ஜனவரி 05 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இயற்கையும் நாமும்
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |

இயற்கை என்பது இறைவன் எமக்களித்த ஒரு அரும்பெருஞ் சொத்து. இதை கட்டிக் காத்து எமது தலைமுறையிடம் கையளிப்பது எமது தலையாய கடமையாகும்.

இன்றைய உலகத்தில், காலநிலையில் ஏற்படும் துரித மாற்றங்களுக்கு , உலகில் நாம் இயற்கையைச் சீரழிப்பதில் காட்டும் ஆர்வம் ஒரு முக்கிய காரணி என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஆமாம் எவ்வளவுக்கெவ்வளவு இயற்கை சீரழிக்கப் படுகின்றதோ அவ்வளவிற்கு எமது உலகின் காலநிலையும் தனது சீரான தன்மையை இழக்கின்றது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.

இந்த நிலமையை மாற்றி அமைப்பதற்கு , இனியும் இயற்கை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் நோக்கத்திற்காக நாம் அளிக்கக்கூடிய பங்களிப்புக்கள் எவை. இது எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள். தேவையற்ற பல இயற்கைச் சத்திகளை நாம் பலசமயங்களில் எம்மையறியாமலே விரயமாக்குகின்றோம்.

நான், குறிப்பாக என் நண்பர்களிடையே "உபதேசம் உனக்கல்லடி ஊருக்குத்தான்" என்று நடக்கும் ஒரு மனநிலையைப் பார்த்துள்ளேன். மிகவும் ஆர்வமாக, இயற்கை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றார்கள், தாம் இயற்கையைக் காதலிப்பதாக தமக்குள் ஒரு மாயையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

விருந்து வைபவங்களிலே நண்பர்களுக்கிடையில் காரசாரமாக விவாதிப்பதற்கு ஏற்ற ஓர் விடயமாக, இயற்கையின் சீரழிவை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதன் உண்மையான தாக்கத்தை , இது எமது வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு பயங்கரத்தை சீர்தூக்கிப் பார்ப்பவர்கள் மிகவும் சொற்பம் என்றே கூறுவேன்.

யாருமே பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்பதல்ல எனது கருத்து. மிகவும் சாதாரணா நிலையிலே எமது வீடுகளில் நாம் சேகரிக்கும் "குப்பை" எனும் அந்தக் குவியலிலே எத்தனையோ "மீள் சுத்தீகரிப்பு நிலையங்களுக்கு" (Recycling centres) எடுத்துச் செல்லப் படுவதாலேயெ நாம் உடனடியாக இயற்கையின் பாதுகாப்பிற்காக சிறு சேவையைப் புரிகிறோம் எனபது பலருக்குத் தெரிவதில்லை, அன்றி "ஆ! நான் இதைச் செய்வதால் பெரிதாக என்ன இயற்கை பாதுகாக்கப்படுகின்றது , பக்கத்து வீட்டுக்காரன் ஒன்றும் இப்படி செய்வதில்லையே" என்று எண்ணும் ஓர் எதிர் (Negative) மனப்பான்மை.

எமது சூழலை, நாம் வாழும் இல்லத்தைச் சுற்றிய பகுதி, எமது வீட்டுத் தோட்டம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்து, அங்கு இருக்கும் மரங்கள், செடி, கொடிகளைச் செழிப்பாக வைத்திருப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய சிறிய பணிகளே போதுமானது.

இங்கிலாந்திலே, அரசாங்கம் இந்த இயற்கைச் சீரழிவு கொண்டு வரப்போகும் பயங்கரத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளது என்றே கூறவேண்டும். இங்கிலாந்துப் பிரதமர் டானி பிளேயர் (Tony Blair), இயற்கைச் சீரழிவைத் தடுப்பதில் மேலைநாடுகளின் பங்கு என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்குக்குத் தலமை தாங்கி, இங்கிலாந்து இந்த முயற்சியில் முன்னிலமை வகிக்கும் என்று உறுதியளித்ததும், இந்தப் பிரச்ச்சனை பற்றிய கருத்தின் வலிமையைக் குறிக்கின்றது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நம் மக்களிடையே, இயற்கை மீதான பார்வை மிகவும் குறுகியதின்றாகவே இருப்பதாக எனக்குப் படுகின்றது. பல சந்தர்ப்பங்களிலே எமது பலவீனம் நாம் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களில் பார்வையாளராகவே இருந்து விடுவதுதான் என்பது எனது பணிவான அபிப்பிராயம். சில முக்கியமான காரியங்கள் நடைபெற எல்லோருடைய பங்களிப்புக்களும் அத்தியாவசியமாகின்றது.

பலரும், இப்படியான பணிகள் அரசாங்கத்தின் கடமை, எம்மைப் பாதுகாப்பது அரசங்கம் தானே அவர்களே இந்தப் பிரச்சனைகளுக்கும் முடிவு கண்டு விடுவார்கள் என்று எண்ணுவதும், பின்பு அது நிறைவேறாத பட்சத்தில் இந்த அரசாங்கம் ஒரு வக்கற்ற அரசாங்கம் என அதை தூக்கியெறிவதும் சகஜமாகக் காணப்படும் ஒரு மனப்பான்மை.

நமக்காக, நம்மால் தெரிவு செய்யப்படுவதே அரசாங்கம், எமது பங்களிப்புக்கள் அற்று எந்த ஒரு சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுமே, வெற்றிகரமாக அமையாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். பலர் ஏதாவது சமுதாயச் சேவை அன்றி பொது நோக்கோடு செயலாற்ற வேண்டிய தேவையைப் பற்றி பேச ஆரம்பித்ததுமே அது ஏதாவது வகையில் தம்மிடமிருந்து பொருளை இழக்கப் பண்ணிவிடும் என அச்சமடைந்து அதைப்பற்றி பேசவே பயப்படுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். பணக்கஷ்டங்கள் எதுவும் ஏற்படாமலேயே நாம் பலவகைகளில் இயற்கையைப் பேணும் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கலாம்.

Save Energyஉதாரணமாக இல்லங்களிலே, தேவையில்லாத அறைகளிலோ அன்றி பகுதிகளிலோ மின்சார விளக்கை அணைப்பதன் மூலம் , மின்சாரப் பாவனையைக் குறைக்கின்றோம், இது மின்சார உற்பத்திக் கூடங்களில் அதன் உற்பத்திக்கான தேவையைக் குறைக்கின்றது. இதனால் இயற்கையைப் பாதிக்கும் காரணிகள் உற்பத்தியாவது குறைகின்றது.

இதேபோன்று அளவுக்கதிமாக நீரைச் செலவழிப்பது, நீரின் பாவனையை அதிகரிக்கின்றது, இது கூடுதலான நீர் சுத்திகரிப்பு வேலைகளுக்குக் காரணமாகின்றது, இந்த வட்டத்தின் இறுதியில் ஏதோ ஒரு வகையில் இயற்கை பாதிக்கப் படுகின்றது.எனவே நீரின் பாவனையை மட்டுப்படுத்துவதே ஒரு வகையில் இயற்கையைப் பாதுகாக்கும் ஒரு செயல் என்றே கூறவேண்டும்.

இவையெல்லாம் எதுவித பணச்செலவுமின்றி எம்மால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளே ! இவைகளின் மூலம் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலச் சந்ததியின் உலகைப் பாதுகாக்கும் செயல்களில் பங்காளிகளாகின்றோம். சிறிது சிந்தித்துப் பாருங்கள், நாமெல்லோரும் மேலைத் தேசங்களில் தண்ணீர்ப் பஞ்சமின்றி வாழ்கின்றோம், ஆனால் எமது உடன் பிறப்புக்கள்,எமது தாய்நாடுகளில் தண்ணீர்ப் பஞ்சத்தினால் படும் கஷ்டங்களை நாமே கண்கூடாகப் பார்த்துள்ளோம்.

நாம் வாழும் சமுதாயம் பற்றிய ஒரு விதையைத் தூவுவுவதற்கு , நாம் முற்றும் கைதேர்ந்த விவசாயியாக இருக்கத் தேவையில்லை, இப்படியான ஒரு அலசலைச் செய்வதன் மூலம் நானும் எனது மனத்தை விசாலப் படுத்திக் கொள்கிறேன், இதைப் பற்றிய கண்ணோட்டத்தின் போது, நான் எனது நடைமுறைகளையும் வினவிக் கொள்கிறேன், விட்டுப்போன பல விளக்கங்கள் எனக்கும் கிடைக்கின்றது.

எதிர்காலத்தை விற்று நாம் ஆடம்பரமாக வாழ்வது செருப்புக்கு அளவாக காலையே வெட்டுவது போன்ற ஒரு மூடத்தனமான செய்கையாகும். சமூகவியல் விஞ்ஞானிகள் பலர் இயற்கையின் சீரழிவை நாம் புறக்கணிப்பதன் பயங்கரத்தை தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

உண்மையை உணர்வோம் , உலகைக் காப்போம் , மக்கள் குரலே மகேசன் குரல் என்பதனை நிலைநாட்டுவோம்.

oooOooo
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |