ஜனவரி 06 2005
தராசு
வ..வ..வம்பு
பங்குச்சந்தை ஒரு பார்வை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சமையல்
மஜுலா சிங்கப்புரா
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  மஜுலா சிங்கப்புரா : ஒரு நாடும் ஒரு நாயகனும்!
  - எம்.கே.குமார்
  | Printable version |

  தீ உருவாகவேண்டுமெனில் எதுவாயினும் இரண்டு உரசிக்கொள்ளத்தான் வேண்டும். இது மனிதன் கண்டுபிடித்த முதல் விதி. இவ்விதிதான் வரலாற்று நாயகர்களுக்கும் முதல் உண்மையாக மனதிற்குள் உரைத்திருக்கிறது. தீயை உருவாக்குவது எப்படி என்பது தெரிந்துவிட்டது. அத்தீயை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் அவர்களின் உள்மன கதாநாயகன் அமைதியாகவும், உபயோகமாகவும் சிலசமயங்களில் ஆக்ரோஷமாகவும் விளையாட எத்தனித்து விட்டான். அங்கிருந்து அவர்களின் வாழ்க்கை பற்றியெரியத் துவங்கிவிட்டது. பற்றியெரிந்தது அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, நம்முடையதும் என்பதுதான் இப்பொழுதெல்லாம் நாம் வரலாறு படிக்கும்பொழுது உணர்ந்துகொள்ளும் முக்கிய விஷயம்.

  இவ்விதியை உணர்ந்துகொண்ட சிலர் தானாகவே அத்தகைய நெருப்புகளை உருவாக்கினர். 'எனக்குத் தேவை நெருப்பு. அது வேண்டுமென்றால் ஏதாவது பற்றி எரிந்துதான் ஆகவேண்டும், எரிவது என்ன என்பதைப்பற்றி எனக்கு எப்போதும் கவலையில்லை அக்கறையுமில்லை' என்பது அவர்களது உள்மன வெளிப்பாடு. இன்னும் சிலர், ஏதாவது பற்றி எரியும் போது உருவாகிய அந்நெருப்பை 'ஏன் எனக்காய் மாற்றிக்கொள்ளக்கூடாது' என்று லாவகமாக தனது சுய வேண்டுதல்களுக்கேதுவாய் மாற்றிக்கொண்டார்கள். அவர்களின் சுய வேண்டுதல்கள் பலசமயங்களில் தான் முன்னேற வேண்டும் என்பதாகவே இருக்கும்; சிலசமயங்களில் மட்டுமே அந்நெருப்பின் வழி நாடும் நம்மைச்சுற்றியுள்ளவர்களும் முன்னேற வேண்டும் என்பதாய் இருக்கும்.

  மேலே உள்ளதைப் பின்பற்றி வரலாற்றுவழி போனோமாகில், எத்தனையோ சாதனையாளர்களையும் சூழ்ச்சிக்காரகளையும் கோமான்களையும் கொடுங்கோலர்களையும் வீரர்களையும் வெஞ்சினக்காரர்களையும் வியந்தும் பயந்தும் நாம் காணமுடியும். அலெக்ஸாண்டர்கள் முதல் கஜினிமுகமது கோரிமுகமது வரை, ராஜபுத்திரர்கள் முதல் நாடோடியாய் இருந்து மன்னரானவர்கள் வரை, இராபர்ட் கிளைவ் முதல் ஹிட்லர் வரை, அண்ணா முதல் அத்வானி வரை எல்லோருக்குமிடையே அத்தகைய ஒரு நெருப்புப்பந்தம் இருந்திருக்கிறது. 'மாஜூலா சிங்கப்புரா' என்று சிங்கப்பூரின் தேசிய கீதப்பாடலின் முதல் வரியிலிருந்து சிங்கப்பூர் பற்றி எழுதப்போகும் இந்நேரத்தில் அத்தகைய ஒரு 'சிங்கை' வரலாற்றுச்சூரியனைப் பற்றிச் சொல்லிவிட்டுச் செல்வது அவசியம். இந்தச் சூரியன் மட்டுமல்ல; எந்தச்சூரியனும் இன்றோடு முடியப்போவதில்லை. நாளெல்லாம் வரும்; நாளும் வரும். இச்சிங்கைச்சூரியனின் ஒவ்வொரு விடியலிலும் எல்லா இளைஞர்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் ஏதோ ஒரு வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கும். அதுவே நம் எல்லோருடைய இப்போதைய தேவையும்!

  1954 நவம்பர் 21. புதிய உலகைப் படைக்குமொரு உத்வேகத்தோடு சூரியன் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. சிங்கப்பூரின் 'விக்டோரியா கான்சர்ட் ஹால்'. உற்சாகம் நிரம்பி வழியும் மனங்களோடு எங்கும் மனிதத்தலைகள். எதையும் சாதிக்கும் உணர்வுக்குன்றுகளோடு அவருக்காய் காத்திருக்கிறது கூட்டம். எல்லோருடைய உள்ளங்களிலும் ஒரே எண்ணம் வானுயர்ந்து நிற்கிறது. வருகிறார்கள் அவர்கள். லண்டனில் படித்தவர்கள். தாய்நாட்டின் பால் வேட்கை கொண்டவர்கள். லண்டன் படிப்பு எப்போதும் விடுதலை வேட்கையையும் ஊட்டிவிடும் இயல்பு கொண்டது போலும்.! விடுதலை தர மறுப்பவர்கள் லண்டன்காரர்கள் ஆயினும்.!

  முதலில் மேடையேறுகிறவர் அவர். 31 வயதுக்காரர். காந்த ஒளி வீசும் கண்களும் உருவமும் கொண்டவர். பற்றி எரியும் மனதின் விளைவாய் ஒரு உணர்வின் வடிவத்தில் அவரது முகம் ஜொலிக்கிறது. சட்டப்பணி ஆற்ற விரும்பியவர். மக்கள் பணிக்காக மேடையேறும் அவர் திரு. லீ குவான் யூ. இளைஞர். அவரைத்தொடர்ந்து வருகிறார்கள், திருவாளர்கள். கோ கென் சுவீ, எஸ்.ராஜரத்தினம், கே.எம்.பைன், மற்றும் திரு.டோ சின் சை. ஐவரும் இளைஞர்கள். ஐவரும் நண்பர்கள்.

  அன்று உதயமாகியது Peoples Action Party எனப்படும் பி.ஏ.பி. "மக்கள் செயல் கட்சி." பற்றி எரிந்துகொண்டிருந்த சீன- மலாய் இனத்து விவாகாரங்களுக்கிடையே, தொடர்ந்து கொண்டிருந்த 'கம்யூனிஸ்ட் கட்சி- மலாய் ஆட்சி- ஆங்கிலேய ஆளுமை'களுக்கிடையே அன்று உதயமான பி.ஏ.பி கட்சி, 1955ல் நடைபெற்ற அதன் முதல் (சட்டமன்ற) தேர்தலில் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றது. பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து சுய ஆட்சி பெற்றபின் வந்த முதல் தேர்தலில் (1959) போட்டியிட்ட 51 தொகுதிகளில் 43ல் பிரம்மாண்ட வெற்றி பெற, நாட்டின் முதல் பிரதமரானார் திரு. லீ குவான் யூ.

  தொடர்ந்து (வந்த சீன-மலாய் இனச்சண்டைகள், கம்யூனிச கட்சிச் சண்டைகள் என்று) சீன இனத்தவர் அதிகமுள்ள சிங்கப்பூர் மாநிலத்தவர்கள் செய்வதையெல்லாம் வேண்டா வெறுப்பாய்ப் பார்த்துக்கொண்டிருந்த மலாயா அரசாங்கம், 'ரொம்பத்தான் ஆடுகிறீர்கள். கொஞ்ச நாளைக்கு அனாதையாய் விட்டால் தான் சரிப்பட்டு வருவீர்கள், நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாய் மாதிரி அலைந்து திரும்பி வருவீர்கள்' என்ற மமதையுடன், 'இந்தா சுதந்திரம்! எடுத்துக்கொண்டு தனி நாடாய் ஓடு' என்று, ஓடுகிற ரயிலிலிருந்து ஒருவரைத் தள்ளி விடுவதைப்போலத் தள்ளி விட்டது சிங்கப்பூரை! கீழே விழுந்தவர்கள் பதறியடித்து எழுந்து 'ஐயகோ என்ன செய்யப்போகிறோம் இனி' என கதறிக்கொண்டிருக்கையில் அந்தச்சூரியன், 'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் எல்கேஒய் (Lee Kuan Yew)' என்று மெல்ல அவருக்குள்ளிருந்து எழுந்து வந்தது.

  1959 ஆம் ஆண்டு தனது 35வது வயதில் பிரதமராய் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார் அவர். நாடு மலேயா தீபகற்பத்திலிருந்து பிரிந்து தனியானபின் ஒரு கட்சியின் தலைவனாய், ஆட்சியின் தலைவனாய் தான் செய்தது, நிகழ்த்தியது, பார்த்தது, பண்ணியது, அரங்கேற்றியது, நடத்திக்காட்டியது, நடந்துகொண்டது, கையாண்டது மற்றும் 1990 வரை தொடர்ந்து 31ஆண்டுகள் பிரதமராய் இருந்து சாதித்தது என அத்தனையையும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எல்லாவற்றிலும் அவரது அசாத்தியமும் திடமான மனோபாவமும் உள்ளிருந்து வரும் வெளிச்சத்தின் வீச்சை எது தடுத்தாலும் அதை இரண்டாம் சிந்தனையின்றி எடுத்து வீசி எறிந்து ஒற்றை நிகழ்வாய் தான் நினைத்ததை விரும்பியதை அடையும் உறுதியான குணமும் எல்லாவற்றிற்கும் மேலாக தூரத்தில் அவருக்கு மட்டுமே தெரிந்த வெற்றி விளக்கின் உள்ளளியுமே அவைகளை நிகழ்த்திக்காட்ட ஏதுவாய் இருந்திருக்கின்றன என்று சொன்னால் மிகையில்லை.

  அவரது முதல் தேர்தலில் அவர் பயன்படுத்திய தேர்தல் வாசகம் "baptism by fire". வாசகங்கள் வெறும் வாசகமாய் இருக்கும்வரை மறைந்து போகலாம். அதுவே வாழ்க்கையெனில்?! இல்லையேல் ஆகஸ்டு 9 ல் சுதந்திரம் பெற்று செப்டம்பரில் ஐ.நா நாடுகளில் உறுப்பினராகி அக்டோபரில் காமன் வெல்த் நாடுகளில் பதிவு பெற்று, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பான வாழ்வுக்கும் உறுதுணையாய் இருந்த ஆங்கிலேயர்கள் தங்களது ஒட்டுமொத்த படைகளையும் திருப்பி எடுத்துக்கொண்ட பின்னும் சொந்தமாக ராணுவம் அமைத்து, வங்கி அமைத்து, விமானத்தளம் கட்டி, தனிநபர் வருமானத்தையும் குறிப்பிட்ட அளவு உயர்த்தி...இன்னும்..இயங்குகிறார் இயக்குகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். Baptism by Fire!

  ஜுலை 1961 முதல் செப்டம்பர் 1962 வரை சிங்கப்பூரில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள் மொத்தம் 153 ஆம். சிங்கப்பூரின் வரலாற்றில் ஒரு சாதனை இது. ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளில் நிலைமை தலைகீழ். அதுவும் சுதந்திரம் பெற்ற பின் 1969 ல் ஒரு வேலை நிறுத்தம் கூட இல்லையாம். கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே வேலை நிறுத்தம் நடந்துள்ளதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள்! உண்மைதான் இது! உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை.

  இதோ 81 வயது இளைஞராய் அவர் மீண்டும் மேடையேறுகிறார். அதே ஞாயிற்றுக்கிழமை. அதே விக்டோரியா கான்சர்ட் ஹால். இது பி.ஏ.பி யின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவுக்காக, நவம்பர் 21 2004! ஐந்து நண்பர்களில் ஒருவர் இறந்துவிட, இருவர் மிக மோசமான உடல் நிலையில் இருக்க, ஒருவர் மட்டும் அவருடைய உதவியாளோடு மேடையேற, 81 வயது இளைஞராய் திரு. லீ குவான் யூ உணர்ச்சிகரமாக பேசுகிறார். மக்கள் வெள்ளத்தின் நடுவே மீண்டும் ஒரு உரை. சாதித்தவராக, இனிமேல் சாதிக்கவேண்டியவர்களுக்காக ஒரு உரை. அடுத்த தலைமுறையில் என்னென்ன மாற்றங்கள் வரும் அதை எப்படி எதிர்கொள்வது என்பதாய் அமைந்த மீண்டும் ஒரு தணியாத தீயின் வேகம் கொண்ட உரை! சுருங்கச்சொல்லின் அது ஒரு தலைமையின் தீ! ஒரு தலைமுறையின் தீ! அடுத்த தலைமுறையின் மாற்றம் உணர்த்தும் தீ! தீயினை உள்வாங்கிக்கொள்வது உபயோகப்படுத்திக்கொள்வது யாராய் இருக்கமுடியும்? 

  "உங்களது உள்ளலியைக் கவனியுங்கள், அது தரும் நமது வாழ்விற்கான சிறப்பான மாற்றங்களையும் அதற்கான சாத்தியத்தையும்!" யார் சொல்வது? அவர்தான் 81 வயது இளைஞர்!


  சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

  சிங்கப்பூர். ஜனவரி 10. உலகப்பொருளியலின் மாற்றங்கள் குறித்தான போக்கு பற்றி நேற்று சிங்கப்பூரர்களிடம் பிரதமர் உரையாற்றினார். உலக  மாற்றங்களுக்கு ஏதுவாக சிங்கப்பூரர்களும் இணைந்து முன்னேறவேண்டும் எனவும் பல்துறைகளில் செறிந்த அறிவு கொண்டவர்களாக நாம் மாறவேண்டும் எனவும் அவர் கூறினார். குறைந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தினைக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் எதிர்கால சிங்கப்பூரர்களின் நலத்தைக் கணக்கில் கொண்டும் சிங்கப்பூரின் பெருவாரியான வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் குறிப்பிடத்தகுந்த சில காரியங்களில் முதன் முறையாக அதீத நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்க முனைந்திருப்பதாகச் சொன்னார். அதனடிப்படியில் இனி ஒவ்வொரு அலுவலகத்திலும் இக்காரியத்திற்கு உதவும் வகையில் சில ஓய்வறைகளையும் அதற்கேற்ற வசதியுடன் கூடிய நவீன அமைப்புகளையும் ஏற்படுத்தப்போவதாகச்சொன்னார். இனி சிங்கப்பூரர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பியதைச் செய்ய முடியாதவாறு வாழ்க்கை வசதிமுறைகள் இல்லையெனச்சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனவும் விரும்பும்போது அவர்கள் அவ்வறைகளுக்குச் சென்று சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து முயலலாம் என்றும் அவர் மேலும் சொன்னார்.

  இந்நிலையில் பல்வேறு ஆயத்தங்களுக்குப்பிறகு அதன் நிலைத்தன்மை குறைந்து மேற்கொண்டு முயல முடியாதவர்களின் நிலையைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் சமுதாய மேம்பாட்டுக் கழகமும் வேண்டுகோள் விட்டிருந்த நிலையில் அதுகுறித்து அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அதற்காக அவ்வோய்வறைகளில் வாழ்க்கை நல மேம்பாடும் உடல் கல்வியும் குறித்தான சி.டி.க்களை ஓடவிடுவது மற்றும் உடல் பயிற்சிக்கேற்ற வைட்டமின் மாத்திரைகள் வைப்பது பற்றியும் யோசிப்பதாகச் சொன்னார். இதற்கிடையில் நேற்று திருமணம் ஆன ஒரு ஜோடி, 'பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்வதே எங்களின் லட்சியம்' என்று சொல்லியிருந்ததைப் பார்த்த மக்கள் நல மேம்பாட்டு அமைச்சர் அச்சோடிக்கு, அதற்காக ஏற்படும் அத்தனை செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் சொன்னார். சமுதாயத்தில் இம்மாதிரியான சாதிக்கும் இளைஞர்களும் இளைஞிகளுமே இன்றையத் தேவை என்றும் குறிப்பிட்டார்.

  இதற்கிடையில் 'எங்களுக்கு அரசாங்கம் நிரந்தரக் குடியுரிமை கொடுத்தால் வருடத்திற்கு இத்தனை பிள்ளைகள் வீதம் எத்தனை வேண்டுமானாலும் பெற்றுத்தர தயாராய் இருப்பதாக' இந்திய-சீன இளைஞர் குழு ஒன்று இணையத்தில் முறையிட்டிருக்கிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2005 Tamiloviam.com - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |