Tamiloviam
ஜனவரி 11 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : மொட்டை
- மதியழகன் சுப்பையா [madhiyalagan@gmail.com]
| | Printable version | URL |

இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி

ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை. அமைச்சர் ஒருவரின் தலை திடீரென  மொட்டையாகி விட்டதுதான். நேற்றுவரை அவருடையத் தலையில் நீண்ட சுருள் முடி அடர்ந்து இருந்தது. ஆனால் இரவோடு இரவாக அவை காணாமல் போய் விட்டது. அவர் மொட்டையாகி விட்டார்.

தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு விட்டது. தங்கள் அபிமான அமைச்சருக்கு என்னவாகியிருக்கும் என்று அவர்கள் அறிவுக்கும் விபரத்திற்கும் தகுந்தாற்போல் காரணங்களை சொல்ல துவங்கினார்கள். '' ஒருவேளை மூளையில் சிந்தனைகளை நிரப்ப வேண்டும் என்பதற்காக முடித்திரையை அகற்றி இருக்கக்கூடும் '' என்றான் ஒருவன். மற்றொருவனோ '' இல்லையப்பா அவருடைய குடும்பத்தார் யாராவது மரணமடைந்திருக்கக்கூடும் அதனால் மொட்டையடித்திருக்கலாம்'' என்றான். இன்னொருவனோ '' ஆனால் அமைச்சர் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருகிராறே?'' என்றான் குழப்பமாக.

இறுதியில் அவரிடமே கேட்கலாம் என முடிவாகியது. '' தலைவர் பெருமானே! மேன்மை பொருந்திய குடும்பத்தினர் யாராவது காலமாகி விட்டாரா? '' என்றான் தொண்டன் ஒருவன் பணிவாக.

அதற்கு அமைச்சர் '' இல்லை'' என்று பதிலளித்தார். தமது அமைச்சர் யாருக்கு எதிராக அறிக்கை விடுவதாக இருந்தாரோ அவர்கள் செய்த வேலையாய் இருக்குமோ? என தொண்டர்கள் அனைவரும் அதீத கற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

'தலைவர் பெருந்தகையே! கனம் அமைச்சர் அவர்களுக்குத் தான் மொட்டையடிக்கப் பட்ட விஷயம் தெரியுமா? அப்படித் தெரியும் என்றால் மொட்டையடித்தது யார் என்று சொல்லிவிட முடியுமே!?'' என்றான் தொண்டர்களில் ஒருவன்.

அமைச்சர் அமைதியாகவும் தெளிவாகவும் '' நான் மொட்டையடிக்கப் பட்டுள்ளேனா இல்லையா என என்னால் தீர்மானமாக சொல்ல இயலாது'' என்றார். '' ஆமாம். மொட்டையடிக்கப் பட்டுள்ளீர்கள்! எங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது'' என்று தொண்டர்கள் கத்தினார்கள். '' உங்கள் அனைவருக்கும் தெரிவதனால் ஒன்றுமே ஆகிவிடப் போவதில்லை. அரசாங்கத்திற்குத் தெரிய வேண்டும். எனக்கு மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையா என விசாரிக்க தீவிர விசாரணை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்'' என்றார் அமைச்சர் கம்பீரமாக.

''இப்போதே தெரிந்து விடலாமே! அமைச்சர் அவர்கள் தன் தலைமேல் கையை வைத்துத்தடவினாலே போதுமே'' என்றான் தொண்டன் ஒருவன். ''இல்லை, நான் ஒருபோதும் என் தலையில் கையை வைத்துத் தடவி தெரிந்து கொள்ளப் போவதில்லை. அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் அவசரப் படாது. ஆனால் நமது அரசு இந்த விஷயத்தில் தீவிரமாய் விசாரணை செய்து சகல தடயங்களையும் சேகரித்து சமர்ப்பிக்கும் என நான் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர் ஆசுவாசமாக.

''இதற்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியமென்ன? தலை உங்களுடையது. தன் கையை தனது தலையில் தடவுவதில் அமைச்சருக்கு என்ன இடஞ்சல் வந்துவிடப் போகிறது? '' என்று கத்தினார்கள் தொண்டர்கள்.

' தொண்டர்களே! உங்கள் பேச்சை நான் ஏற்றுக் கொள்கிறேன். தலை என்னுடையதுதான். கையும் என்னுடையதுதான். ஆனால் நமது கைகள் பண்பாட்டாலும் சட்டத்தாலும் கட்டப்பட்டுள்ளது. எனது தலையில் கையை வைத்துத் தடவி பார்க்கும் சுதந்திரம் எனக்கு இல்லை. அரசாங்கத்தில் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சட்டமிருக்கும் எதிரணியினரின் வார்த்தைகளைக் கேட்டு நான் சட்டத்தையும் அரசையும் மீற விரும்பவில்லை. நான் சபையில் இது குறித்து விளக்கம் தருகிறேன்'' என்றார் மிகப் பொறுமையோடு.

அன்று மாலை கூடியிருந்த சபையில் அமைச்சர் தனது விளக்கவுரையை ஆற்றினார். '' தலைவர் பெருந்தகையே! சபையில் எனது தலை மொட்டையடிக்கப் பட்டுள்ளதா இல்லையாவென ஒரு கேள்வி எழும்பி உள்ளது. அப்படி மொட்டையடிக்கப் பட்டிருந்தால், செய்தது யார்? இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானதாகி விடுகிறது. இந்த விஷயத்தில் அரசு எந்தவிதமான அவசர முடிவும் எடுக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு மொட்டையடிக்கப்பட்டு விட்டதா இல்லையா என என்னாலும் சொல்லவிட முடியாது. முழுமையான ஆய்வும் விசாரணையும் செய்யப் படும்வரை இது குறித்து அரசாலும் எதுவும் சொல்ல இயலாது. இது தொடர்பாக விசாரணை செய்ய நமது அரசு மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிக்கும். அந்தக் குழு இப்பிரச்சினை குறித்து தீவிர சோதனையும் விசாரணையும் செய்யும். அந்த விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை நான் இந்த சபையில் வாசித்துக் காட்டுவேன்'' என்று அமைச்சர் விளக்கம் தந்து அமர்ந்தார்.

''பல ஆண்டுகளுக்கு சோதனையும் விசாரணையும் செய்ய இது ஒன்றும் குதுப்மினார் குறித்த விவகாரமில்லையே. இது உங்கள் தலையில் வளர்ந்து உங்களால் வெட்டி எறியப்பட்டு வரும் தலைமுடி குறித்ததுதானே. இது குறித்த முடிவை விரைவில் எடுக்கலாமே?'' என்றார்கள் தொண்டர்கள்.

'' எனது தலைமுடியை குதுப்மினாரோடு ஒப்பிட்டு அவமானப் படுத்த தொண்டர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசாங்கத்தின் விசாரணை முடிவுகள் வரும் வரை தொண்டர்கள் இது குறித்து அதிகம் விவாதிக்கக் கூடாது என்பதுதான் சரி'' என்று பதிலளித்து அமர்ந்தார் அமைச்சர்.

விசாரணைக் குழு பல ஆண்டுகளாக விசாரணை செய்து கொண்டே இருந்தது. அமைச்சரின் தலையில் முடி வளர்ந்தவண்ணமிருந்தது. ஒருநாள் அமைச்சர் விசாரணைக் குழுவின் ரிப்போர்ட்டை சபையின் முன்னால் வைத்தார்.

அமைச்சரின் தலை மொட்டையடிக்கப் படவில்லை என விசாரணைக் குழுவின் ரிப்போர்ட் தெரிவித்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆனால் சபையின் இன்னொரு பக்கத்திலிருந்து '' வெட்கம்! வெட்கம்! '' என்று சத்தம் கேட்டது. அதிருப்தி கூச்சல்கள் கேட்டது. '' இது பொய். முற்றிலும் பொய். அமைச்சரின் தலை மொட்டையடிக்கப் பட்டிருந்தது'' எனக் கூச்சலிட்டனர்.
           
அமைச்சர் புன்னகைத்தபடி எழுந்து ''இது உங்களின் கற்பனையாக இருக்கலாம். இப்படி சொல்ல ஆதாரம் வேண்டும். நீங்கள் ஆதாரத்தை காட்டிவிட்டால், நான் உங்கள் பேச்சை ஒத்துக் கொள்கிறேன்'' என்றார் அமைச்சர்.
              
மேற்படி கூறிவிட்டு தனது தலையில் நீண்டு சுருண்டிருக்கும் முடியை கைகளால் தடவி விட்டார். சபை வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கத்துவங்கிவிட்டது.


ஹரிசங்கர் பர்சாயி: (1924-1995) : இந்தி இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர் ஹரிசங்கர் பர்சாயி மத்தியப் பிரதேசம் ஹொஷங்காபாத்தின் ஜாமியா கிராமத்தில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக் கழகத்திலிருந்து ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணியில் இருந்து கொண்டே எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். பின் முழுநேரம் எழுத்தாளராகி விட்டார். இவர் 'வசுடா' என்ற இலக்கிய இதழை நடட்டி வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக பத்திரிக்கையை நிறுட்டி விட்டார்.

இவர் அங்கதம் மற்றும் நகைச்சுவை உணர்வுடன் எழுதுவதற்காக பிரசித்தம் பெற்றிருந்தார். இவர் சுரண்டல் மற்றும் லஞ்சம் ஆகிய இரு விஷயங்கள் குறித்து அதிகமாக நகைப்புணர்வோடு எழுதி வந்தார். இவருடைய ' விக்லாங் ஷரதா கா தாவுர்'' என்ற கட்டுரைப் புத்தகத்திற்காக இவருக்கு சாஹித்ய அகெடமி விருது கிடைத்தது.  இவருடைய '' ஹஸ்தே ஹை, ரோதே ஹை'', ''ஜைஷே உன்கே தின் பிரே'' என்ற கதைத் தொகுப்புகளும் 'வைஸ்னவ் கி பிஸ்லாம்', 'திரிச்சி ரேகாயேன்' 'திடுர்த்தா ஹ¤வா கனதந்திரா' மற்றும் ''விக்லாங் ஷரதா கா தாவுர்'' அகிய கட்டுரைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

| | |
oooOooo
                         
 
மதியழகன் சுப்பையா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |