் தென்னாப்பிரிக்க அணியான வாரியர்ஸை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பொழுது அவர்களை கொஞ்சம் போராடியே வென்று அரையிறுதிக்கு சென்றது சென்னை அணி. அதில் அசத்தலாக விளையாடி பெங்களூர் அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு இவர்களை எதிர்த்து ஆட வந்த அணி முன்பு மோதிய அதே வாரியர்ஸ் அணிதான்.

 போன முறை தோற்றதற்கு ஈடு கட்டும் வகையில் விளையாடி அந்த அணியினர் வெல்வார்களா? மீண்டும் ஒரு முறை திறமையாக விளையாடி ஐபிஎல் கோப்பையைத் தொடர்ந்து சேம்பியன்ஸ் கோப்பையையும் சென்னை அணியனர் வெல்வார்களா? என மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியது இந்த இறுதிப் போட்டி. ஐபிஎல் விதிகளின் படி இந்த வருடம் அணிகள் யாவும் கலைக்கப்பட்டு மீண்டும் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பதால் இந்த அணியினர் விளையாடும் கடைசிப் போட்டி இதுதான் என்று தோணி பலமுறை உணர்ச்சிவசப்பட்டு குறிப்பிட்டு ஒரு வெற்றியோடு இந்த அணியினர் தங்கள் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என முனைப்பாக இருப்பதாகவும் சொன்னார்.

 ஒரு புறம் அதுவரை அதிக ரன்கள் எடுத்து தன் அணியினருக்கு வழிகாட்டாக இருக்கும் டேவி ஜேக்கப்ஸ். மறுபுறம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தங்கவிக்கெட்டை வெல்ல துடிக்கும் இளம் வீரர் அஷ்வின் என்று சரியான போட்டியாக இந்த இறுதி ஆட்டம் அமைந்தது. பலமுறை டாஸை ஜெயித்த தோணி இந்த முறை தோற்க வாரியர்ஸ் தாங்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்கள். இந்த ஆட்டத்தில் இதுவரை சென்னை அணியினர் எப்பொழுதுமே முதலில் பேட் செய்தே வந்திருக்கின்றனர். இதுவே அவர்கள் முதல் முறையாக இரண்டாவதாக பேட் செய்யப் போகிறார்கள். இது அவர்களால் முடியுமா? அது அவர்களுக்கு பின்னடைவா என்ற ரீதியில் தொலைக்காட்சியில் நிபுணர்கள் பேசத் தொடங்கினர்.

 அவர்கள் மெல்ல அவல் கொடுத்தது போல் துவங்கியது ஆட்டம். போலிஞ்சரின் அருமையான முதல் பந்தில் கிட்டத்தட்ட தன் விக்கெட்டை இழந்திருப்பார் ஜேக்கப்ஸ். ஆனால் சுதாரித்துக் கொண்டு அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பி தனது அதிரடி ஆட்டத்தைத் துவங்கினார். அடுத்த நான்கு ஓவரில் அவரது மட்டையில் இருந்து பவுண்டரி மழை பொழிந்தது. நான்கு ஓவர்கள் முடிந்த நிலையில் அவர்கள் அணியின் ஸ்கோர் 39/0. இதில்  ஜேக்கப்ஸ் மட்டுமே ஏழு பவுண்டரிகளுடன் முப்பது ரன்கள். இதே ரீதியில் போனால் கிட்டத்தட்ட 170 ரன்களாவது அடிப்பார்கள் என்று தோன்றியது. வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து அஷ்வினையோ முரளியையோ பந்து வீச அழைப்பார் தோணி என்று எதிர்பார்த்திருக்கையில் அவர் மீண்டும் போலிஞ்சரையே பந்து வீசச் செய்தார்.

 அவர் செய்வது தவறோ என்று நினைக்கக்கூட வழியில்லாதபடி அந்த ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார் மற்றொரு துவக்க  ஆட்டக்காரரான பிரின்ஸ். அதற்கு அடுத்த ஓவரில் அஷ்வின் பந்து வீச்சில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முனைந்த ஜேக்கப்ஸ் பந்தை தவறவிட்டு அவுட் ஆனார். அதுவரை முன்னணியில் இருந்த வாரியர்ஸ் அணியினருக்கு அப்பொழுது ஆரம்பித்தது சறுக்கல். அடுத்த நான்கு ஓவரில் பதினான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர் அஷ்வினும் முரளியும். பாலாஜியும் மூன்று ஓவர்கள் நன்றாக வீசினார். கடைசி ஓவரில் மட்டும் கொஞ்சம் ரன்கள் கொடுத்தார். ஒரு கட்டத்தில் 170 ரன்களாவது எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த வாரியர்ஸ் அணியினர் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அஷ்வின் நான்கு ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரின் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டார்.

 வெற்றிக்கு சற்றேனும் வாய்ப்பு வேண்டுமென்றால் சீக்கிரமே சில விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இரண்டாம் பாதியை ஆடத் தொடங்கியது வாரியர்ஸ் அணி. தெரான் போன்ற வீச்சாளர்களிடம் பந்தைத் தரமால் சென்னை அணிக்காகவும் ஆடும் நிடினியிடம் பந்தைத் தந்தது ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால் அந்த சிந்தனைக்குப் பின் இருக்கும் திட்டம் மட்டும் நிறைவேறவே இல்லை. 129 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கிய சென்னை அணி, கொஞ்சம் கூட பதட்டப்படாமல் ஆட்டத்தைத் துவங்கியது. 51 ரன்கள் அடித்தால் அதிகமாக ரன் குவித்த பெருமையைப் பெறும் வாய்ப்புடன் ஆடத் தொடங்கினார் விஜய். அவரும் உடனிறங்கிய ஹஸ்ஸியும் நிதானமாக ஆனால் அதே சமயத்தில் தொடர்ந்து ரன்களை எடுத்துக் கொண்டும் ஆடத் தொடங்கினர்.

 

மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் தொடர்ந்து ஒன்று, இரண்டு என்றும் ஓடி ரன்களை எடுத்துக் கொண்டே இருந்தது இந்த ஜோடி. எந்த சமயத்திலும் விக்கெட்டை பறி கொடுப்பது போலவோ அல்லது ரன் ரேட் அதிகமாகும்படியோ ஆகாது பார்த்துக் கொண்டனர். விஜய், இரண்டு முறைகள் செய்த தவறினை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் விட்டுவிட்டது வாரியர்ஸ் அணி. பதினான்காவது ஓவரி 51ஆவது ரன்னை எடுத்து அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற பெயரினைப் பெற்றார் விஜய். விரைவில் தொடர்ந்து அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் சில பந்துகளிலேயே அவுட் ஆனார். ஆனால் தோணியும் ஹஸ்ஸியும் மேலும் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இலக்கை எட்டினர். ஹஸ்ஸி அவர் பங்கிற்கு தொடர்ந்து இரண்டாம் ஆட்டமாக அரை சதமொன்றை அடித்தார். தோணி  19ஆவது ஓவரில் ஒரு ஆறு இரண்டு நான்கு என அடித்து சென்னை அணி வெற்றிபெற உதவினார்.

 மொத்தத்தில் ஆட்டத்தில் பந்து வீச்சு, பேட்டிங் , பீல்டிங் என எல்லா துறைகளிலும் வாரியர்ஸ் அணியை விட சிறப்பாக விளையாடி கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி. ஆட்ட நாயகனாகவும் அதிக பட்ச ரன்களை குவித்தவராகவும் முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார் அஷ்வின். அதிக பட்ச ரன்களை குவித்த அணி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அணி என்று சென்னை அணியும் பல பெருமைகளைப் பெற்றது. ஒரு சூப்பர் ஓவர் தோல்வியைத் தவிர தொட்டதெல்லாம் துலங்கிய அணித்தலைவர் என்ற பெயரைப் பெற்றார் தோணி. தம் பந்துவீச்சின் பொழுது மிக அருமையாக விளையாடி இருந்தாலும் கடைசிப் பந்தை சரியாக தன்னிடம் எறியாத வீரரை தோணி பார்த்த பார்வை அவரின் வெற்றி வேட்கையை நன்றாகப் பிரதிபலித்தது. இப்படி ஒரு அணித்தலைவர் இருந்ததால்தான் சென்னை அணியினருக்கு வெற்றிகள் குவிகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

 சென்னை அணி எப்படி ஒரு குடும்பமாகவே இருந்தது என்பதற்கு வெற்றியைப் பெற்ற பின்னர் அணியினர் அனைவரும் வட்டமாக நின்று இசைத்த வெற்றி கீதம், கோச் ஸ்டீபன் பிளமிங் தொடங்கி அனைவரின் பங்களிப்பைக் குறிப்பிட்ட தோணியின் பேச்சு என்று பல சான்றுகள் கிடைத்தது. மூன்று ஐபிஎல் போட்டிகள் ஒரு சேம்பியன்ஸ் லீக் போட்டி என்று நான்கு தொடர்களில் இரண்டு வெற்றிகள் மேலும் ஒரு இறுதிப்போட்டி, ஒரு அரையிறுதிப் போட்டி என்று தொடர்ந்து நன்றாக விளையாடி வரும் அணி கலையப் போகிறது என்ற வருத்தம் இருந்தாலும், இப்படி ஒரு மகத்தான வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியே. சென்னை அணியின் ரசிகர்களின் கோஷத்தையே சொல்ல வேண்டுமென்றால் இந்த அணிக்கு – ஒரு விசில் போடு!

 

தொடர்புடைய படைப்புகள் :

3 thoughts on “கும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா!

 • September 28, 2010 at 11:45 am
  Permalink

  கும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா!

  அருமையான கட்டுரை. உண்மையாவே ஒரு அணியாக விளையாடினர். தோணி பல இடங்களில் சரியான தேர்வுகள் செய்தார். சூப்பர் ஓவரில் அஷ்வின் சொதப்பிய பின்பும், அவரை நம்பி பந்தை குடுத்து தங்கப்பந்து வாங்கிய தோணி கைக்கு தங்க gloves தான் போடணும்!! 🙂

  Reply
 • September 27, 2010 at 6:49 pm
  Permalink

  கும்தக்கலடி கும்மவா, சென்னைனா சும்மாவா
  எல் ஐ சி ஹைட்டு, சென்னைனா வெய்ட்டு
  பனை மரத்துல வௌவாலா, சென்னைக்கிட்ட சவாலா

  Reply
 • September 27, 2010 at 6:36 pm
  Permalink

  அனேகமா எல்லோருக்கும் இருந்த கேள்வி ஆட்ட நாயகன் விருது எதற்கு விஜய் தேர்வு செய்ய பட்டார். மற்றப்படி இது கொண்டாட பட வேண்டிய வெற்றி.

  அடுத்த வெர்ஷன் புதிய அணி இன்னும் பெரிய வெற்றி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்போடு விசில் போடுவோம்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 27, 2010 @ 3:07 pm