ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : 29வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது
- பத்ரி சேஷாத்ரி
| Printable version | URL |

Book fair 2006சென்னை புத்தகக் கண்காட்சி  ஜன. 6 தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்து வாழ்த்துரை வழங்கி மாலை ஆறு மணி அளவில் ஆரம்பித்து வைத்ததாக தினசரிகள் சொல்லுமென்றாலும் பிற்பகல் மூன்று மணியில் இருந்தே மக்கள் வர ஆரம்பித்துவிட, விற்பனையும் அப்போதே தொடங்கிவிட்டது.

சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், அகலமான நடைபாதைகள், திருப்திதரத்தக்க ஒளி அமைப்புகள், ஓரளவு தரமான உணவு (இம்முறை சங்கீதா) என்று இந்த ஆண்டுக்கான பரிணாம வளர்ச்சியைக் கண்காட்சி பெற்றிருக்கிறது.

இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள். நிறைய பதிப்பாளர்கள், ஓரளவு விற்பனையாளர்கள், அங்கே கொஞ்சம் சாஃப்ட்வேர் கடைகள், இங்கே சில காப்பிக் கடைகள்.

முதல்நாள் கண்ணில் பட்ட நூல்களுள் குறிப்பிடத்தகுந்த சில: வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பல நாவல்கள் அல்லயன்ஸில் மறுபிரசுரம் கண்டிருக்கின்றன. ஐ.எஃப்.டியில் நூறு ரூபாய்க்கு அற்புதமான தயாரிப்பில் குர் ஆன் தர்ஜுமா வந்திருக்கிறது. தமிழினி வெளியிட்டிருக்கும் ஜெயமோகனின் 'கொற்றவை' என்கிற காப்பிய நூல், தயாரிப்பு நேர்த்தியில் புதிய சிகரங்களைத் தொட்டிருக்கிறது. கவிதா பப்ளிகேஷன்ஸில் ஜெயகாந்தனின் அனைத்து நாவல்களும் அடங்கிய பெருந்தொகுதிகள் வந்திருப்பதாக சேது. சொக்கலிங்கம் சொன்னார். ரூ. 500க்கு எந்தப் புத்தகம் வாங்கினாலும் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இலவசம் என்று கௌரா ஏஜென்சீஸ் ராஜசேகர் அறிவித்திருக்கிறார். (அவர்கள் வெளியிட்ட பொ.செ. நாற்பதாயிரம் பிரதிகள் விற்றுவிட்டனவாம். இதுவரை கிடைத்த லாபம் போதும், இனி வாசிக்க விரும்புகிறவர்களுக்கு இலவசமாகத்தான் தரப்போகிறோம் என்று சொன்னார்.) தி.வை.கோபாலய்யரின் தமிழிலக்கணப் பேரகராதி மறு அச்சாக வந்திருக்கிறது.

ஆங்கிலப் புத்தகங்களில் கூகிள் ஸ்டோரி மற்றும் மித்ரோகின் ஆர்கைவ் ஆகியவை பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதைக் காணமுடிந்தது.

கிழக்கு பதிப்பகம் புத்தக ஸ்டாலில், கண்ணீரும் புன்னகையும், நிலமெல்லாம் ரத்தம், ஆதவன் கதைகள், எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் போன்ற நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என். சொக்கனின் 'ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி' புத்தகத்தைக் கேட்டுக்கேட்டு வாங்கிச் சென்றார்கள்.

2006 Book fairஇந்த வருட நூல்களில் சட்டென்று கண்ணில் பட்ட பெரிய மாறுதல் : பெரும்பாலான பதிப்பாளர்கள் க்ரவுன் சைஸிலிருந்து விடுபட்டு டெமிக்கு மாறியிருப்பது. சில ஜோதிட, வாஸ்து, பட்சி சாஸ்திரப் புத்தகங்கள் கூட டெமியில் தென்பட்டது சற்றே வியப்பாக இருந்தது.

இந்த வருட ஆச்சர்யம்: கவிதை நூல்கள் குறைவாக இருக்கின்றன.

பொதுவாக முதல்நாளன்று நிறைய வி.ஐ.பிகள் வருவது வழக்கம். இம்முறை காளிமுத்து திறந்துவைத்ததாலோ என்னவோ, எப்போதும் முதல் நாள் வரும் துரைமுருகன் வரவில்லை. கனிமொழி - அரவிந்தன் தம்பதியைப் பார்க்க முடிந்தது. எழுத்தாளர்களில் பிரபஞ்சன், பிரேம் - ரமேஷ், மாலதி மைத்ரி, விக்கிரமாதித்யன் ஆகியோர் வந்திருந்தார்கள். பல திரைப்பட உதவி இயக்குநர்கள் வந்தார்கள். வசன கர்த்தா வேதம் புதிது கண்ணன் வந்திருந்தார்.

மொத்தமாக 250 பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் பங்குபெறும் இக்கண்காட்சிக்கு இவ்வாண்டு ஐந்து லட்சம் பார்வையாளர்களை எதிர்பார்க்கிறார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்திவரும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (BAPASI) இவ்வாண்டு இப்பெரும் மக்கள் கூட்டத்தை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பிட் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது, வாசகர்களை யாரும் தம் கடைக்கு வரும்படி வெளியே நின்று அழைக்கக்கூடாது, கூட்டம் சேர்க்கக் கூடாது என்று பதிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி விதிமுறைகள் விதித்திருக்கிறார்கள். எல்லாமே நெரிசல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள்தாம் என்று பபாசி சொல்கிறது.

இக்கண்காட்சியில் ஆண்டின் சிறந்த பதிப்பகமாக பாரதி பதிப்பகம் பாராட்டப்படுகிறது. சிறந்த எழுத்தாளர் என்று சரித்திர நாவலாசிரியர் விக்கிரமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது கவிஞர் அ. செல்ல கணபதிக்கும் சிறந்த விற்பனையாளர் விருது, ஹிக்கின் பாதம்ஸ் நிறுவனத்துக்கும், ஆங்கிலத்தில் எழுதும் படைப்பாளிக்கான விருது சுதா மூர்த்திக்கும் வழங்கப்படுகிறது.

பத்து தினங்களும் மாலை வேளைகளில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை எப்போதும்போல் உண்டு.

ஜனவரி 6 முதல் 16 வரை சென்னையில் வசிக்கும் புத்தக ஆர்வலர்களைக் கண்காட்சிக்கு சென்று பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.

புதிய தகவல்களுக்கு  http://bookfair2006.blogspot.com/ பதிவை படியுங்கள்.

oooOooo
பத்ரி சேஷாத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |