Tamiloviam
ஜனவரி 1 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : காலமெல்லாம் காதல் வாழ்க! - ஜாக்கி சான்
- ச.ந. கண்ணன்
  Printable version | URL |

 

ஜாக்கி சானின் வாழ்க்கை வரலாறான 'குதி', நான் எழுதிய முதல் நூல்.

தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு நிகழ்சிக்காக ஜாக்கி சான் சென்னை வந்திருந்தபோது முதல்வர் கருணாநிதி, ஜாக்கி சானைப் பற்றிய நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரைக்கு என்னுடைய நூல் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கவேண்டும்.

இன்றுவரை நிகரற்ற கதாநாயகனாக விளங்கும் ஜாக்கி சானின் வாழ்க்கையில் ஓர் அற்புதமான காதல் கதை உண்டு. அதன் சுருக்கப்பட்ட வடிவத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

ooOoo

JackieChanகடைகள் எல்லாம் சாத்தியிருந்தன. சாலையில் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அறவே இல்லை. ஜாக்கி சான் மணியைப் பார்த்தான். கடிகார முள் சரியாக பத்தைத் தொட்டிருந்தது. இப்போது அவன் சரியாக தன் காதலி ஓ சாங்கின் வீட்டுக்கு எதிரே நின்று கொண்டிருந்தான்.

கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இருளை விலக்கிவிட்டு வந்தாள் ஓ சாங். வெள்ளை உடை அணிந்து, தேவதைபோல.

'ஹாய்' என்றான் சான்.

அவன் வாழ்க்கையின் முதல் டேட்டிங் ஆரம்பமாகி விட்டது!

'நீங்க வரமாட்டீங்கன்னு நான் நினைச்சேன்'.  அவள் குரலில் ஆச்சர்யம்.

இருவரும் ஒன்றாகத் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள். சான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தான். சிம்பிளான காட்டன் உடை அணிந்திருந்தாள். கேசம் காற்றில் பறந்து கொண்டிருந்தது. இருவரும் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசத்தொடங்கினார்கள்.

'உங்க அகடமியில பயிற்சிகளெல்லாம் எப்படி?' என்று கேட்டாள் ஓ சாங். அவ்வளவுதான், மடைதிறந்த வெள்ளமானான் சான். தன் பிறந்த கதை, 8 வயது முதல் அகடமியில் குங்ஃபூ கற்றுக்கொண்ட விஷயங்கள் என எல்லா கதைகளையும் ஒப்பித்தான். அகடமியில் நிகழும் சிரிப்புச் சம்பவங்களை மறக்காமல் சொன்னான். அவன் சொன்ன அத்தனைக்கும் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தாள் ஓ சாங்.

'நாம கிளம்பலாம்' என்று எழுந்தாள். சான் விடிய விடிய பேசுவதற்கும் தயாராக இருந்தான்.

வீடு நெருங்கியதும் இருவரும் மெளன மொழியில்  பேச ஆரம்பித்தனர். இவ்வளவு தூரம் நடந்து விட்டது. இறுதியாக அவளை முத்தமிடலாமா' என்றுகூட யோசித்தான் சான். வேண்டாம், உள்ளதும் போய்விடும் என்று அடக்கிக் கொண்டான்.

அவள் வீட்டுக்குள் சென்றபிறகும் சான் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். அவள் திரும்பிப் பார்த்தாள். 

'மறுபடியும் என்னை வந்து சந்திப்பியா?' கொஞ்சம் சத்தமாகக் கேட்டாள்.

நன்றி கடவுளே, அவளுக்கு என்னை பிடித்து விட்டது. 'கண்டிப்பா’ என்று உற்சாகமாகி காற்றில் முத்தத்தைப் பறக்க விட்டான் சான். அவள் தன் கைகளால் பெற்றுக்கொண்டாள்.

அப்போது ஜாக்கி சான் ஒரு சாதாரண ஜூனியர் ஸ்டண்ட்மேன். அவளோ தங்கத் தட்டில்  உணவு உண்ணும் வசதி படைத்தவள். என்றைக்காவது ஒருநாள், பிரச்னை வெடிக்கப் போவது உறுதி என்று மட்டும்  சானின் உள்மனம் அடிக்கடி அவனைப் பயமுறுத்திக்கொண்டிருந்தது. 

அன்று பனிமழை பெய்து கொண்டிருந்தது. பூங்காவில் அமர்ந்திருந்த ஓ சாங்கின் முகம் அவள் நிலைமையைச் சொல்லியது.  தூரத்தில் சான் வருவதைப் பார்த்தும்கூட அவளிடம் ஒரு சலனமுமில்லை. அருகே வந்தமர்ந்து அன்றைய படப்பிடிப்புக் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் என்ன சொன்னாலும் கலகலவென சிரிக்கும் ஓ சாங், அன்று உம் என்று இருந்தாள். பதறிப் போய், 'என்னாச்சு’ என்றான் சான்.

'இனி என்னால உன்னை பார்க்கவே முடியாது'.

அவ்வளவுதான். அழுது கொண்டே அங்கிருந்து வீடு நோக்கி ஓடினாள்.

சானுக்கு பித்து பிடித்தாற்போல் ஆகிவிட்டது. இரவு முழுக்க அவன் கதிகலங்கிக் கிடந்தான். அவளை முதல்முதலாக ஓப்ரா நிகழ்ச்சியில் சந்தித்தபோது தூக்கத்தைத் தொலைத்தான். அடுத்தது இப்போது. 

ஒருவழியாக அவளை மீண்டும் பூங்காவில் சந்தித்தான்.

'ஓ சாங் என்னதான் ஆச்சு?'

'அப்பா.... ஒத்துக்கலை...' அவ்வளவுதான் பேசினாள். கையிலிருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.  காத்லிக்கும்போது ஒருகடிதமும் எழுதாதவள் பிரியும்போது முழம் நீளத்துக்கு ஏதோவொன்றை எழுதிக் கொடுக்கிறாள்.   சான் வாங்கிப் படிப்பதற்கே பயந்தான்.

இருவரும் நிரந்தரமாக பிரியப் போவதை கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தாள். 'கடவுளே,  நான் ஏன் இவ்வளவு ராசி இல்லாதவனாகிவிட்டேன்.' அவள் முன்பு தேம்பித் தேம்பி அழுதான்.

அங்கிருந்து விடைபெறும்போது அவள் கேட்டாள், 'சான் உன்னை மறுபடியும் பார்க்க முடியுமா?’. முதல் சந்திப்பில் விடைபெறும்போது சொன்ன அதே வாக்கியம். அப்போது அது தேனாக இனித்தது. ஆனால் இன்று அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முள்கம்பால் அறைவது போலிருந்தது.

'பார்க்கலாம். ஆனா நிச்சயமா இந்த நிலைமையில இல்லை. நான் பெரிய ஆளாகிக் காட்டறேன். அப்போ மறுபடியும் உன்னை வந்து சந்திக்கிறேன்'.

அதன்பின்பு சான் அவளைச் சந்திக்கவில்லை. தாய்வானின் பாப் பாடகியான தெரசாவைக் காதலித்த ஜாக்கி சான், அதன்பின்பு, லின் ஃபெங் ஜியோ என்கிற தாய்வான் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார்.

ஓ சாங், ஹாங்காங்கிலேயே அவளைப் போன்ற ஓர் அழகான பொட்டீக்கை ஆரம்பித்தாள். இது தெரிந்த ஜாக்கி சான் தன் காதலிக்கு மறைமுகமாக உதவி செய்து, தன்னாலான அளவுக்கு அவள் கஷ்டத்தைப் போக்க முயன்றார்.

தமது உதவியாளர்களை அவளுடைய கடைக்கு அடிக்கடி அனுப்புவார். கடையில் அதிக விலையுள்ள துணிகளை அள்ளிக்கொண்டு வரச் சொல்வார். ஜாக்கி சானின் உதவியாளர்கள் வாடிக்கையாளர் என்கிற போர்வையில் ஓ சாங் கடைக்குள் நுழைந்து ஒருவாரத்துக்கு ஆகவேண்டிய வியாபாரத்தை ஒரேநாளில் வாங்கிக் குவித்துவிடுவார்கள். ஓ சாங்கின் கடையிலிருந்து வாங்கி வரப்பட்ட ஒஸ்தியான துணிகளை பிறகு அநாதை குழந்தைகளுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அனுப்பி விடுவார் சான். இவையனைத்தும் ஓ சாங்குக்கு தெரியாமலே நீண்ட காலமாக நடந்து வந்தன. தன் காதலி எக்காரணம் கொண்டும் வியாபாரத்தில் நஷ்டமடையக்கூடாது, மனம் உடையக்கூடாது என்கிற ஆதங்கங்கள் சானுக்கு.

ஜாக்கி சான் அப்போது சர்வதேச நட்சத்திரம். ஓ சாங் ஹாங்காங்கை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேற ஆயத்தமானாள். உடனே, தம்முடைய அனைத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் ஸ்டண்ட்மேன்களின் மனைவிகளையும் அவள் கடைக்கு அனுப்பி கடையையே காலி பண்ணச் செய்தார் சான். கடைக்கு மூடுவிழா நடத்தும் நேரத்தில் தமக்கு இத்தனை நம்பிக்கையான வாடிக்கையாளர்களா என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள் ஓ சாங்.

ஜாக்கி சான் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியின்போது திரையரங்கில்  அமர்ந்து அவர் படத்தைப் பார்த்து ரசிப்பாள் ஓ சாங். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு படிந்து ஜாக்கி சானின் காதலை தூக்கி எறிந்தவள், பிறகு தன் வாழ்க்கையில் யாரையும் காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்துகொள்ளவும் இல்லை.

ஜாக்கி சான் - குதி, ச.ந. கண்ணன், கிழக்கு பதிப்பகம்.  http://nhm.in/printedbook/314/Kuthi

oooOooo
                         
 
ச.ந. கண்ணன் அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |