ஜனவரி 06 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சமையல்
மஜுலா சிங்கப்புரா
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : குவளை மலர்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 75

  கார்காலத்தில் மலர்ந்த குவளை மலர், குளத்தின் நடுவே, ஒற்றைக் காலில் தவமிருக்கிறது

  குளிர்ச்சியான காலத்தில், ஜில் தண்ணீரில் நின்றுகொண்டு எதற்காக இந்த தவம் ?

  இந்தக் கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால், சிறிது நேரம் கழித்து, பேரரசன் பாண்டியனைப் பார்க்கவேண்டும்.

  கூரான வேலை ஏந்திய பாண்டியன், அதிவேகமாய் தாவிச் செல்லும் குதிரையின்மீது ஏறிப் பயணம் செய்கிறான் - அவனுடைய பெருமைக்குரிய மார்பில் தவழுகிற குவளை மலர் மாலையை, வண்டுகள் மொய்க்கின்றன.

  இப்போது நமக்கு விஷயம் புரிகிறது - குளத்தின் மத்தியில் தவமிருந்த குவளை மலருக்கு, பாண்டியன் மார்பில் தவழும் வரம் கிடைத்திருக்கிறது.


  கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்
  நீர்நிலை நின்ற தவங்கொலோ கூர்நுனிவேல்
  வண்டுஇருக்கும் நக்கதார் வாமான் வழுதியால்
  கொண்டிருக்கப் பெற்ற குணம்.

  (கார் - மழை
  நறு - மணம்
  கடி - சிறப்பு
  கயம் - அகழி / குளம்
  வைகலும் - தினமும்
  இருக்கும் - ஆரவாரம் செய்யும்
  நக்க - மலர்ந்த
  தார் - மாலை
  வாமான் - தாவிச் செல்லும் குதிரை (வாவுதல் - தாவுதல் / தாண்டுதல்)


  பாடல் 76

  அன்றுமுதல் இன்றுவரை, காதல்வயப்பட்ட பெண்களுக்கு 'இற்செறித்தல்' என்னும் கொடுமையான தண்டனை வழக்கமாய் இருக்கிறது.

  'இற்செறித்தல்' என்பதை இல்லம் - செறித்தல் எனப் பிரித்துச் சொல்லலாம், 'இல்லம்' என்றால் வீடு, 'செறித்தல்' என்றால், அடைத்துவைப்பது / மறைத்துவைப்பது / பூட்டிவைப்பது.

  தங்கள் பெண்ணின் காதல் விஷயத்தை அறிந்ததும், வானத்துக்கும், பூமிக்குமாய்க் குதிக்கிற பெற்றோர், அவளை வீட்டினுள் அடைத்துப் பூட்டிவிடுகிறார்கள் - போதாக்குறைக்கு, ஏழெட்டுப் பெண்களைக் காவலுக்கு நிறுத்திவிடுகிறார்கள்.

  இந்த நிலைமையில் அந்தப் பெண் என்னதான் செய்வாள் ? பாவம் ! அசோக வனத்து சீதையைப்போல் சோகமே உருவாக ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கிறாள் அவள்.

  தன்னைச் சுற்றியிருக்கும் காவல் பெண்களைப் பார்க்கப்பார்க்க, அவளுடைய தனிமையுணர்ச்சியும், வேதனையும், கோபமும் அதிகமாகிறது, 'என்னை என் காதலனோடு சேரவிடாமல் தடுக்கும் வில்லிகள்.', என்று அவர்களை முறைக்கிறாள் அவள், அடுத்த விநாடி, 'இவர்களில் யாரேனும் ஒருவர் என்மீது கருணை காட்டினால் போதுமே.', என்று ஏங்குகிறாள், ஒவ்வொருத்தியாய் உற்றுப்பார்த்து, 'பெண்ணே, நீ எனக்கு உதவுவாயா ? இந்த வீட்டுக் காவல் சிறையிலிருந்து என்னை விடுவிப்பாயா ? என்னை என் காதலனோடு சேர்த்துவைப்பாயா ?', என்று கெஞ்சுகிறாள்.

  ஆனால், அந்தக் காவல் பெண்களில் யாரும் அவளுக்கு உதவத் தயாரில்லை.

  தோல்வியின் வேதனையும், இயலாமையும், ஆற்றாமையும் அவளைத் தாக்க, ஆவேசமான குரலில் பேசுகிறாள் அவள், 'என் காதலன் பாண்டியன், வைகை ஆற்றின் அலைகள் உரசுகிற பெரிய மாளிகையில் இருக்கிறான். என்றைக்காவது ஒருநாள், என்னை அடைத்துவைத்துக் காவல் காக்கும் உங்களின் தலைகளை மிதித்துக்கொண்டு நடந்துசென்று, நான் என் காதலன் பாண்டியனோடு சேருவேன்.'

  நம்பிக்கையோடு இப்படிச் சொன்ன மறுவிநாடி, தன்னுடைய இப்போதைய நிலைமையை நினைத்துக்கொள்கிறாள் அவள், மிகுந்த ஏக்கத்துடன் அவளுடைய சொற்கள் பிறக்கின்றன, 'பாண்டியனின் மனைவி என்ற பெருமையுடன் நான் வாழும் அந்த நாள் எப்போது வரும் ? யாரேனும் எனக்குச் சொல்வார்களா ?'

  அறிவார்ஆர் யாம்ஒருநாள் பெண்டிரே மாகச்
  செறிவார் தலைமேல் நடந்து மறிதிறை
  மாடம்உரிஞ்சும் மதுரையார் கோமானைக்
  கூட ஒருநாள் பெற.

  (ஆர் - யார்
  பெண்டிரேமாக - பாண்டியனுக்கு உரிய பெண்ணாக / மனைவியாக
  செறிவார் - வீட்டினுள் அடைத்துவைக்கிறவர்கள்
  மறி - தடுத்தல் / வழிமறித்தல்
  திறை - அலை
  மாடம் - மண்டபம் / மாளிகை
  உரிஞ்சுதல் - உராய்தல் / தேய்த்தல்
  கோமான் - அரசன்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |