ஜனவரி 06 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சமையல்
மஜுலா சிங்கப்புரா
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஒரு கிராம் இமேஜ்
  - எஸ்.கே
  | Printable version |

  உங்கள் மனத்தில் உங்களைப் பற்றிய கணிப்பு என்னவாக இருந்தாலும், பிறர் மனத்தில் உங்களைப் பற்றி எவ்வகைப் பதிவு உள்ளது என்பதைப் பொருத்துத்தான் இவ்வுலகில் உங்கள் வெற்றி அமையும் என்று என் முந்தைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அது போல் பிறரால் கணிக்கப் பட்டவைகளில் சில உண்மைக்குப் புறம்பாக இருந்தாலும் , அதுதான் உங்களை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டும் வண்ணம் அமைகிறது என்பதால் அவற்றை நீங்கள் பொருட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

  நம் நாட்டின் சரித்திரத்தில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர் இருவரும் மிகப் பிரபலமானவர்கள், மக்களால் பெருமளவில் விரும்பப் பட்டவர்கள், துதிக்கப் பட்டவர்கள். இவர்களின் பெயர் மட்டுமே மக்கள் மனத்தில் பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கும் வல்லமை பெற்றது.

  இவர்கள் எவ்வாறு இந்த அளவுக்கு பாபுலாரிடியைப் பெற்றார்கள் என்று சற்றே ஆராய்ந்தோமானால், அத்தகைய நிலை தன்னிச்சையாகத் தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய பெருமையை அடைய வேண்டுமானால் அதற்கான சிறப்பு முயற்சியை மேற்கொண்டு, அதற்கேற்ற உழைப்பை அளிக்க வேண்டும்.

  மேற்கூறிய இருவரும் systemmatic-காக தங்களைப் பற்றிய ஒரு உயர் நிலை உணர்வினை மக்கள் மனத்தில் பதித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அத்தகைய படிவத்தை உரம் போட்டு, நீரூற்றி வளர்த்தும் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெருமைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் தகுதி பெற்ற அனைவருமே தக்க பெருமை பெறவில்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அதனால் தகுதி, சாதனை இவற்றைத் தாண்டி இன்னொன்று தேவைப் படுகிறது என்பதைப் பற்றித்தான் இப்போது உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

  இத்தகைய முயற்சிக்கு முழுமுதல் தேவை - மனித மனத்தின் இயல்புகள், செயல்பாடுகள், நிறைகுறைகள் (idiosyncrasies, susceptibilities, propensities, thought process and patterns of behaviour) முதலியவற்றைப் பற்றிய முழுப் புரிதலும் உங்கள் வசப் பட்டிருக்க வேண்டும். எந்த வகையில் அணுகினால் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினை ஏற்படும் என்பதைக் கண்டு கொண்டு, அதற்கேற்றதொரு தோற்றத்தை மக்கள் கண்முன் அளிக்க வேண்டும். இந்தக் கலையில் அவர்கள் இருவரும் முழுத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பது திண்ணம்!

  ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய  படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். கஷ்மீர் விஷயத்திலும், சீனாவுடனான அணுகு முறையிலும் பெரியதொரு blunder-களை அவர் இழைத்திருந்தாலும், அவருடைய படிமம் அவரைக் காப்பாற்றியது. அவரும் தனக்கு வேண்டிய சிலரை ஏற்றியும், வேண்டாத பலரை காவு கொடுத்தும் தன்னிலையைக் காத்துக் கொண்டார். இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

  எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். ஆனால் பணக்காரப் பெண் ஒருவர் அவரைச் சுற்றுவார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார். பலர் அவரைவிடக் கூடவே தான தருமங்கள் பல செய்திருக்கலாம். ஆனால் எல்லோரும் பொன் மனச் செம்மல் ஆகி விட மிடியாது!

  ஆகையால் நாம் எல்லோரும் நம் இமேஜை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம். நீங்கள் மிகுந்த தகுதி பெற்றவர்களாக, அறிவுள்ளவராக இருக்கலாம். ஆனால் மற்றவர் மனதில் இடம் பெற வேண்டாமா?

  சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்? பொதுவான சில செயல்முறைகளைப் பார்ப்போம்.

  1. What is invisible, does not exist என்று சொல்வார்கள். மற்றவர் கண்முன் நீங்கள் பெருமை வாய்ந்தவராகத் தோன்ற வேண்டும். உங்கள் மேல் சிறிது வெளிச்சம் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை முன்னிருத்திக் கொள்ளுங்கள். தொட்டார்ச் சுலுங்கி போல் கூச்சப் பட்டு ஒதுங்காதீர்கள். You can't be in the limelight, if the spotlight is away from you!

  2. உங்கள் சாதனைகள் தானாகப் பேசாது. நீங்கள்தான் அவற்றைப் பறை சாற்ற வேண்டும். நீ உன் கடமையைச் செய், அதன் பலனும், பெருமையும் தானாக வரும் என்கிற பழைய பஞ்சாங்கத்தை நம்பாதீர்கள். உங்கள் புலனுக்குப் புலப்பட்டதைத் தானே நீங்கள் கைக்கொள்கிறீர்கள். எங்கே என்ன இருக்கிறது என்று அகழ்வாராய்ச்சி செய்தா ஒவ்வொன்றையும் வாங்குகிறோம்? எது ஊடகங்கள் மூலமாக, அடுத்தவர் பரிந்துரை மூலமாக அறியப்படுகிறதோ, அவைதான் நம் மனத்தை ஆள்கிறது. அது போல் நாமும் ஒரு செலாவணியில் இருக்க வேண்டிய பொருள் (commodity). அதை நாம்தான் முன்னிறுத்தல் வேண்டும்.
  Substance and packing - both are important! மற்றவர் வேண்டி, விரும்பி ஏற்றுக் கொள்ளும்படியாக உங்கள் திறனை வெளிக்காண்பிக்க வேண்டும்.

  3. அடுத்தவரிடம் உரையாடும்போது சிறுபிள்ளைத் தனமாக (flippant and frivolous) இருக்காதீர்கள். உங்கள் மேல் மதிப்பு  குறைந்துவிடும். சீரியஸில்லாத ஆசாமியாகக் கணித்து விடுவார்கள்.

  4. உங்களைப் பற்றிய பெருமைகளை நீங்கள்தான் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்காக யாரிடமும், எப்போதும் உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் உங்களை ஒதுக்கி விசுவார்கள். எதிலும் ஒரு அளவு, நிதானம் (moderation) தேவை. ஒருவர் தன் வீர சாகசத்தை மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று பாருங்கள் :-

  Once got a cheer
  Twice a deaf ear
  Thrice a kick in the rear!

  தற்பெருமை சிறிது தேவைதான். நீங்கள் சொல்லித்தானே ஏனையோர் உங்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் அதை நுணுக்கத்துடன், அளவோடு (subtle) செய்ய வேண்டும்.

  5. உங்களை நீங்களே ஒரு போதும் குறைத்துப் பேசாதீர்கள். முத்து ஐயர் அவர்கள் வெண்பா வடிவில் செய்துள்ள கீதையின் தமிழாக்கத்தில், இதையே வலியுறுத்துவதைக் காணுங்கள்: (நன்றி: ரா.கா.கி அன்பர். எஸ். பசுபதி)

   தன்னாலே தன்னை உயர்த்திடுக தன் நிலையில்
   தன்னை இழித்தல் தகவன்றே - முன்னில்
   தனக்கொருவன் தானே உறவாவான் ஆங்கே
   தனக்கொருவன் தானே பகை.   (த்யான யோகம் :: ஸ்லோகம் : 5)

  6. எங்கு சென்றாலும் அவ்விடத்தில் நீங்கள் நற்பெயரையும் நன் மதிப்பையும் விட்டுச் செல்ல வேண்டும் (leave a lot of good-will). வாழ்க்கையில் நீங்கள் பெறும் வெற்றி, நீங்கள் எவ்வாறாக ஏனையோரால் நினைவில் கொள்ளப்பட விரும்புகிறீர்கள் (what you want to be remembered for) என்பதைப் பொருத்து அமையும் என்கிறார், மேலாண்மைத் துறையில் வல்லுனரான டாம் பீட்டர்ஸ் என்பவர். இதையேதான் வள்ளுவர்,

   தக்கார் தகவிலர் என்ப தவரவர்
   எச்சத்தாற் காணப்படும்

  என்று கூறுகிறார்.

  7. உங்கள் உரையாடல் நகைச்சுவையுடன் இருத்தல் வேண்டும். அதனால் இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து எளிதில் விடுபடலாம். உங்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். மேலும், பெண்கள் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களையே அதிகம் விரும்புவதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஜாதி, இனம், மதம், செக்ஸ் இவைகளைப் பற்றிய ஜோக்கு களைத் தவிருங்கள்.

  8. நீங்கள் சந்தித்து கைகுலுக்கும் அனைவருடைய பெயரையும் கட்டாயம் நினைவில் இருத்திக் கொண்டு, விடை பெறும்போதும் , அடுத்த முறை சந்திக்கும் போதும் அவர்களை பெயரிட்டு மரியாதையுடன் விளியுங்கள். அவர்கள் மனது மிகவும் மகிழ்ச்சியுறும். ஏனெனில், ஒருவரின் பெயர்தான் அவர் கேட்க விரும்பும் அனைத்துச் சொற்களிலும் இனிமையானது! (Dale Cornegie in "How to win friends and influence people")

  9. பிறரிடம் பேசும்போது அவர்களின் கண்ணை நோக்கிப் பேசுங்கள் (make eye contact). அப்போதுதான் நீங்கள் நம்பிக்கையானவர் என்ற எண்ணம் ஏற்படும்.

  10. உங்கள் உடல் சுத்தம் ரொம்ப முக்கியம். Personal hygiene-ன் முக்கியத்துவத்தை பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்கு குளித்து விட்டுத்தான் நேர்காணல் முதலிய முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும். "கனவான் வருவார் பின்னே, "கப்பு" வீசும் முன்னே" என்றிருக்கக் கூடாது. ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிக்குப் போகும் முன், அல்லது முக்கிய நபரைச் சத்திக்கு முன், ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் முதலில் அதைத்தான் "ஈ"யென்று காண்பிக்கிறோம். அதில் முதல் நாள் சாப்பிட்ட போண்டாத் துணுக்குகளுடன் பல்லின் மேற் பரப்பில் சகாயமாகப் படர்ந்த மஞ்சற் பாசியுடனும் சென்று ஒருவரை சந்தித்தால் உங்களைக் கண்டு காத தூரம் ஓடுவார்!

  11. "நாற்ற விரட்டிகளைப்" பயன் படுத்தினால் அவையே கடுமையான நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டும். Use unscented deodorants. என் அறைக்குள் நுழையும் பலர் மூட்டை பூச்சி வாசம் கொண்ட பிசினைப் பூச்சிக்கொண்டு வருகிறார்கள். அவர்களை ஒரு அறை விடலாமா என்ற எரிச்சல் வரும்!

  12. செண்ட் பூசிக் கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லாதீர்கள். பலருக்கு அவை ஒவ்வாததாக இருக்கும். நம்மில் சிலர் குளிக்கிறார்களோ இல்லையோ முனிசிபாலிடி பினாயில் மாதிரி காட்டமான சென்டின் முழு பாட்டிலையும் கவிழ்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். இவர்களின் இமேஜ் எப்படி இருக்கும்!

  13. சுருக்கங்களற்ற, மரியாதையான, மடிப்புள்ள, நேர்த்தியான, உங்கள் உடல் வாகுக்கு ஏற்றதான, கறைகள் மற்றும் அழுக்குக் கீற்றுக்களற்ற உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கும், முக்கிய விழாக்களுக்கும் செல்லுங்கள். எல்லா பொத்தான்களையும் போட்டுக் கொள்ளுங்கள். சில சினிமா பிரபலங்கள் டி.வியில் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்து விட்டுக் கொண்டு பந்தா பண்ணுவதைப் பார்த்து விட்டு நீங்களும் அதேபோல் செய்யாதீர்கள். உங்கள் இமேஜ் கெட்டு விடும். பளபளப்பான, பகட்டான, பைத்தியக்காரனின் தோற்றத்தை ஏற்படுத்தும் (flashy, trendy, psychedelic dresses) உடைகளைத் தவிருங்கள். முக்கிய நபரை சந்திக்க செல்லும்போது காஷுவலாக டீ-ஷர்ட், செருப்பு சகிதம் செல்லாதீர்கள். Formals for formal occasions. தலையில் மொட்டை, காதில் வளையம், மெகா சைஸில் குத்திய பச்சை (Tattoo) - இந்தக் கோலத்தில் ஒரு ஆண் உங்களிடம் வந்தால் உங்கள் கணிப்பு என்னவாக இருக்கும்?

  14. சரியாக தலை வாரி, பெண்களானால் முடி "பப்பரக்கா" என்று பரக்காமல் பின்னி, உங்கள்பால் மரியாதையைத் தோற்றுவிக்கும்படி வெளிக் கிளம்புதல் வேண்டும். பகட்டான நகைகளை அணிய வேண்டாம். அதே போல் sexy-யான உடைகளும் ஒரு negative இமேஜைக் கொடுத்து விடும். நான் என் இஷ்டப்படிதான் டிரெஸ் செய்து கொள்வேன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அதன் பின் விளைவினால் உங்களுடைய குணம், இயல்பு பற்றிய தவறான புரிதல் இன்னொருவரிடம் - அதிலும் மிக முக்கியமானவரிடம், உங்களுக்கு யாரிடம் காரியம் ஆக வேண்டுமோ அவரிடம் - எற்பட்டால் நஷ்டம் உங்களுக்குத் தானே!

  15. கூடியவரை நீங்கள் நல்ல உடல்நிலை பெற்றவராக, ஆரோக்கியமானவராக அறியப்படல் வேண்டும். கடுமையான ஜலதோஷம், இருமல் முதலிய உபாதைகள் இருக்கும்போது பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். அப்படி இயலாவிட்டால், சோர்வைத் தரும் anti-histamine போன்ற மருந்துகளை உள்ளிட்டு விட்டு பொது நிகழ்ச்சிகளிலும், நேர்காணலிலும் பங்கெடுக்காதீர்கள். எட்டு ஊருக்கு நாறும் பச்சிலைப் பற்றுடனும் செல்லாதீர்கள். கையில் கைக்குட்டை, டிஷ்யூ முதலியவற்றை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் கோழையைக் காறித் துப்பாதீர்கள் - உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஓடிப் போய்விடுவார்கள்.

  16. பந்தா, உதார் இல்லாமல் உரையாடுங்கள். கத்திப் பேசினால் மதிப்பு போய்விடும். வாய் துர் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Mouth freshener, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை பயன் படுத்துங்கள். உரையாடலில் எல்லோருக்கும் பங்கெடுப்பை அளியுங்கள். "நன்றி", "வணக்கம்", "Good morning", "good bye" முதலியவற்றை அவ்வப்போது உரைத்தல் உங்களிடம் மதிப்பை ஏற்படுத்தும்.

  17. இன்னொருவருக்கு ஒரு inferiority complex, jealousy இவை உங்களால் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஈகோவை மிதித்து விட்டால் ஜன்மத்துக்கும் உங்களைப் பற்றிய இமேஜ் கெட்டுவிடும்.

  18. உங்கள் நடை, உட்காரும் தோரணை, பேசும் முறை, சாப்பிடும் நாகரிகம், தவறு நேர்ந்தால் உடனே மன்னிப்பு கேட்கும் பண்பு, இணக்க மில்லாத அல்லது மலைப்பூட்டுகிற சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள், எப்படி சமாளிக்கிறீர்கள் போன்றவை உங்கள் இமேஜை நிணயிக்கின்றன (benchmarks). உங்கள் நடையில் தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு தீர்மானம், நிமிர்வு, நேர்கொண்ட பார்வை முதலியவை இருத்தல் வேண்டும்.

  19. பொதுவாகவே ரிலேக்ஸ்டாக, நிதானத்துடன், ஒரு புன் சிரிப்புடன், தன்னம்பிக்கை ஒளி வீச பிரச்னைகளை அணுகுகிறவர்கள்தான் பெரிதும் பிறரால் விரும்பப் படுகிறார்கள். பதட்டப் படுபவர்களையும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு "கோ" வென்று கூச்சலிடுபவர்களையும் உலகம் மதிப்பதில்லை.

  20. உங்கள் மதிப்பு மிக்க நடை, உடை பாவனையினாலும், உங்கள் அணுகு முறையினாலும் உங்களைச் சுற்றி ஒரு காந்த அலை வீச வேண்டும். அதில் கட்டுண்டு பிறர் கிடக்க வேண்டும்!

  21. ஒரு ஏழு செகண்டு நேரத்தில் ஏனையோர் உங்களை எடை போட்டு விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். You'll have no second chance to make a first impression என்று சொல்வார்கள்.

  ஒவ்வொரு நாளையும் நல்ல உயர்வான எண்ணங்களுடன் தொடங்குங்கள். தன்னம்பிக்கையுடன் உலகை எதிர் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே!

  "ஒரு கிராம் இமேஜ், ஒரு கிலோ சாதனையை விட பல மடங்கு சிறந்தது!"

  - லாரன்ஸ். ஜே. பீட்டர். (அலகு மாற்றத்துடன்!)

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |