ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
புதிய தொடர் : கொஞ்சம் கதைக்கலாம் வாங்க !
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

 வரும் வாரம் முதல் ராமசந்திரன் உஷா எழுதும் "கொஞ்சம் கதைக்கலாம் வாங்க !" புதிய தொடர் ஆரம்பம்.

- ஆர்முன்னுரை

RamachandraM UshAவணக்கம், வணக்கம், வணக்கம். அது என்ன கதைக்கலாம் என்று கேட்கிறீர்களா?  ஈழத்தமிழில்  "கதைத்தல் மற்றும் பாவித்தல்" வார்த்தைகள் எனக்கு மிகப்பிடிக்கும். கதைத்தல் என்ற சொல், தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. இதற்கு பொருள் சொல்வது என்றால் பேசுதல், அளவளாவுதல் அல்லது வம்படித்தல் என்று சொன்னாலும் ஈடான அர்த்தம் வரவில்லை இல்லையா? கதைப் பேசுதல் என்றால், சின்ன வயசுல அது என்ன எப்பொழுதும் கதை பேசிக்கிட்டு இருக்கே என்று அம்மாவிடம் திட்டு வாங்கியது ஞாபகம் வருகிறது.

என் அண்ணன் ஒருமுறை, அண்ணாசாலையில் பார்த்த நண்பனுடன் பேசிக் கொண்டே, சைக்கிளை தள்ளிக் கொண்டு, அவனை திருவல்லிகேணி லாட்ஜ்ஜில் விட்டு விட்டு வந்த கதையைச் சொல்லியிருக்கிறான். இப்படி பேசிக் கொண்டே நடப்பது, தெரு முனையில் நின்று வம்படிப்பது, வாசல் கேட்டை பிடித்துக் கொண்டே இந்த சப்ஜெட் என்று இல்லாமல் மணிக்கணக்காய்  பேசுவது ஆண்கள் வாங்கி வந்த வரம்.

பி.எஸ். ராமய்யா எழுதிய "மணிக்கொடி காலம்" என்ற புத்தகத்தில் படித்த இலக்கியவாதிகளின் கூட்டங்கள், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் வீட்டு மாடியில்- அதற்கு சபை என்று பெயராம்! அங்கு எழுத்தாளர்கள் கூட்டம் நடக்குமாம், போன்றவைகளைப் படிக்க படிக்க பொறாமையாய் இருந்தது. காரணம் பெண்களுக்கு இத்தகைய பேச்சு அனுபவம் குறைவு. பெண்கள் பேசுவது இல்லையா என்று கேட்காதீர்கள். புடைவை, நகை அல்லது மாமியார் நாத்தனார் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என்று பேசுபவர்களே அதிகம். இலக்கியம், புத்தகம், வாசிப்பு, அரசியல் போன்ற சமாச்சாரங்களை பேசும் பெண்கள் மிக குறைவு.

பெண் எழுத்தாளர்கள் மேல் அதிகம் சொல்லப்படும் குற்றச்சாட்டு, திரும்ப திரும்ப அடுப்படி கதைகள்தானா என்று எள்ளல் எழும். என்னசெய்வது அவரவருக்கு தெரிந்ததுதானே எழுத முடியும். அந்தக்காலத்தில் கோவா, போர்ச்சுக்கீசியர்கள் வசம் இருந்ததை கதைக்களமாய் கொண்டு ராஜம் கிருஷ்ணன் எழுதிய நாவல் "வளைக்கரம்".  செய்திகளை திரட்ட அவர் எவ்வளவு மெனக்கெட்டு இருப்பார் என்று நினைக்க பிரமிப்பாய் இருக்கிறது. இப்பொழுது இணையம் வந்துவிட்டது. தட்டினால் செய்திகளை உட்கார்ந்த இடத்தில் கொண்டு வந்துக் கொட்டுகிறது.  என்னைப் போன்ற பெண்கள் நாலு அறியும் வழியைக் காட்டியுள்ளது. ஆனால் இத்தகைய பேச்சுகள் வெறும் "ரீசைக்கிளிங்" தாங்க. அங்கங்க காதில், கண்ணில் விழுந்ததை, கொஞ்சம் நம்ம சரக்கையும் சேர்த்து அடித்துவிடுவது.

ஆக இங்கு கதைத்தல் என்ற சொல்லை நான் பாவிப்பதற்கு காரணம் அரசியல், சினிமா, பயணம், ஆன்மீகம்,  சமூகம், இலக்கியம், புத்தகம் வேண்டுமென்றால் பெண்ணீயம் என்று அனைத்தையும் கலந்துக்கட்டி எழுதப்போவதால் கதைத்தல் என்று தலைப்பு இட்டுள்ளேன்.  கதைத்தல் என்ற சொல்லுக்கு பொருள் சரியாய் சொல்ல முடியாவிட்டாலும், பொருள் உங்களுக்குப் புரிந்து இருக்கும்.  ஓரளவு அருகில் வரும் அல்லது ஈடான இன்னொரு சொல்லை சொல்ல முடியுமே தவிர, முழுக்க முழுக்க இணையான சொல்லை சொல்ல முடியாது.

- ராமசந்திரன் உஷா

oooOooo
அவர்களின் இதர படைப்புகள்.   புதிய தொடர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |